வள்ளலார் வரலாறு
வள்ளலார் அவதாரம்
தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூரில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் மாலை 5:30 மணிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் இராமையா பிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகவாக பிறந்தார். இராமையா பிள்ளை கிராமக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். சின்னம்மையார் பொன்னேரிக்கு அருகில் சின்னக்காவனத்தில் பிறந்து வளர்ந்தவர். இராமையா பிள்ளையின் முதல் ஐந்து மனைவியர் ஒருவர் பின் ஒருவராக இறக்கவே ஆறாவது மனைவியாக சின்னம்மையார் வாழ்க்கைப்பட்டார்.
சென்னைக்குக் குடி பெயர்தல்
பெருமானாரின் எட்டாவது மாதத்தில் இராமையா பிள்ளை காலமானார். சின்னம்மையார் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தான் பிறந்த ஊரான சின்னக்காவனத்தில் உள்ள தன் தாய் வீட்டுற்குச் சென்றார். சில காலம் அங்கு இருந்த பின்னர் அனைவரும் சென்னைக்குக் குடி பெயர்ந்தனர்.
ஓதாதுணர்தல்
ராமலிங்கர் பள்ளிப் பருவம் எய்தியதும் தமையனார் சபாபதி பிள்ளை தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் தமது ஆசிரியரான மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார். ராமலிங்கரின் அறிவையும், திறனையும் கண்ட மகாவித்துவான் இவர் ஒதாமல் உணர வல்லவரென்று உணர்ந்து கற்பிப்பதைக் கைவிட்டார். ராமலிங்கர் எவ்வாசிரியரிடத்தும் பயின்றதில்லை. இறைவினிடமே ஓதாது உணர்ந்தார்.
சிதம்பர தரிசனம்
பெருமானார் சிறு வயதில் தாயாரோடு சிதம்பரம் சென்று வழிபட்டார். பின்னர் அனைவரும் சிதம்பர ரகசிய தரிசனத்திற்காக திரைமுன் வந்து நின்றனர். தீஷிதர் திரையை விலக்க அனைவரும் சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பெருமானார் அதைக் கண்டு உணர்ந்தார். பெருமானார்க்கு சிறுவயதிலேயே சிதம்பர ரகசியம் விளங்கிற்று.
இளம் கவிஞர்
பெருமானார் விளையாட வேண்டிய வயதில் தினந்தோரும் கோவில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு சிவனையும் முருகனையும் பற்றி பாடத் தொடங்கினார்.
வீட்டில் வழிபாடு
தமையனார் சபாபதிக்கு தம்பி ராமலிங்கம் தம்மிடமும், தன் ஆசிரியர் சபாபதி முதலியாரிடமும், கல்வி கற்காததும், வீடு தங்காது கோவில் குளங்களைச் சுற்றிக் கொண்டு பாடித் திரியும்போக்கு சற்றும் பிடிக்கவில்லை. பலமுறை சொல்லியும் கேளாமையால் தம்பி இனி வீட்டில் உணவருந்தக் கூடாதெனவும், வீட்டிற்கு வரக் கூடாதெனவும் சொல்லி விட்டார். ராமலிங்கமும் வீட்டிற்கு வராமல் சிறுவர்களை சேர்த்துக்கொண்டு நாள் முழுவதும் கோவில் குளங்களைச் சுற்றி வந்தார். அன்புமிக்க அண்ணி பாப்பாத்தி அம்மாள் சிறுவன் ராமலிங்கத்தை கைவிடுவதற்கு மனமில்லாமல் சில சிறுவர்களை அனுப்பி ராமலிங்கத்தை வரவழைத்து கணவருக்குத் தெரியாமல் ஒரு வேளையாவது உண்டு போகும்படி அன்போடு சொல்லி அனுப்புவார். ராமலிங்கரும் அண்ணியின் அன்பைப் புரிந்து கொண்டு பிற்பகலில் வந்து அண்ணியாரிடம் உணவுண்டு செல்வார். சபாபதி பிள்ளை இதை அறிந்தும் அறியாதவர்போல் இருந்துவிட்டார். பின் ஒரு நாள் தந்தையின் திதி வந்தபோது வீட்டில் பலரும் உணவு உண்ண, தம்பி உணவு உண்பதற்கு இல்லையே என சபாபதி பிள்ளை வருந்தினார். பின் மாலையில் வந்து அண்ணியாரால் உண்பிக்கப்படுவார் என்று எண்ணி ஒருவாறு மனம் தேறினார். ராமலிங்கர் மாலையில் உணவு உண்ணுங்கால் அண்ணியார் கண்ணீர் வடிப்பதைக் கண்டு காரணம் கேட்டார். அண்ணியாரும் “உன்னைத் தான் நினைத்து வருந்துகிறேன். அண்ணார் சொற்படி கேட்டு வீட்டில் அடங்கி படிப்பதாயிருந்தால் இவ்வளவு துன்பம் இல்லையே; சொந்த வீட்டில் கள்வன்போல வந்து உண்ண வேண்டியதிருக்கிறதே” என்று வருந்திக் கூறினார். அதைக் கண்டு வருந்திய ராமலிங்கமும் வீட்டில் தங்கிப் படிப்பதாகவும், வீட்டு மாடியில் தனக்கென ஓர் அறை ஒதுக்க வேண்டும் என்றும் அண்ணியிடம் வேண்டினார். அண்ணியாரும் அண்ணனிடம் சம்மதம் பெற்று அதை ராமலிங்கத்திடம் தெரிவித்தார். ராமலிங்கம் கைநிறைய புத்தகங்களோடும், பூசைப் பொருட்களோடும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் புகுந்தார். உண்ணும் நேரம்தவிர மற்ற நேரங்களில் அறையினுள் சென்று தாளிட்டுக் கொண்டு தெய்வவழிபாட்டில் கழித்தார்.
