Pages

Friday, 4 October 2013

முல்லைப் பெரியாறின் வரலாறு

முல்லைப் பெரியாறின் வரலாறு
தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முல்லைப்பெரியாறு அணை, தன்னகத்தே பல அற்புதமான தகவல்களை சுமந்துகொண்டு இருக்கிறது.




பதினெட்டாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்த அபாயகரமான சூழலில் தமிழக மக்களை காப்பதற்காக மேற்கு தொடர்ச்சி மலையில் குமுளி அருகே தேக்கடி வனப்பகுதியில் 1895-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட அணைதான் முல்லைப்பெரியாறு அணை ஆகும்.

இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னிகுயிக்கின் சீரிய முயற்சியால் உருவான இந்த அணையால் தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. லட்சக்கணக்கான மக்கள் பசி, பட்டினியில் இருந்து தப்பினார்கள்.


முல்லைப்பெரியாறு அணை மற்ற அணைகளை போன்று இன்றி வித்தியாசமான வடிவமைப்பை கொண்டதாகும். இந்த அணை கேரள மாநில வனப்பகுதியில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு, வல்லக் கடவு பகுதியை நோக்கி செல்லும் காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-v76t780ctjaUQExkCVkzUTFZe0JdwZMNTofeQIKrYysecsaTMsxvlWJQ0JiJm7EOGX_4W5ZZ_p6bCsFj6WYxDgK-azZMsG_A5QxE_VGC0yLzyn2uwX30_WTZ4BZHU8vUP98lbPBYkNk/s320/MPPV03.jpg
 இங்கு கட்டப்பட்டுள்ள மதகு பகுதியில் கடந்த 1943-ம் ஆண்டுக்கு முன்பு வரை அணை நீர்மட்டம் 152 அடி என்ற முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே தண்ணீர் கேரள மாநில பகுதிக்கு மறுகால் பாய்ந்து சென்றுள்ளது. ஆனால் தற்போது அணை பலவீனம் அடைந்து விட்டதாக கூறி கேரள அரசு அணை நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த மறுத்து வருவதால் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனே உபரிநீர் கேரள மாநிலம் வழியாக அரபிக்கடலில் வீணாக கலக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

பொதுவாக ஒரு அணை என்றால் மதகு பகுதியில் இருந்து தான் பாசனத்திற்கு தண்ணீர் எடுக்கப்படும். ஆனால் இந்த அணையின் கட்டமைப்புபடி ஒரு மலையின் மற்றொரு பகுதியில் காட்டாற்றை மறித்து அணை கட்டினாலும், எதிர் திசையில் உள்ள பகுதிக்கு மலையை குடைந்து கால்வாய் அமைத்து தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த கால்வாய் கேரள மாநிலம் குமுளி பகுதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் பகுதியில் மட்டும் தான் பொதுமக்களின் பார்வையில் படும்படி செல்கிறது. மற்றபடி இந்த கால்வாய் பூமிக்குள் அடியில்தான் குகை அமைத்து அதன் வழியாக தமிழக எல்லை வனப்பகுதியில் கண்ணகி கோட்டத்திற்கு கீழே போர்பை என்ற தடுப்பணையை வந்தடைகிறது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் பெரியாறு-வைகை நீர்மின் நிலையத்திற்கும், இரைச்சல் பாலம் வழியாக முல்லைப்பெரியாறாக பாய்ந்தோடுகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvz65_44j9nZVBb_eO-1yvp8cT4jZ_w3pWpOW7GP4dzyZG5ErpmAsEbYNTU7dKvAfWWtyMe_Qv9othPJP3Kyz9OCKzF2C7pXFkFBJXjpSs4IkPGThdH8vqf7I2z0UxzqLKHjwWrXkQ26w/s320/MPPV06.jpg
 இந்த அணையில் உச்ச நீர்மட்டம் 152 அடி என்றாலும் 110 அடி அளவில் தண்ணீர் நிரம்பினால் தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் எடுக்க முடியும். அந்த உயரத்தில் இருந்துதான் மலையை குடைந்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. எனவே 110 அடியில் இருந்து 152 அடி வரை உள்ள சுமார் 42 அடி உயரத்தில் நிரம்பும் தண்ணீரே கடந்த காலங்களில் தென் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்தது.

