Pages

Monday, 20 January 2014

ப.ஜீவானந்தம்

ப.ஜீவானந்தம் 



பொதுவுடமை கட்சி என்றும் அழைக்கப்பட்ட சோசலிச இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ப. ஜீவானந்தம் நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் வாழ்ந்த பட்டத்தார்-உமையம்மாள் தம்பதியரின் மகனாக 21-08-1907-ம் ஆண்டு பிறந்தார்.

அந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கிய 'சொரிமுத்து என்றும் அய்யனார்' என்றும் அழைக்கப்பட்ட குல தெய்வத்தின் நினைவாக தங்களது அருமை மகனுக்கு பெற்றோர் சொரிமுத்து என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மகாத்மா காந்தியின் கொள்கைகள் இளம் வயதில் அவரை வெகுவாக கவர்ந்தது. சீர்திருத்த கொள்கைகளுடன் அந்நாட்களில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.

நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும்போதே காந்தியையும், கதரையும் பற்றிய முதல் கவிதையையும் எழுதினார்.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றியதுடன் அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்காக அழைப்பு வந்த போது காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்பு பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அன்று முதல் தனது இறுதி மூச்சு இருந்த வரை அவர் கதர் ஆடைகளையே விரும்பி அணிந்தார்.

வன்முறையில் நம்பிக்கையற்ற கொள்கை உடையவராக இருந்தபோதிலும் விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரன் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த கொடுமையை கண்டு கொதித்துப் போய் சீறி எழுந்தார். வெள்ளையர் ஆட்சிக்கெதிராக அவர் ஊர், ஊராக சென்று கண்டன கூட்டங்களில் முழங்க தொடங்கினார். எரிமலையின் சீற்றத்துக்கு நிகரான அவரது அனல் கக்கும் கண்டன உரைகள் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது.

பின்னர், பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலினைத் தமிழில் மொழிபெயர்த்தார், ஜீவா. பகுத்தறிவு தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். இதற்காக ஜீவாவைக் கைது செய்த பிரிட்டிஷ் போலீசார், அவரது கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க பொதுவுடமை கொள்கைளால் ஈர்க்கப்பட்டார்.

ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகனின் முழுநேர அரசியல் போக்கினால் அதிருப்தியடைந்த அவர்கள் ஜீவாவின் தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

தன்மானம் மிக்கவரான ஜீவாவால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க மறுத்து-குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

வ.வே.சு. அய்யர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி புரிந்தார். எனினும், அய்யரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்காத ஜீவா, அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.

வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனி பங்கேற்றவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளிலும் இவரது பங்களிப்பு இன்றியமையாதது. தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டு, சிறந்த காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்த ஜீவா, கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவரான ஜீவா, சுமார் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தார்.

அப்பழுக்கற்ற நேர்மை, தன்னலம் கருதாத தொண்டுள்ளம், எதற்கும் அஞ்சாத வைர நெஞ்சம், கொண்ட கொள்கையில் இருந்து தடம் புரளாத நெஞ்சுறுதி படைத்த ஜீவாவின் எளிய வாழ்க்கையை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்துக் கொள்ள அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓரிரு சம்பவங்களை இன்று பகிர்ந்து கொள்வது மிக பொருத்தமாக இருக்கும்.

சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் ஜீவா காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது, கட்சிக்காக அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு ஏது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே" என்றார் அந்த தோழர்.

ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

தற்கால அரசியல்வாதிகள் போலன்றி, அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் ஒருவர் மீது மற்றவர் அளவுகடந்த அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர்.

சென்னை மாகாண முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பதவி வகித்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.

பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.

ப.ஜீவானந்தத்தை பற்றி உலகத் தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் அந்நாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எழுதும் போது "பொதுவுடமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலகட்டத்தில் குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலகினார். 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார்.

அவ்வேளையில், மேடை நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. குறிப்பாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வரப்பட்டது.

புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது சட்டமன்றத்தில் ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது. 'கண்ணாடிக்கு முன்போய் நின்ற மூக்கரையன் கண்ணாடியில் தன் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்ட போது தன் உருவம் எவ்வளவு கோரமானது என்று சிந்தித்துப் பார்க்காது, கண்ணாடியை உடைத்தெறிந்தது போல, புராணங்களில் உள்ள ஆபாசத்தை எடுத்துச் சொன்னால், இதிகாசங்களில் உள்ள ஊழல்களை எடுத்துக் காட்டினால் காட்டுபவர்களின் மேல் சீற்றப்படுகிறார்கள் சிலர். (சிரிப்பு)

காரணம், அவர்கள் மனம் புண்படுகிறதாம். வாஸ்தவம். புண்படத்தானே செய்யும். ஆனால், எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா? இவ்வளவு ஆபாசமானவைகள் எல்லாம் எங்கள் மதத்தில் இருக்கின்றனவே என்று எண்ணும்போது எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா என்று கேட்கிறேன்.’ என்று நகச்சுவை ததும்பும் பகுத்தறிவு பிரசாரத்தின் மூலமாகவே அந்த மசோதாவை ஏன் எதிர்க்கிறோம்? என்பதற்கான கொள்கை விளக்கத்தை அவர் பதிவு செய்தார்.

எளிய அரசியல் வாழ்க்கைக்கு புதிய அகராதியாக வாழ்ந்து காட்டிய ப. ஜீவானந்தம் 18-01-1963 அன்று காலமானார்.

ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தத்தின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது

Saturday, 9 November 2013

ஒழுக்கமின்றி படிக்கும் மாணவர்கள் ஒரு வித தவறான ஹீரோ இமேஜ் உருவாக்கி கொள்கிறார்கள்

ஒழுக்கமின்றி படிக்கும் மாணவர்கள் ஒரு வித தவறான ஹீரோ இமேஜ் உருவாக்கி கொள்கிறார்கள்,மேலும்...


Wednesday, 6 November 2013

வல்லவனுக்கு வல்லவன் வல்லபாய்

தற்போது நாட்டில் 28 மாநிலங்கள்,7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இது, இவர் இல்லையென்றால் இருந்திருக்காது. சிதறுண்டு கிடந்தஇந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு
வந்தவர். அவர் தான் இந்தியாவின் "இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல். இன்று இவரது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக், 31ல் படேல் பிறந்தார்.22வது வயதில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, வேலை பார்த்து பணம் சேர்த்தார். "பாரிஸ்டர்' பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார். வறுமை காரணமாக கல்லூரியில் உடன் படித்த மாணவர்களின் புத்தகங்களை கடன் வாங்கி படித்து, இரண்டே ஆண்டுகளில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். 

சுதந்திர போராட்டத்தில்:

படேல் வழக்கறிஞராக பல போராட்டங்களில் ஈடுபட்டார். பின் காங்.,கட்சியில் இணைந்து, சுதந்திரபோராட்டத்தில் களமிறங்கினார். காந்திஜியின் உப்பு சத்யாகிரக போரட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது.இதனால் சிறை சென்றார்.காந்திஜி கொண்டு வந்த ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததுடன், மகன், மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் தூக்கி எறிந்தார். 1931ல் கராச்சியில் நடந்த மாநாட்டில் காங்., கட்சி தலைவரானார். 1942, ஆக.,9ல், வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். உடல்நலன் மோசமாக இருந்த போதும், போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக மீண்டும் சிறையில்அடைக்கப்பட்ட இவர், 1945 ஜூன் 15ல்விடுதலையானார். 

1946 காங்., கட்சி தலைவர்: :

தேர்தலில், காந்திஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேருவுக்கு வழி விட்டு, வல்லபாய் படேல் ஒதுங்கினார். 

"ஒரே இந்தியா' எப்படி சாத்தியம்:

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நாடு 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய அரசுக்கு சவாலாக இருந்தது. இப்பொறுப்பு உள்துறை அமைச்சராக இருந்தபடேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும் இணைக்கப்பட்டன. படேலின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது.

