Pages

Tuesday, 11 February 2014

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும் அழைப்பர்.

அம்பாசமுத்திரம்

கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.

அய்யனார் சுனை

நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

நெல்லையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.

குற்றாலம்

பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

குற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

குற்றாலநாதர் கோயில்

பெரிய அருவியின் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் குற்றாலநாதர். திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகன் இவர்தான். தொலைபேசி - 04633-210138.

மாவட்ட அறிவியல் மையம்

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு இது. இந்தியாவில் உள்ள 124 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. இங்கு கடல் பற்றிய மூன்று நிரந்தரக் காட்சி சாலைகள், 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, கோளரங்கம் தற்காலிக அறிவியல் மற்றும் நாடகக் காட்சி வசதிகளும் உள்ளன.

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் . அடிப்படையில் இது புலிகளுக்கான சரணாலயம் எனினும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளும் இங்கு உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். செங்கால் தேரி வன ஓய்வகத்தில் உணவு உறைவிட வசதி கிடைக்கும். செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம்.

கிருஷ்ணாபுரம்

நெல்லையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள் கோயில் இது. இக்கோயிலின் ஆளுயர சிற்பங்கள் பிரமிப்பூட்டுபவை.

மாஞ்சோலை

நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

குறுக்குத்துறை முருகன் கோயில்

தாமிரபரணி ஆற்றிலிருந்து கிளம்பும் பனிமுட்டம் தழுவ, முருகன் கோயில் கொண்டிருக்கும் திருஉருவ மலை. இந்தப் பாறையில் இருந்துதான் 1653 ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நாங்குநரி

நெல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அழகான ஊர். சுற்றிலும் வயல்களும் பெரிய குளமும் பசுமையான காட்சிகள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் பேதமின்றி கூடிவாழும் அழகிய ஊர்.

மணிமுத்தாறு அணை

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அணைக்கட்டு. இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு அருவி இருக்கிறது. அணைக்கட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில்தான் மாஞ்சோலை எஸ்டேட் இருக்கிறது.

கழுகுமலை

சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

முருகன் கோயில்

முருகனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று நகரின் இதயப் பகுதியிலும் இன்னொன்று தாமிரபரணி நதியின் தீவுப்புறத்தில் உள்ள பாறைக் கோயிலும் ஆகும்.

அருங்காட்சியகம்

நெல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது ஒரு பல்நோக்கு தொல்லியல் அருங்காட்சியகமாகும். அனுமதி இலவசம்.

பாபநாசம்

பாவங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடம் என்பதால் இது பாபநாசம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கு கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. பாபநாசம் நீர்வீழ்ச்சி இதன் அருகில்தான் உள்ளது. நெல்லையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

நம்பி மலை

ஒரு குன்று. அதைச் சுற்றி அழகிய கிராமம். இந்தக் குன்றில் நம்பியாண்டவர் குடி கொண்டுள்ளார். மலை நம்பி என்றும் இவரை அழைக்கிறார்கள். குன்றிலிருந்து கிராமத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.

பத்தமடை

மென்மையான கைக்குள் சுருட்டும் அளவு நேர்த்தியான கோரைப்பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர். நீரோடைக் கரைகளில் நீண்டு வளரும் கோரைகளால் இந்தப் பாய் பின்னப்படுகிறது. சுவாமி சிவானந்தா இந்த ஊரில்தான் பிறந்தார்.

சாலைக் குமரன் கோயில்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள இந்தக் கோயில் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்பதற்காக 1965 இல் வெற்றி விருது பெற்றது.

கும்பருட்டி அருவி

குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு மலைத் தொடரில் இருக்கும் அருவி. இந்த அருவியை ஒட்டி நீந்துவதற்கு வசதியாகக் குளமும் உள்ளது.

பொட்டல் புதூர் தர்கா

1674 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான தர்கா. இந்தத் தர்காவின் கட்டட அமைப்பு இந்திய கட்டடக் கலையைச் சார்ந்தது. இங்கு நடக்கும் வழிபாடும்கூட இந்துக்களின் சாயலை ஒத்ததாகவே இருக்கும். இங்கு நடக்கும் கந்தூரி திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். தொலைபேசி - 04634-240566.