அந்த அணை கடைசியாக 1943-ம் ஆண்டு ஜுலை மாதம் 9-ந் தேதி தான் தனது முழு கொள்ளளவான 152 அடியை எட்டியது. அப்போது அணை நீர்மட்டம் 152.50 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 764 கன அடிநீர் வரத்தும் காணப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் அணையில் இருந்து உபரி நீராக 9 டி.எம்.சி. தண்ணீர் கேரள மாநிலம் வழியாக வெளியேறி அரபிக்கடலில் வீணாக கலந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு கேரள அரசு மிகப்பெரிய அளவில் இடுக்கி அணையை முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் கட்டியது.

இந்த இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையை விட 5 மடங்கு பெரியதாகும்.

இடுக்கி அணைக்கு அதிகளவில் நீர்வரத்து தேவை என்பதால், பெரியாறு அணை பலம் இழந்து விட்டது, உடையும் அபாயத்தில் உள்ளது, அதனால் கேரள மாநிலத்தில் உள்ள வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, தேங்கங்கால், கருங்குளம், கருந்துறவி, சப்பாத்து, உப்புத்துறை, மேரிகுளம், ஆரடி, இடுக்கி போன்ற பகுதிகள் பாதிக்கும் என்று கேரள அரசு புலம்பத் தொடங்கியது. இதனால் பெரியாறு அணையில் நீர்மட்டம் 152 அடிக்கு பதிலாக நீரை தேக்கும் அளவை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள மாநிலத்தில் போராட்டக்குழுக்கள் குரல் கொடுக்க தொடங்கின.

இதனால் 1979-ம் ஆண்டு மத்திய நீர்வள கமிஷன் இந்த பிரச்சினையில் தலையிட்டது. அப்போது அணையை பலப்படுத்தும் பணி முடிவடையும் வரை 136 அடி தண்ணீர் தேக்க தமிழக-கேரள மாநில அரசுகள் முடிவெடுத்தன. 16 அடி தண்ணீர் தேக்கும் அளவு குறைக்கப்பட்டதால் தென் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்ட தமிழக விவசாயிகள் பாசன வசதி குறைந்து விவசாய இழப்பும், வேலை இழப்பும் மின்சார உற்பத்தி இழப்பும் என ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டமும் ஏற்பட்டது.

அணையை பலப்படுத்துகின்ற பணியை தொடங்கி காங்கிரீட் தொட்டி அமைத்தல், கேபிள் ஆங்கரிங் செய்தல், பிரதான அணையின் கைப்பிடி சுவரை உயர்த்துதல், 3 கூடுதல் நீர்போக்கி அமைத்தல், கான்கீரிட் முட்டுச்சுவர் எழுப்புதல், கருவிதளம் அமைத்தல், மேல் விசை குறைப்பு துளையிடுதல், சிற்றணை மற்றும் மண் அணைகளை பலப்படுத்துதல் ஆகிய 7 வகை பணிகள் நடந்தன. பல சிரமங்களுக்கு பிறகு அணை பலப்படுத்தும் பணி நிறைவு பெற்றது.

ஆனால் கேரள மாநில அரசு ஒப்பந்தத்திற்கு மாறாக நீர்வரத்து பகுதியில் கெவிடேம், பம்பா, ஆணைத்தோடு அணை ஆகியவற்றை கட்டி, நீர்வரத்தை திருப்பிக்கொண்டது. 

இந்நிலையில் 1995-ம் ஆண்டு நீர்வள கமிஷன், அணையை பார்வையிட்டு அணைப்பலப்படுத்தும் பணி சிறப்பாக இருக்கிறது என்று கூறியது. ஆனால் கேரள அரசு இதை கண்டுகொள்ளவே இல்லை. இப்போதும் பல நிபுணர்கள் எவ்வளவோ சோதனைகளை நடத்திக் காட்டிய பிறகும், ``முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து 20 லட்சம் பேர் ஜலசமாதி ஆகிவிடுவார்கள்'' என்று கீறல் விழுந்த ரிக்கார்டு போல கூறிக்கொண்டே இருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை சாதாரண மண், சிமெண்டு, கல், இரும்பு ஆகியவற்றால் மட்டும் கட்டப்பட்டது அல்ல. அந்த அணையின் ஒவ்வொரு அங்குலத்திலும், வரலாற்றில் இதுவரை காணாத தன்னலமற்ற தியாகம், பிரதிஉபகாரம் எதிர்பார்க்காத மனிதத்தன்மை, காற்றுகூட புக முடியாமல் இருந்த அடர்ந்த காட்டுக்குள் உயிரைப் பணயம் வைத்துச் சென்று பாடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தம் கலந்த வியர்வை ஆகியவற்றைக் காணலாம்.