போர்க்கொடிக்கு பதிலடி:

காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. ""இந்தியாவுடன் இணைந்து விடுங்கள்'' என்ற படேல், மவுன்பேட்டன் கோரிக்கையை, ஐதராபாத்தை ஆட்சி செய்த, முஸ்லிம் மன்னர் நிஜாம் நிராகரித்தார், மேலும் இந்தியாவுக்கு எதிராக"தனி படையை' திரட்டினார். நிஜாமுக்கு பாடம் கற்பிக்க படேல் முடிவு செய்தார். "ஆப்பரேஷன் போலோ' என்ற ராணுவ நடவடிக்கையை 1948, செப்.13ம் நாள் துவக்கினார். ராணுவம் நுழைந்த மூன்றே நாட்களில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின் ஐதராபாத் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

"கடமை முக்கியம்':

படேல் வழக்கறிஞராக இருக்கும் போது, ஒரு நபருக்காக கோர்ட்டில்வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது படேலுக்கு ஒரு தந்தி வந்தது. அதை பார்த்த பின், பைக்குள் வைத்துவிட்டு வழக்கு விசாரணையை தொடர்ந்தார். விசாரணை முடிந்த பின், உடன் இருந்தவர்கள் படேலிடம், ""உங்களுக்கு ஒரு தந்தி வந்ததே. என்ன விஷயம்'' என கேட்டனர். அதற்கு படேல், ""என் மனைவி இறந்து விட்டார்'' என பதில் அளித்தார். ""ஏன் நீங்கள் உடனே செல்லவில்லை'' என வருத்தத்துடன் அவர்கள் கேட்டனர். அதற்கு படேல், ""என் மனைவி இனிமீண்டும் வரப் போவதில்லை. ஆனால் குற்றமற்ற ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியமாகப்பட்டது,'' எனபதிலளித்தார். இதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் நெகிழ்ந்து போயினர். எந்த அளவு அவர் கடமை தவறாமல் இருந்தார் என்பதற்கு இது உதாரணம்.

இரும்பு மனிதர் ஆனது எப்படி:

குஜராத்தின் தென்மேற்குப்பகுதியில் இருந்த ஜூனாகாத், பாகிஸ்தானுடன் இணைய விரும்பியது. பூகோளஅடிப்படையில் அது இந்தியாவுடன் இணைவது தான்நியாயம் என மவுண்ட்பேட்டன் தெரிவித்தார்.இதற்கு ஜூனாகத் அரசர் மறுக்கவே, படேலுக்கு கோபம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் இருந்த சிறு ராணுவத்தை அனுப்பி, அதிரடியாகஜூனாகத்தை இணைத்தார். எல்லையோரம் இருந்த ஜோத்பூர், ஜெய்சல்மர் ஆகியவை பாகிஸ்தானுடன் இணைய "கொல்லைப்புறம்' வழியாக பேச்சு நடத்திக் கொண்டிருந்தன. விடுவாரா படேல், அப்பகுதி மக்கள் விருப்பப்படி, அவற்றையும் இந்தியாவுடன் இணைத்தார். காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். ஆட்சி செய்த மன்னர் இந்து.எங்கு இணைந்தாலும் பிரச்னை எனக் கருதி தனியாக செயல்பட விரும்பினார். இதற்கிடையே காஷ்மீர் பழங்குடியினருக்கு, ஆயுதங்கள் வழங்கி மன்னருக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டியது பாக்., இதையடுத்து மன்னர்,இந்திய உதவியைக் கேட்க, படேல் படைகளைஅனுப்பினார். அங்கு இந்திய படைகளுக்கும் பாக்., படைகளுக்கும் போர் ஏற்பட்டது.தீரமிக்க படேல் அமைச்சராக இருந்ததால், இந்திய ராணுவம் அபார வெற்றி பெற்று,காஷ்மீரையும் இந்தியா உடன் இணைத்தது. அப்போது, காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு பாக்., வசம் இருந்தது.இன்றளவும் இப்பகுதி "ஆசாத் காஷ்மீர்' என்ற பெயரில் பாக்., வசம் இருக்கிறது. பல சமஸ்தானங்களை இணைத்து, ஒரே இந்தியாஉருவாக காரணமாக இருந்ததால், படேல், "இரும்பு மனிதர்' என பெயர் பெற்றார்.