நெல்லையப்பர் - காந்திமதி கோயில்

நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும்தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள். தொலைபேசி - 0462 - 2339910.

சங்கரன் கோயில்

சிவனும், பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணர் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு. நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன் கோயில். தொலைபேசி - 04636-222265.

முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதன் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது. தொலைபேசி - 04364-250594.

தென்காசி - காசி விஸ்வநாதர் கோயில்

வடநாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் இது தென்னாட்டில் உள்ள காசி. தென்காசி பேருந்து நிலையம் அருகில்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கோயிலின் நீளம் 554 அடி அகலம் 318 அடி. இதன் பிரமாண்டமான கோபுரத்தை 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். 1924 ஆம் ஆண்டு பேரிடி ஒன்று தாக்கியதில் இந்தக் கோபுரம் தகர்ந்து விழுந்தது. சமீபத்தில் 168 அடி உயரத்தில் மீண்டும் அந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் 1927 ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. தொலைபேசி - 04633-222373.

திருக்குறுங்குடி

மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம். புராணங்களில் நாராயணன் வந்து இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்

திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. 1826 ஆம் ஆண்டு ரெவரன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் முருகன் குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருவிடைமருதூர்

நெல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்கு அதலநாதர் மற்றும் நரம்புநாதர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் சேர சோழ பாண்டியர்கள் மட்டுமல்லாது விஜயநகரப் பேரரசின் கட்டுமான சிற்பக் கலைகளையும் பிரதிபலிக்கும் சாட்சியாக இருந்து வருகிறது.

வளநாடு

இந்த இடத்தை மான்களின் சரணாலயமாக அரசு அறிவித்து வருகிறது. நெல்லையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் குன்றுப் பகுதியில் இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை துப்பாக்கிப் பயிற்சி நிலையம் ஒன்றும் உள்ளது.

திருவள்ளுவர் இரட்டைப் பாலம்

இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்.

வளநாடு பிளாக்பக் சரணாலயம்

தூத்துக்குடி பிளாக்பக் அருகே அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

முகவரி - மாவட்ட வனத்துறை. திருநெல்வேலி பிரிவு. கொக்கிரகுளம். திருநெல்வேலி - 627 009.

கப்பல் மாதா தேவாலயம்

நெல்லையில் இருந்து 72 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் சிறிய தேவாலயம். கோவாவைச் சேர்ந்த இறையியல் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 1903 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயம் ஒரு பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள கன்னிகா மடத்தில் சென்று இரவில் தங்கும் இளம் பக்தைகளுக்கு அங்குள்ள மாதாவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரிவதாக் கூறப்படுகிறது. ஆனால் ஓரு மெழுகுவர்த்தி கூட இந்த ஆலயத்தில் ஏற்றப்படுவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

பூலித்தேவன் நினைவகம்

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன் கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவனோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

திடீரென மயக்கமாக வருவது ஏன்? ஆபத்தும் உண்டா?

திடீரென மயக்கமாக வருவது ஏன்? ஆபத்தும் உண்டா?

ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் திடீரென தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது என்று மேசையிலேயே படுத்துவி்ட்டார்.

சக ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பொது மருத்துவ நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர் என பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பார்த்தார்கள். 

செய்யாத மருத்துவ ஆய்வு கூட பரிசோதனைகள் மிச்சமில்லை. MRI உட்பட மூளையைப் படமெடுத்துப் பார்த்துவி்டார்கள். எதுவும் பிடிபடவில்லையாம்.

மயக்கம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வயதானவர்களும் பிரஷர் குறைவாக உள்ளவர்களும் உட்கார்ந்த அல்லது படுக்கை நிலையிலிருந்து திடீரென எழுந்து நின்றால் மயக்கம் வருவதுண்டு.

திடீரென ஏற்படும் கடும் வலிகள் கூட அவ்வாறு ஏற்படுத்தலாம்.