இத்தகைய புனிதமான வரலாற்றை சுமந்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணை பற்றிய மேலும் பல விவரங்களை அடுத்த ஞாயிற்றுக்கிழமை காணலாம்.


அணையில் உச்ச நீர்மட்டம் 152 அடி என்றாலும் 110 அடி அளவில் தண்ணீர் நிரம்பினால் தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் எடுக்க முடியும். அந்த அளவில் இருந்துதான் மலையை குடைந்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. எனவே 110 அடியில் இருந்து 152 அடி வரை உள்ள சுமார் 42 அடி உயரத்தில் நிரம்பும் தண்ணீரே கடந்த காலங்களில் தென் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது 136 அடி தண்ணீர் மட்டுமே தேக்கப்படுவதால் சுமார் 26 அடி உயரத்தில் நிரம்பும் தண்ணீரே தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது.

***

முல்லைப்பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தம்

முல்லைப்பெரியாறு அணை கேரளா பகுதியில் இருந்தாலும் தமிழக அரசு அந்த அணையை 999 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த குத்தகை ஒப்பந்தம் உருவானது எப்படி?

சுவாரசியமான தகவல்கள் இதோ...

* முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டபோது, அணை அமைந்துள்ள கேரள பகுதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு சொந்தமானதாக இருந்தது. திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் கேரளாவில் ஆட்சி செய்து வந்தார். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

* தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவை இணைந்த மதுரை மாவட்டத்தின் பிரதான நதியான வைகை பெரும்பாலும் வறண்டு கிடந்ததால் விவசாயம் முடங்கிப் போனது. கடும் பஞ்சம் தலை விரித்தாடியது. அதேநேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியான பெரியாறு யாருக்கும் பயன் இல்லாமல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வழியாக சென்று அரபிக்கடலில் கலந்து வீணாகிக் கொண்டு இருந்தது.

* பெரியாறு ஆற்று தண்ணீரை அணை கட்டி தேக்கி, தமிழக பகுதிக்கு திருப்பி வைகை ஆற்றுடன் கலக்கச் செய்தால்தான், விவசாயம் பெருகி பஞ்சம் நீங்கும் என்று ஆங்கிலேயர் ஆட்சி கணித்தது. ஆனால் முல்லைப் பெரியாறு நதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வழியாக ஓடிக்கொண்டு இருந்ததால், சமஸ்தானத்தின் அனுமதி பெறாமல், இந்த அணை திட்டம் பற்றி ஆய்வு செய்யவோ, அணையை கட்டவோ ஆங்கிலேய அரசால் முடியவில்லை.

* திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அனுமதியை பெற ஆங்கிலேய அரசு பலவிதமான ராஜதந்திரங்களை கையாண்டது. இறுதியில் சமஸ்தானத்தின் திவான் மாதவராவ் மூலமாக 1862-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி அனுமதியை பெற்றது. ஆனாலும் திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கும் முன்பு பல நிபந்தனைகளை விதித்தது.

* இந்த நிபந்தனைகளின்படி, முல்லைப்பெரியாறு அணை திட்டத்தை நிறைவேற்றும்போது, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஏற்படும் இழப்பிற்கு ஈடாக 6 லட்சம் ரூபாயை ஆங்கிலேயே அரசு தரவேண்டும். விவசாயத்தை பெருக்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இரு மாநில அரசுகளும் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் நிபந்தனை விதித்தது.

* இந்த நிபந்தனைகளை தளர்த்துவது குறித்து சமஸ்தானத்துடன் ஆங்கிலேய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பெரியாற்று தண்ணீர் மூலம் கிடைக்கும் வருமானத்தின் நிகரலாபத்தை பங்கிட்டுக்கொள்ள ஆங்கிலேய அரசு சம்மதித்தது. ஆனால் இழப்பீட்டு தொகையை தர விரும்பவில்லை.

* 1877-78-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வரலாறு காணாத கொடிய பஞ்சம் ஏற்பட்டதால் முல்லைப்பெரியாறு அணையை உடனடியாக கட்டியாக வேண்டும் என்ற நெருக்கடி ஆங்கிலேயே அரசுக்கு ஏற்பட்டது. இதனால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தி பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர்.

* பெரியாறு அணை கட்டினால் கேரள அரசு பகுதியிலும் விவசாயம் பெருகும் என்று மகாராஜாவை நம்ப வைத்து புதிய குத்தகை ஒப்பந்தத்தை உருவாக்க சம்மதிக்க வைத்தனர். இதன் பயனாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள ஆங்கிலேய பிரதிநிதி ஜான் சைல்டு கேளிங்டன் 1882-ம் ஆண்டில் பெரியாறு பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, குத்தகை ஒப்பந்தத்தை உருவாக்கினார்.

* இந்த ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருந்த நிலையில் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந் தேதி மகாராஜா விசாகம் இறந்து விட்டார். இதனால் சமஸ்தானத்தின் ஆங்கிலேய பிரதிநிதி ஜான் சைல்டு கேளிங்டன் இந்த குத்தகை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி திவான் மாதவராவுக்கு கடிதம் எழுதினார்.

* குத்தகை ஒப்பந்தத்தை ஆய்வு செய்த திவான் புதிய நிபந்தனைகளை விதித்தார். இதன்படி, ஆங்கிலேய அரசு ரூ.7 லட்சம் நஷ்டஈடும், மேற்கு கடற்கரையில் ஆங்கிலேயர்களுக்கு சொந்தமாக இருந்த அஞ்சன்கோ, தங்கச்சேரி ஆகிய 2 நகரங்களை சமஸ்தானத்துக்கு எழுதி தர வேண்டும் என்று புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது.

* ஆனால் ஆங்கிலேய அரசு அஞ்சன்கோ, தங்கச்சேரி நகரங்களை தரமுடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியாக லண்டன் நகரில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த ஆங்கிலேயர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சம்மதிக்க வைத்தார்.

* இதையடுத்து வரலாற்று சிறப்புமிக்க முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி கையெழுத்தானது.

* இந்த ஒப்பந்தத்தில் ஜான் சைல்டு கேளிங்டன் லண்டன் சார்பாகவும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புதிய திவான் வெங்கட்ராமராவ் திருவிதாங்கூர் மகாராஜா சார்பாகவும் குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

* இந்த ஒப்பந்தத்தின்படி, பெரியாறு பகுதியை சுற்றி உள்ள 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆங்கிலேய அரசாங்கம் குத்தகைக்கு பெற்றுக்கொண்டது. இதன்படி ஒரு ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் 8 ஆயிரம் ஏக்கருக்கான 40 ஆயிரம் ரூபாயை ஆங்கிலேய அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு கொடுக்க வேண்டும். இந்த பணத்தை, திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம். 

* பெரியாறு பகுதியில் மீன் பிடிக்கவும், அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டிக் கொள்ளவும், போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆங்கிலேயர்களுக்கு இந்த ஒப்பந்தம் உரிமை அளித்தது.

* முல்லைப்பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு, அதாவது கி.பி.2885-ம் ஆண்டு வரை செல்லுபடி ஆகும்.

* 2885-ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதி ஆனதும் மீண்டும் 999 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.

* இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், 1882-ம் ஆண்டின் சிவில் நடைமுறை சட்டம் அல்லது அதற்கு பின்னால் இயற்றப்படும் சட்டத்தின் அடிப்படையில், இந்த ஒப்பந்தம் தொடரும்.

* ஆங்கிலேயர்களுக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட முல்லைப்பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தம் இன்றும் தொடருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கேரளா அரசும், தமிழ்நாடு அரசும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருகின்றன.

* ஆங்கிலேய அரசு 8 ஆயிரம் ஏக்கருக்கும் சற்று கூடுதலான நிலத்தை குத்தகைக்கு பெற்றதால் குத்தகை பணமாக 42 ஆயிரத்து 963 ரூபாய் 13 அணா 6 பைசாவை சமஸ்தானத்துக்கு செலுத்தியது.

* தமிழக அரசும் இப்போது குத்தகை தொகையை உயர்த்தி கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது.
நன்றி : தினத்தந்தி

No comments:

Post a Comment