Wednesday, 30 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-03


                    இந்தியாவில் மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்த காலத்தை பற்றி எழுத்து வடிவிலான சான்றுகள் ஏதும் இல்லை. கல்வெட்டுக்களோ, குறிப்புக்களோ எழுதும் பழக்கமும் இல்லாமல் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கொண்டு ஓரளவுக்கு வரலாற்றை படைத்துள்ளனர் தொல்லியல் நிபுணர்கள். இந்தியாவில் சொல்லிகொல்லும்படியாக முதன் முதலில் தோன்றியது சிந்துசமவெளி நாகரிகம். உலகில் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் மெசபடோமியா மற்றும் எகிப்திய கலாசாரத்திற்கு இணையானது நமது சிந்து சமவெளி நாகரிகம். ஆனால் மேசபடோமியர்கள் போல் சிந்து சமவெளி நாகரிகத்தினர் வரலாற்றுக்கு எந்த ஒரு எச்சங்களையும் விட்டு செல்லவில்லை. இதுவே நமது சிந்து சமவெளி நாகரிகம் உலக அளவில் பெருமையாக பேச படைத்ததற்கு ஒரு காரணம் ஆகும். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தய வரலாற்றை பார்த்தால் அதில் கர்காலமும், உலோக காலமும் அடங்கும். கற்கால மனிதர்களும் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி பார்ப்பதற்கு முன்பு கற்கால மனிதர்கள் பற்றி பார்ப்போம்.
கற்கால மனிதர்களின் வரலாற்றை நான்கு வகையாக பிரிக்கின்றனர்:
1.பழைய கற்காலம்(கி.மு10,000 முன்பு)
2.இடை கற்காலம்(கி.மு10,000- கி.மு6000)
3.புதிய கற்காலம்(கி.மு6000- கி.மு4000)
4.உலோக காலம் 
       பள்ளி பருவத்திலிருந்தே வரலாற்றில் இவை பற்றி நிறைய படித்திருக்கிறோம். இருப்பினும் இதுவரை நாம் அறியாத சில தகவல்களுடன் இக்காலகட்டங்களை விரிவாக பார்ப்போம். இன்றைய நாகரீக வளர்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது கற்காலத்தில் தான்.முக்கியமாக செய்ய வேண்டியவை எவை செய்ய கூடாதவை எவை என்ற பகுத்தறிவை மனிதன் பெற்றான்.

பழைய கற்காலம்(palaeolithic or old stone age):

             பழைய கற்கால மனிதர்களின் வரலாறு 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தோன்றுகிறது. பழைய கற்கால மனிதர்களை உணவுகளை சேகரிப்போர் என வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கின்றனர். குரங்குகளை போல பல வகையான் மனித வகையினர் இக்கால கட்டத்தில் வாழ்ந்தனர். மனிதன் கல்லால் ஆன ஆயுதங்களை கண்டுபிடித்தான். குவார்ட்ஸ் போன்ற கடுமையான கற்களை கொண்டு கூர்மையான ஆயுதங்களை செய்து விலங்குகளை வேட்டையாடினர். மாமிசம் பழங்கள் தானியங்கள் இவர்களின்                     முக்கிய உணவாக இருந்தது. மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடிய விலங்குகளை நெருப்பில் இட்டு உண்டான் மேலும் இரவு நேரங்களில் குளிரில் இருந்து  தன்னை காத்துக்கொள்ளவும் நெருப்பை பயன்படுத்தினான்.
 இக்காலகட்டத்தில் சில இடங்களில் நியாண்டர்தால் வகை மனிதர்களும், ஹோமோசபியன்(நாம்) மனிதர்களும் இணைந்தும், சில இடங்களில் தனித்தனியாகவும் வாழ்ந்துள்ளனர். கற்கால மனிதர்கள் எந்த மொழியையும் பயன்படுத்தவில்லை மேலும்
தகவல் பரிமாற்றம் தொடர்பான விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

மத்தியபிரதேஷ மாநிலம் bhimbetka என்ற இடத்தில கற்கால மனிதர்களின் 30,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித நடமாட்டம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. முந்தய பதிவில் பார்த்த மனித இனங்களில் ஒன்றான homo erectus வகை மனிதர்களின் ஓவியம் அவை.

இடை கற்காலம்(Mesolithic or middle stone age):
                    மனித நாகரிகத்தின் அடுத்த கட்ட முனேற்றம் இடை கற்காலம் ஆகும். இடை கற்காலம் கி மு 10,000 இல் இருந்து கி.மு 6,000 வரை உள்ள காலம். இக்காலாகட்டதில் நாடோடிகலாக  திரிந்த மனிதர்கள் குழுக்களாக இணைந்து வசதியான ஓரிடத்தில் வாழ தொடங்கினர். கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர்.
 நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ் போன்ற பல வகையான மனித இனங்கள் படிப்படியாக அழிந்தது இக்காலகட்டத்தில் தான். இடை கற்காலத்திலும் மனிதர்களின் மொழி பற்றி சான்றுகள் ஏதும் இல்லை.  இடை கற்கால எச்சங்கள் குஜராத்தில் Langhanj, மத்திய பிரதேசத்தில் Adamgarh, ராஜஸ்தான், பீகார் போன்ற பகுதிகளில்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதிய கற்காலம்(Neolithic or new stone age):
                       கற்காலத்தின் கடைசி காலம் புதிய கற்காலம் ஆகும். புதிய கற்காலம் கி.மு 6,000 இல் இருந்து கி.மு 4,000 வரை உள்ள காலம் ஆகும். மனித நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க முனேற்றம் நடைபெற்றது இக்காலகட்டத்தில் தான். இகாலகட்டதில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். விவசாயம் செய்தனர். மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் பல பகுதிகளில் இக்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகாரில் siraant, உத்திர பிரதேசத்தில் பிளான் சமவெளி, தென்இந்தியாவில் கர்நாடகத்தில் Maski, Brahmagiri, Hallur
மற்றும் Kodekal. தமிழ்நாட்டில் payyampalli, ஆந்திரபிரதேசத்தில் utnoor போன்ற பகுதிகளில் புதிய கற்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

கல் ஆயுதங்களை பயன்படுத்தி வந்த மனிதன் உலோகங்களை கண்டெடுத்தான் பின்பு அவற்றை உருக்கி உலோகத்தினாலான கருவிகளை செய்தான். படிப்படியாக கல் ஆயுதங்களுக்கு விடை கொடுத்து உலோகத்தினாலான ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தான். இது உலோக காலம் ஆகும். கற்காலத்தை தொடர்ந்து வருவது உலோக காலம் ஆகும். உலோக காலத்தை பற்றியும் மனிதர்களின் அடுத்தடுத்த வளர்சிகள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Tuesday, 22 October 2013

வீரன் தீரன் சின்னமலை

வீரன் தீரன் சின்னமலை


வீரம் வீரம் என்கிறார்களே, அதற்கான அசல் அடையாளமாக திகழ்ந்த தமிழகத்து வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்  (ஜூலை 31). 

காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர், ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும், தானியமும் வசூலித்துக் கொண்டுபோனபோது, அதைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார். 

தீர்த்தகிரி என்பதே இவரின் உண்மையான பெயர். இந்தச் சம்பவத்துக்கு பிறகே சின்னமலை என்பது அவரின் பெயரானது. வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றார். தனது படைகளை திரட்டி வந்துசின்னமலையில் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் போரிட்டார். வெற்றி தீரன் சின்னமலை பக்கமே! மீண்டும் படை திரட்டி வரலாம் என மைசூர் போனால் அங்கே திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்திருந்தார். மனிதர் தீரன் சின்னமலையை நோக்கி நேசக்கரம் நீட்டினார். 

கொங்குப் பகுதியில் பழைகோட்டை பாளையத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த இவரின் ஆட்சி ஆங்கிலேய அரசுக்கு உறுத்தலாக இருந்தது. நடுவில் ஒரு பாளைய வீரன் நமக்கு சவாலாக இருப்பதா என பொங்கினார்கள். ஆங்கிலேய எதிர்ப்பு படையில் திப்புவோடு இவர் கைகோர்த்து நின்றது இன்னமும் உறுத்தியது. 

1799-ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் தீர்த்தகிரியின் படைகள் மாளவல்லி என்ற இடத்தில் ஆங்கிலேயப்படையுடன் மோதியது. திப்பு வீர மரணம் அடைந்து மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது. வேலப்பன் எனும் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய ஆள் ஆங்கிலேயரிடம் பிடிபட்டான். அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து தகவல்களை சின்னமலைக்கு அனுப்பி கொண்டிருந்தான்.

தீர்த்தகிரியை கைதுசெய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை ஆங்கிலேய அரசு  அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்து நொய்யல் ஆற்றில் வெள்ளையர் படையை சிதறடித்து கேப்டன் மக்கீஸ் கானின் தலையை துண்டித்து வீரம் காட்டினார் சின்னமலை. 

ஆங்கிலேயர்கள் மீண்டும் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது. மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை. ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன். 

இவரின் கோட்டையை தகர்க்க பீரங்கி படையோடு ஆங்கிலேய அரசு வருவதை வேலப்பன் மூலம் அறிந்து கோட்டையை விட்டு வெளியேறினார் அவர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானதாக அது இருந்தது. அந்தக் கோட்டையில்தான் வெடிமருந்து, துப்பாக்கிகளை சின்னமலையே தயாரித்தார். கடைசிக் கட்டத்தில் பீரங்கிகளும் தயாரித்தார். 

பழனிமலைத் தொடரில் கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும். நல்லப்பன் விலை போனான். சாப்பிட மட்டும் அவர் வீட்டுக்கு வரும் சின்னமலையை கைது செய்ய ஆங்கிலேய அதிகாரிகள் அவன் வீட்டுக்கு கீழே சுரங்கம் அமைக்க ஒத்துக்கொண்டான். சின்னமலை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள். சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார். 

பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பன் அனுப்பிய ஓலைச்சுருளை இவர் ஆங்கிலேயர் பிடிக்க வந்தபொழுது நெருப்பில் இட்டு எரித்த பொழுது ஒரு பகுதி சிக்கி வேலப்பனை அடையாளம் கண்டு விசாரிக்க, "என் நாட்டுக்காக இப்படி ஒரு செயல் செய்ததற்கு பெருமைப்படுகிறேன்!" என்றார். அவரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய படை. 

வீரர்கள் மற்றும் துரோகிகளால் நிரம்பிக்கிடக்கிறது வரலாறு. தீரன் சின்னமலையை நினைவுகூர்வோம்.

Tuesday, 15 October 2013

பாலசுப்ரமணியர் கோவில், பெரிய குளம், தேனி

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

தேனி மாவட்டத்தின் பெரிய குளத்தில் உள்ள பாலசுப்ரமணியர் கோவில், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். முருகப் பெருமானுக்கான இந்த கோவிலை கட்டியவர் வலிமை மிகுந்த சோழ மன்னரான ராஜேந்திர சோழராவார்.
ஆறு முகங்களையுடைய முருகப் பெருமான், தன்னுடைய துணைவியாருடன் இந்த கோவிலில் காட்சியளிக்கிறார். இந்த முருகப்பெருமானின் சிலையானது பூமியைத் துளைத்து கட்டப்பட்டிருக்கிறது.
2000 ஆண்டுகள் பழமையான கோவிலாக கருதப்படும் பாலசுப்பரமணியர் கோவில் தமிழ் நாட்டில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக உள்ளது.
இந்த கோவில் வராக நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது. ஒருமுறை ராஜேந்திர சோழ மன்னர், ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த போது அதனை தேவையில்லாமல் கொன்று விட்டதாகவும், பின்னர் அந்த பன்றியின் குட்டிகளுக்கு முருகப் பெருமான் பாலூட்டிக் கொண்டிருந்ததை ராஜேந்திர சோழர் காண நேரிட்டதாகவும், அதையொட்டியே தனது தவறை உணர்ந்த ராஜேந்திரர் அதே இடத்தில் முருகனுக்கு கோவில் ஒன்றை கட்ட உத்தரவிட்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த கதை அப்படியே கற்சிற்பங்களாக இக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளது. பாலசுப்ரமணிய கடவுளின் இந்த கோவில் வடநாட்டின் காசி கோவிலையொத்ததாக கருதப்படுகிறது.

தேனி - காற்றில் நறுமணம் சேர்க்கும் நகரம்!

  • மேலும்
தமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க மிகவும் ஏற்ற இடமாகும்.
தேனி புகைப்படங்கள் - மேகமலை ஹில்ஸ் 
Image source: commons.wikimedia.org
பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய இந்த புதிய மாநகரம் அதன் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளுக்காக மிகவும் பொருள் பெற்றது.
நீங்கள் தேனியில் இருக்கும் போது மென்மையான துண்டுகள், ருசியான மாம்பழங்கள், அருமையான பருத்தித் துணிகள், மனம் கமழும் ஏலக்காய், காரமான மிளகாய்கள், புத்துணர்வூட்டும் காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரோக்கியான கிரீன் டீ ஆகியவற்றை வாங்கவோ, அனுபவிக்கவோ மறந்து விடாதீர்கள்.

தேனி மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள்

தேனியில் வைகை அணைக்கட்டு, சோத்துப்பாறை அணைக்கட்டு மற்றும் சண்முகா நதி அணைக்கட்டு ஆகிய புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. மேலும் சுருளி நீர்வீழ்ச்சி,கும்பக்கரை நீர்வீழ்ச்சி மற்றும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய அற்புதமான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளின் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன.
தேனியில் பல்வேறு கோவில்களும், புனிதத் தலங்களும் இருப்பதால் புனிதப் பயணம் செல்பவர்களுக்கும் மிகவும் விருப்பமான சுற்றுலாதலமாக தேனி இருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் குச்சானூர், தீர்த்த தொட்டி, கௌமாரியம்மன் கோவில், தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாலசுப்ரமணியர் கோவில் ஆகிய இடங்களில் வழிபட்டு செல்வார்கள். மேகமலைப் பகுதிகள், போடி மெட்டு மற்றும் பரவச உலகம் தீம் பார்க் ஆகியவை இங்குள்ள பிற பார்வையிடங்களாகும்.

தேனியின் திருவிழாக்காளும், கண்காட்சிகளும்

தேனி மாவட்டத்தில் பொங்கல், சிவராத்திரி மற்றும் மாசிமகம் ஆகிய பண்டிகைகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்த திருவிழாக் காலங்களில் தேனியில் நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

தேனிக்கு சுற்றுலா வர சிறந்த பருவம்

தேனிக்கு வருடம் முழுவதும் வந்து செல்ல முடியுமென்றாலும், திருவிழாக்காலங்களில் வந்து செல்வதற்கு நீங்கள் திட்டமிட்டால் அது பலனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த காலகட்டங்களில் வெப்பநிலை குளிர்சியானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருப்பதால், சூரியனின் சுட்டெரிக்கும் வெய்யிலை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.

தேனியை அடையும் வழிகள்

தேனி நகரம் பிற முக்கிய நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் பாதைகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தேனிக்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையம் மதுரை விமான நிலையமாகும்.