காரணம் எது என நீங்கள் நினைத்தாலும் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணத்தைக் கண்டறிய முயல வேண்டும்.

சில தருணங்களில் மருத்துவர்களால் கூட ஒருவருக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதைத் துல்லியமாக கணடறிய முடியாதிருக்கலாம்.

கீழ் கண்டவை மயகத்தைத் தூண்டுவதற்கான முக்கய காரணிகளாக இருக்கக் கூடும் என அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் சொல்கிறது.



·         சடுதியாக எழுந்து நிற்பது.
·         கடுமையான வெப்பம் உள்ள சூழலில் தீவிரமான உடற பயிற்சி செய்தல் அல்லது கடுமையாக வேலை செய்தல்.
·         மிக வேகமாகச் சுவாசித்தல். இந்த hyperventilating என்பது நோய்களின் போதும் ஏற்படலாம், மன உளைச்சலாலும் நிகழலாம்.
·         மிகக் கடுமையான மனத் தாக்கம் அல்லது துயரம் உடலை மட்டுமின்றி ஒருவரது இரத்த அழுத்தத்தையும் பாதிக்கும்போது அவ்வாறு மயக்கம் ஏற்படுவதுண்டு.
·         சில பிரஷர் மருந்துகளை உட்கொள்ளும்போது திடீரென எழும்போது இரத்த அழுத்தம் குறைவதுண்டு. இது திடீர மயக்கத்திற்குக் காரணமாகலாம்.
காரணம் என்பதைக் கண்டறிந்து மீண்டும் நிகழ்வதைத் தடுங்கள். 

இல்லையேல் ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேர்வதுடன், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள், பணச் செலவு மற்றும் மன உளைச்சலைத் தவிர்துக் கொள்ளலாம்.
திடீர் மயக்கங்கள் சில ஆபத்தான நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

·         குறுகிய கால நேரத்திற்குள் பல தடவைகள் ஏற்படுதல்.
·         வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்படல் (களைப்பு, வாந்தி, காய்ச்சல், நித்திரைக் குறைவு போன்றவை சில உதாரணங்கள்)
·         குருதிப் பெருக்கு
·         மூச்செடுப்பதில் சிரமம்
·         நெஞ்நு வலி
·         இருதயம் வேகமாகத் துடித்தல்
·         முகம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் மரப்பது போன்ற உணர்ச்சி
மேற் கூறிய அற்குறிகள் இருந்தால் மயக்கத்திற்கு அடிப்படையான வேறு ஏதோ ஆபத்தான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். உடனடியாக மருத்துவரை காணுங்கள்

Monday, 20 January 2014

ப.ஜீவானந்தம்

ப.ஜீவானந்தம் 



பொதுவுடமை கட்சி என்றும் அழைக்கப்பட்ட சோசலிச இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ப. ஜீவானந்தம் நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் வாழ்ந்த பட்டத்தார்-உமையம்மாள் தம்பதியரின் மகனாக 21-08-1907-ம் ஆண்டு பிறந்தார்.

அந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கிய 'சொரிமுத்து என்றும் அய்யனார்' என்றும் அழைக்கப்பட்ட குல தெய்வத்தின் நினைவாக தங்களது அருமை மகனுக்கு பெற்றோர் சொரிமுத்து என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மகாத்மா காந்தியின் கொள்கைகள் இளம் வயதில் அவரை வெகுவாக கவர்ந்தது. சீர்திருத்த கொள்கைகளுடன் அந்நாட்களில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.

நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும்போதே காந்தியையும், கதரையும் பற்றிய முதல் கவிதையையும் எழுதினார்.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றியதுடன் அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்காக அழைப்பு வந்த போது காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்பு பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அன்று முதல் தனது இறுதி மூச்சு இருந்த வரை அவர் கதர் ஆடைகளையே விரும்பி அணிந்தார்.