கன்னிச் சொற்பொழிவு
தமையனார் சபாபதிப் பிள்ளையின் சொற்பொழிவிற்கு கையேடு படிப்பவர் ஒரு சில நாட்கள் வராததால் அந்நாட்களில் பெருமானார் கையேடு படித்தார். ஒரு நாள் தமையனார் நோய்வாய்ப்பட பெருமானார் சொற்பொழிவாற்றச் செல்ல நேர்ந்தது. அவரும் மாலையில் சொற்பொழிவை ஆரம்பித்து இரவு நெடு நேரம்வரை திருஞானசம்பந்தர் புராணத்தை பக்தியோடு விளக்கினார். அவர்தம் தெய்வ அறிவை உணர்ந்த அனைவரும் அன்றுமுதல் பெருமானாரையே சொற்பொழிவாற்ற வேண்டினர்.
பெருமானார் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டது
பெருமானார் ஒன்பதாவது அகவையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். இதை “என்னை ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டுகொண்ட அருட்கடலே”, “என்னை அறியா பருவத்தாண்டுகொண்ட என் குருவே” முதலிய அவருடைய பாடல்களின் மூலம் அறியலாம். அவருடைய பன்னிரண்டாம் அகவையில் முறையான ஞான வாழ்க்கை தொடங்கினார் என்பதை “பன்னிரண்டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே” என்ற அவருடைய பாடலின்மூலம் அறியலாம்.
திருவொற்றியூர் வழிபாடு
பெருமானார் நாள்தோறும் திருவொற்றியூர் சென்று வழிபட்டு வந்தார். சுமார் இருபத்தி மூன்று ஆண்டு காலம் அவ்வாறு செய்து வந்தார்.
அவருடைய இருபத்தி ஆறாவது அகவையில் 1849-ஆம் ஆண்டில் தொழுவூர் வேலாயுத முதலியார் பெருமானாரின் மாணாக்கர் ஆனார். பெருமானின் புலமையில் நம்பிக்கையற்ற வேலாயுதனார் தாமே கடிய நடையில் நூறு செய்யுள்களை இயற்றி இவை சங்கச் செய்யுள்கள் பழைய ஏடுகளில் காணப்பட்டன என்று பெருமானிடம் காட்டினார். அவற்றைக் கண்ணுற்ற பெருமானார் “இவை சங்கப் பாடல்கள் அன்று, சங்கப் பாடல்களில் இவ்வளவு குற்றமிரா. இவை பொருளிலக்கணம் தேறா கற்றுக்குட்டி பாடியவை” எனக் கூறினார். இதைக் கேட்ட வேலாயுதனார் நாணி உண்மையைக் கூறி பெருமானிடம் சரணடைந்தார்.
திருமணம்
பிள்ளைப் பருவத்திலேயே மூவாசையையும் முற்றும் துறந்து துறவொழுக்கம் பூண்ட பெருமானார் இல்வாழ்வை விரும்பவில்லை. உற்றார் வற்புறுத்தலால் தமக்கை உண்ணாமுலை அம்மையாரின் மகள் தனம்மாளை மணந்து கொண்டார். பெருமானார் தொட்டு தாலி கட்டினாரேயன்றி இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை.
நூல்கள் பதிப்பித்தல்
1851-ஆம் ஆண்டு தமது இருபத்தியெட்டாவது அகவையில் ஒழிவிலொடுக்கம் என்னும் நூலைப் பதிப்பித்தார். 1856-ல் தொண்டை மண்டல சதகம் என்னும் நூலையும், 1857-ல் சின்மைய தீபிகை என்னும் நூலையும் பதிப்பித்தார். அது மட்டுமல்லாது மனுமுறைகண்ட வாசகம் (1854), ஜீவகாருணிய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களையும் எழுதினார்.
மருத்துவர்
அய்யா ஒரு மருத்துவ மேதையும் கூட, நானூற்றி எண்பத்தைந்து மூலிகைகளுக்கு விளக்கங்களும், மருத்துவ குறிப்புகளும் அளித்துள்ளார்
சென்னை வாழ்வை நீத்து கருங்குழியில் உறைதல்
தமது முப்பத்தைந்தாம் அகவையில் 1858-ஆம் ஆண்டில் பெருமானார் சென்னை வாழ்வை நீத்துத் தலயாத்திரையாகப் புறப்பட்டு வழியில் உள்ள ஸ்தலங்களையெல்லாம் வழிபட்டு தில்லையை அடைந்தார்கள். அங்கே கண்ட வேங்கட ரெட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க பெருமானார் கருங்குழிக்குச் சென்றார். பெருமானார் அவரின் விருப்பத்திற்கேற்ப அவரது இல்லத்திலேயே தங்கினார். அது முதல் 1867-ல் வடலூரில் தருமச்சாலையை ஏற்படுத்தும்வரை கருங்குழியே பெருமானார்க்கு உறைவிடமாக ஆயிற்று.
மக்களுக்காக வாழ்ந்த வள்ளற்பெருமான்
சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் நெறியை ஏற்படுத்தி அதைப் பரப்ப 1865-ல் பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவினார். 1867-ல் திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் அச்சிடப்பட்டு வெளியாயின.
கடவுளின் அருளை எவ்வாறு பெறக்கூடுமெனில் ஜீவகாருண்ணிய ஒழுக்கதினால் பெறக்கூடுமல்லாது வேறு எவ்வழியிலும் பெறக்ககூடாது. எந்த வகையிலும் ஆதாரமில்லாத எழைகளுக்கு உண்டாகின்ற பசி என்னும் ஆபத்தை நிவர்த்தி செய்வதே ஜீவகாருண்ணியத்தின் முக்கிய லட்சியம். அதன்படி 23.05.1867-ல் அற்றார் அழிபசி தீர்க்கும் வண்ணம் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார். அன்று வள்ளற்பெருமான் காட்டிய வழியில் இன்றும் ஜீவகாருண்ணியத் தொண்டு நடந்து வருகிறது.
1871-ஆம் ஆண்டு சத்திய ஞான சபை கட்டத் தொடங்கப்பட்டது. 25-1-1872 தை 13 வியாழக்கிழமை பூச நாளில் முதன்முதலாக சபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது.
வள்ளற்பெருமான் 1870-முதல் 1874-ல் சித்திபெறும்வரை மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் இருந்தார்.
சன்மார்க்க வேதமாகிய “அருட்பெருஞ்சோதி அகவல்” 1596 அடிகள் கொண்டு ஒரே இரவில் சன்மார்க்கப் பெரும்பதியான வள்ளற்பெருமானால் மேட்டுக்குப்பத்தில் 18-04-1872 அன்று அதிகாலை 12 மணி முதல் காலை 5 மணிக்குள் இயற்றப்பெற்று அருளப்பட்டது.
தோத்திரத்திற்குத் தோத்திரமாகவும், சாத்திரத்திற்குச் சாத்திரமாகவும், சமரச சன்மார்க்க வேதமாகவும் அமையப் பெற்றது பெருமானின் அகவல்.
அருட்பெருஞ்சோதி அகவல் ஆறு திருமுறைகளின் சாராம்சமாக அமைந்து பெருமானின் அடியார்களுக்கும் மற்றும் உலக மக்களுக்கும் சமரச சுத்த சன்மார்க்க பெருநெறியாகவும் அருட்பொதுமறையாகவும் திகழ்கின்றது.
மஞ்சள், வெள்ளை ஆகிய இரு நிறங்கொண்ட சன்மார்க்கக் கொடியை ஏற்றி மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 22-10-1873 ஐப்பசித் திங்கள் ஏழாம் நாள் செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு முதன்முதலாகக் நீண்ட உபதேசம் ஒன்றை செய்தருளினார். அவ்வுபதேசம் மகாவுபதேசம் என்றும் பேருபதேசம் என்றும் வழங்கப்படுகிறது.
மரணமில்லாப் பெருவாழ்வு
சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே. சாகாதவனே சன்மார்க்கி என்பது வள்ளற்பெருமானின் உபதேசம். பெருமானார் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் மூவகை தேக சித்தியையும் பெற்றவர். தேக சித்தி பெற்றார் உடம்பு நிலத்தில் விழாது. அவை வெளியாய் அருளில் கலக்கும். அவர்கள் இறைவனோடு இரண்டறக் கலப்பர். அவர்களுக்கு இனி பிறப்பு இல்லை. இப்பிறப்பே இறுதிப் பிறப்பு. இனியோரு தேகம் எடுப்பதில்லை. இதுவே நித்திய தேகம். நித்திய தேகம் பெற்ற வள்ளற்பெருமானார் ஸ்ரீமுக ஆண்டு தைத் திங்கள் 19-ஆம் நாள் 30-1-1874 வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணிக்கு சித்தி வளாகத்திருமாளிகையில் தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதியானார்.
பெருமானாரின் பெருமைகள்
தமிழ்நாட்டில் மக்களுக்கு முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியும், முதியோர் கல்வியை ஏற்படுத்தியும், மும்மொழிப் பாடச் சாலை நிறுவியும், முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் பெருமை சேர்த்துள்ளார் நம் பெருமானார். தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தையும், மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கம் நிறுவி அதில் ஒரு தனிக் கொடி, தனி மந்திரம், தனிச் சபையையும் அமைத்தவர் பெருமானார்.

No comments:
Post a Comment