வன்முறையில் நம்பிக்கையற்ற கொள்கை உடையவராக இருந்தபோதிலும் விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரன் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த கொடுமையை கண்டு கொதித்துப் போய் சீறி எழுந்தார். வெள்ளையர் ஆட்சிக்கெதிராக அவர் ஊர், ஊராக சென்று கண்டன கூட்டங்களில் முழங்க தொடங்கினார். எரிமலையின் சீற்றத்துக்கு நிகரான அவரது அனல் கக்கும் கண்டன உரைகள் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது.

பின்னர், பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலினைத் தமிழில் மொழிபெயர்த்தார், ஜீவா. பகுத்தறிவு தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். இதற்காக ஜீவாவைக் கைது செய்த பிரிட்டிஷ் போலீசார், அவரது கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க பொதுவுடமை கொள்கைளால் ஈர்க்கப்பட்டார்.

ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகனின் முழுநேர அரசியல் போக்கினால் அதிருப்தியடைந்த அவர்கள் ஜீவாவின் தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

தன்மானம் மிக்கவரான ஜீவாவால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க மறுத்து-குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

வ.வே.சு. அய்யர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி புரிந்தார். எனினும், அய்யரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்காத ஜீவா, அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.

வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனி பங்கேற்றவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளிலும் இவரது பங்களிப்பு இன்றியமையாதது. தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டு, சிறந்த காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்த ஜீவா, கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவரான ஜீவா, சுமார் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தார்.

அப்பழுக்கற்ற நேர்மை, தன்னலம் கருதாத தொண்டுள்ளம், எதற்கும் அஞ்சாத வைர நெஞ்சம், கொண்ட கொள்கையில் இருந்து தடம் புரளாத நெஞ்சுறுதி படைத்த ஜீவாவின் எளிய வாழ்க்கையை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்துக் கொள்ள அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓரிரு சம்பவங்களை இன்று பகிர்ந்து கொள்வது மிக பொருத்தமாக இருக்கும்.

சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் ஜீவா காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது, கட்சிக்காக அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு ஏது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே" என்றார் அந்த தோழர்.

ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

தற்கால அரசியல்வாதிகள் போலன்றி, அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் ஒருவர் மீது மற்றவர் அளவுகடந்த அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர்.

சென்னை மாகாண முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பதவி வகித்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.

பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.

ப.ஜீவானந்தத்தை பற்றி உலகத் தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் அந்நாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எழுதும் போது "பொதுவுடமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலகட்டத்தில் குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலகினார். 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார்.

அவ்வேளையில், மேடை நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. குறிப்பாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வரப்பட்டது.

புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது சட்டமன்றத்தில் ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது. 'கண்ணாடிக்கு முன்போய் நின்ற மூக்கரையன் கண்ணாடியில் தன் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்ட போது தன் உருவம் எவ்வளவு கோரமானது என்று சிந்தித்துப் பார்க்காது, கண்ணாடியை உடைத்தெறிந்தது போல, புராணங்களில் உள்ள ஆபாசத்தை எடுத்துச் சொன்னால், இதிகாசங்களில் உள்ள ஊழல்களை எடுத்துக் காட்டினால் காட்டுபவர்களின் மேல் சீற்றப்படுகிறார்கள் சிலர். (சிரிப்பு)

காரணம், அவர்கள் மனம் புண்படுகிறதாம். வாஸ்தவம். புண்படத்தானே செய்யும். ஆனால், எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா? இவ்வளவு ஆபாசமானவைகள் எல்லாம் எங்கள் மதத்தில் இருக்கின்றனவே என்று எண்ணும்போது எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா என்று கேட்கிறேன்.’ என்று நகச்சுவை ததும்பும் பகுத்தறிவு பிரசாரத்தின் மூலமாகவே அந்த மசோதாவை ஏன் எதிர்க்கிறோம்? என்பதற்கான கொள்கை விளக்கத்தை அவர் பதிவு செய்தார்.

எளிய அரசியல் வாழ்க்கைக்கு புதிய அகராதியாக வாழ்ந்து காட்டிய ப. ஜீவானந்தம் 18-01-1963 அன்று காலமானார்.

ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தத்தின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது