Pages

Thursday, 5 September 2013

வ.உ.சி வாழ்வும் பணியும் – பாகம் 2

அரசியல் நகர்வுகள் என்றுமே பல நிகழ்வுகளின் பின் விளைவாகவே அமைந்து விடுகிறது. சுதேசிக்கப்பலின் செயல் வடிவத்திற்கு அல்லும் பகலும் உழைத்தார். நிறுவனத்தின் ஏனைய இயக்குணர்களுடன் மனக்கசப்பும் வந்தது. குறுகிய காலம் விலகி இருந்தார். பின்னர் மீண்டும் கப்பல் நிறுவனத்தின் செயற்பாடுகளில் முனைப்பு கொண்டார். இது வேளையில் சூரத் பிளவிற்குபின் சுதேசி இயக்கத்தின் வளர்சிக்கும் , திலகரின் தலைமையிலான புதிய கட்சிக்கும் மக்கள் ஆதரவு தேடி வ.உ.சி அவர்கள் திரு. சுப்ரமண்யசிவா அவர்களுடன் தூத்துக்குடி மற்றும் நெல்லையிலும் அரசியல் கூட்டங்களை நடத்தினார். இது சமயங்களில் சிவா அவர்கள் சிதம்பரனார் வீட்டிலேயே தங்கினார். வெள்ளையருக்கு சிவா- சிதம்பரம் கூட்டு, எரிச்சலை ஏற்படுத்தியது. தூத்துக்குடி பத்மநாப ஐயங்கார் மற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியார் இவரகளுடன் இணைந்து பல அரசியல் கூட்டங்கள் முழக்கமிடப்பட்டன. அனைத்தும் மாற்றார் பொருளை பயன்படுத்தல் கூடாது. சுதேசிகளின் உற்பத்திகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே. இதன் பின்விளைவு தொழிலாளர் செயலூக்கம்.
கோரல் ஆலை வேலை நிறுத்தம் : ( இதுவே பின் நாளில் மதுரை கோட்சு நிறுவனமாக அம்பாசமுத்திரம் சென்றது )
புகை விட்ட சுதேசிக்கனல், நூற்பாலையில் கொழுந்துவிட்டது. ஆம், சுதேசிக்கப்பல் கொண்டு, வெள்ளையர் கண்களில் உப்பு நீர் வரச்செய்த சிதம்பரனாரின் ஒவ்வொரு செயற்பாடுகளும், கதிரவன் உறங்காத – அகண்ட வெள்ளைப் பேரரசின் கண்களில், தூக்கத்தை கெடுத்தது. வங்கத்தை கூறு போட்டால், துணைக் கண்டத்தில் ஒரு அரசியல் குழப்பத்துடன் ஆட்சியை நகர்த்தலாம் என்ற கனவை தென் கோடியில் கலைத்து, வெள்ளையனின் பேராசையை சிதைத்த பெருமை, சிதம்பரனாருக்கே சேரும்.
கோரல் ஆலைத்தொழிலாளர்கள் பொருளியல் கோரிக்கைக்காக 1908ம் ஆண்டு பிப்ரவரி – 27 வேலை நிறுத்தம் செய்தது, வெள்ளையனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. கொடுத்ததை வாங்கிக்கொண்டு, வெந்ததை தின்று வாழ்ந்த ஊழியர்களுக்கு இத்தனை நெஞ்சுரம், சிதம்பரனார் அன்றி யார் தருவார் ? தொழிலாளரின் உறுதி கண்டு சிதம்பரனார் வியந்தார். அவர்களின் வாழ்வாதாராங்களுக்கு மாற்று திட்டமும் பொருள் உதவியும் திரட்டினார். வ.உ.சி தலைமையில் ஆலை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. மார்ச்சு மாதம் 7 ம் நாள் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இந்த நாளுக்கு காத்திருந்தது வெள்ளை ஏகாதிபத்தியமும் இந்திய எடுபிடி அதிகார வர்க்கமும்.
British India Steam Navigation – பாண்டிக்கடலில் மூழ்கிக்கொண்டிருக்க, மற்றொரு வெள்ளையர் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது – பிரித்தானியருக்கு மானப்பிரச்சினை மட்டும் அல்ல, இனி இந்தியாவில் வனிகம் நடத்தும் வாய்ப்புகள் இல்லாமலே போய்விடும் அவலம் கண்டு மிரண்டனர். இனிமேலும் சிதம்பரனாரின் செயற்பாடுகளை தடுக்காவிட்டால் இந்த தீ எங்கும் பரவி, மூழ்கிய கப்பலிலேயே நாடு திரும்பும் நிலைக்கு வந்து விடுவோம் என்று அஞ்சினர்.
1908 – மார்ச்சு 9ம் நாள் : விபின் சந்திர பாலரின் விடுதலை நாளை  “சுயராஜிய தினமாக” அறிவித்தார் சிதம்பரனார். தூத்துக்குடியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கும், விழாவிற்கும் ஏற்பாடு செய்தார். சிவா, சிதம்பரம், பத்மநாப ஐயங்கார் ( மூவருக்கும் ) ஆகியோருக்கு தடை உத்திரவு  (144) பிறப்பித்தார், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஞ்ச் துரை. இதனால் தூத்துக்குடியில் முதல் நாள் சொற்பொழிவு நடத்திவிட்டு மார்ச்சு – 9 அன்று நெல்லைக்கு புகை வண்டியில் மூவரும் வந்து பிற்பகலில் ஆட்சியர் விஞ்சினை சந்தித்தனர். இங்கு விஞ்ச் துரைக்கும் சிதம்பரனாருக்கும் நடந்த உரையாடலை பாரதியார் தனது பாடல் வரிகளில் படம்பிடித்து காட்டுகிறார்.
[ குறிப்பு :- இந்தப்பாடல் வெள்ளை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. அதுவே பாரதியார் புதுவைக்கு நாடு கடந்த பின், "இந்தியா" இதழில் வெளியிட்டார். பாடல்கள் -38 மற்றும் 39. ]
விஞ்ச் துரை கேள்வி : “நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் – கனல் மூட்டினாய், வாட்டி உன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன் – வலி காட்டுவேன் “…..(பாடல் – 38)
வ.உ.சி மறு மொழி : ” சொந்த நாட்டிற் பரர்க்கடிமைசெய்தே துஞ்சிடோம் – இனி அஞ்சிடோம் எந்த நாட்டினுமிந்த அநீதிகள் ஏற்குமோ ? – தெய்வம் பார்க்குமோ ?…..இதயத்துள்ளேயிலங்கும் மகாபக்தி யேகுமோ ? – நெஞ்சம் வேகுமோ ?…. ( பாடல் – 39 )
இங்கு பொதுக்கூட்டம் நிகழாது என்பதற்கு உறுதி வழங்கச்சொன்னார் விஞ்ச். ஆனால் மூவரும் மறுத்தனர். அன்றைய தூத்துக்குடி சுயராஜிய தின கொண்டாட்டம் நிகழவில்லை. கால தாமதமானதால் பொருணை ஆற்றங்கரையில் மூவரும் விபின் சந்திர பாலரின் விடுதலையை பொது மக்கள் சூழ கொண்டாடினர். இதனை எதிர்பாராத வெள்ளையர் காவற்படை, நிகழ்விடம் செல்லும் முன் கூட்டம் கலைந்தது. வெள்ளையருக்கு ஏமாற்றம். மறு நாள் மார்ச்சு – 10 அன்று மீண்டும் தூத்துக்குடியில் கைவிடப்பட்ட பொதுக்கூட்டத்தை நிகழ்த்தினார். அலைகடலும் தலைகடலும் சங்கமித்தன. ஓயாத அலைகள், வெள்ளையன் நெஞ்சில் மோதின. கூடிய கூட்டம், மூன்று தலைவர்களையும் வழி அனுப்ப புகை வண்டி நிலையத்திற்கு நகர்ந்தது. காவல் துறையின் கெடுபிடியை கண்டு ஒரு சலசலப்பு எழுந்தபோது, சிதம்பரனாரின் கையசைத்த வேண்டுகோளுக்கு கட்டுப்பட்ட ஆர்ப்பரிக்கும் மக்களை கண்டு வியந்து வாயடைத்து நின்றன வெள்ளையர் படை. சிவா – சிதம்பரம் என்ற மாபெரும் மக்கள் சக்தியின் ஆற்றல் கண்டு அரண்ட உளவுப்படை செய்தி அனுப்பியது.
மூவர் கைதும் கொழுந்து விட்ட நெல்லையும் :
பின்னர் நெல்லை வந்த தலைவர்கள், மாவட்ட ஆட்சிதலைவர் விஞ்ச் துரையினை சந்தித்தனர். குற்றவியல் சட்டம் 107 ன் கீழ் வழக்கு தொடர்வதாக அறிவித்தார். மார்ச்சு 12ம் நாள் மூவரும் கைதாகி பாளையம்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செய்தி தீயாக படர்ந்தது. தூத்துக்குடிக்கும் மோதியது. அன்று இரவில் இருந்தே நெல்லை மக்கள் ஆங்காங்கு நின்று தலைவர்கள் கைது குறித்து பேசுவதும் வெள்ளையர் போக்கிரித்தனம் பெருகுவது குறித்தும் பேசினர். மக்களின் உள்ளக்குமுறல் அவர்கள் உறக்கத்தை கலைத்தது. அன்று இரவு தூத்துக்குடியில் மக்கள் தெருக்களில் வந்தேமாதரம் என்று முழக்கமிட்டதை சுதேச மித்திரன் பதிவு செய்துள்ளது.
மார்ச்சு – 13, காலையில் நகரெங்கும் மக்கள் கூடினர். இதன் தோற்றம், தலைவன் இல்லாத தொண்டர்களின் ஆதங்க நிலை என்று நினைத்தது வெள்ளை அரசு. நெல்லை ரயிலடியில் கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து நின்றது. குதிரைவண்டிக்காரர்கள் வண்டி ஓட்டவில்லை. வியாபாரிகள் கடை திறக்கவில்லை. சாலையில் துப்புரவு செய்ய ஊழியர்கள் இணங்க வில்லை. உடல் உழைத்து உயிர் வளர்த்த பாமர தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. முடிதிருத்துபவர் அன்று ஒரு செயலுக்கும் முன்னெடுக்கவில்லை. அன்றாட தொழில் அனைத்தும் படிப்படியாய் முடங்கின. அடித்தள மக்களின் மனதில் பற்றிய தீ, கொழுந்து விட காத்திருந்தது. மக்களின் கேள்வி தலைவர்கள் எங்கே ? இணைந்த சில ஆயிரம் மக்கள் ஒன்று கூடி ரயிலடியில் இருந்து முதலில் இந்து கல்லூரியில் நுழைந்தது. மக்கள் வெள்ளத்தை கண்ட கல்லூரியின் வெள்ளை முதல்வர் உயிர் பிழைக்க பக்கத்தில் உள்ள பாரி நிறுவனத்திற்கு தப்பினார். மாணவர்கள் இணைந்த பின் மக்கள் வெள்ளம் சர்ச்சு மிஷன் கல்லூரிக்கு (C.M.S.College) சென்று முதல்வரிடம் கல்லூரியை மூடச்சொன்னது. இதை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர். கதவுகள், சாளரம் அணைத்தும் நொறுங்கின. இதனை அடுத்து கூடுதல் காவற்படைக்கு பாளையம்கோட்டைக்கு செய்தி அனுப்பியது மாவட்ட நிர்வாகம்.
மூவர் உள்ளிருக்க பகைவர் பார்த்திருக்க நாம் வாளாவிருக்கலாமோ ? என்று கூட்டம் நகரில் நுழைந்தது.
இப்போது நகர மன்ற கட்டிடம் நோக்கி விரைந்த மக்கள் திரள் அங்கு அலுவலக ஆவணங்களை மண்ணெணய் ஊற்றி கொளுத்தியது. அந்த கட்டிடத்தின் சுவரும் இடிந்து விழுந்தது. அடுத்து அஞ்சலகம் சென்ற அஞ்சாத கூட்டம், தீயிட்டு, தந்திகம்பிகளை அறுத்தது. நெல்லை நகர மன்றத்திற்கு சொந்தமான மண்ணெண்ணெய் கிடங்கிற்கு வைத்த தீ தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மேல், முன்னை இட்ட தீயோ? பின்னை இட்ட தீயோ? இல்லை அன்னை இட்ட தீயோ? என்று ஆர்ப்பரித்து எரிந்தது. சிவா – சிதம்பரம் என்ற மக்கள் திலகங்களுக்கு இன்னல் என்றால், அனையோம் என்று, கொக்கரிக்கும் வெள்ளையருக்கு ஆர்பரித்து கரிந்து முடிந்தது.
ஏவல் துறையாக இருந்த காவல் துறையில் உள்ளே நுழைந்த மக்கள் படை, அங்கு ஒரு காவலர் தாக்கப்பட்டு மற்ற ஆவணங்கள், கத்திகள்,குண்டுகள் அடங்கிய ஒரு பெட்டி ஆகியவை சேதப்படுத்தப்பட்டது. மேலும் காவலில் இருந்த கைதிகள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். வந்தே மாதரம் என்ற கூட்டுக்குரல் வின்னைப்பிளக்க, அந்த மக்கள் கைகளில் இருந்த கற்கள் தெருவிளக்குகளை கன்னம் வைத்தது. குற்றமிலா மக்கள் கூட்டம் குறிபார்த்து தடம் பதித்தது. மாவட்ட துணை நீதிமன்றம் சூழப்பட்டு விடுமுறை விடப்பட்டது.
பரணி பாடாத தரனி புகழும் நெல்லைப்போர் :
புற நானூற்றில் பரண் அமைத்து போர்களத்தை படம்பிடிக்க மூவேந்தர்கள் களம் கொடுத்தனர். ஆனால் இன்று தீதில்லா மக்கள் கூட்டம் தொடுத்த பெரும்போரை கவியாக வடித்தெடுக்க மூன்று தலைவர்களும் சிறை கண்டதால், எழுதுவார் இல்லாமல் விடுபட்ட மாபெரும் போர்க்களம் தான் நெல்லை சீமை. இதனை, நிர்வாகம் கை நழுவி நிலை குலைந்த வெள்ளை வல்லாதிக்கம் “திருநெல்வேலிக்கலகம்” என்று கருப்பு மையினால் வரலாற்றில் திரித்து எழுதி பதித்தது. நடைபெற்ற மக்கள் போராட்டம், மக்களால் தலைவர்களை சிறை மீட்க தொடுக்கப்பட்ட போர். நீதிமன்றத்தை அடுத்து காவல் நிலையம் எதிரில் இருந்த மருத்தவமனை நோக்கி திரும்பியது. வெள்ளையர்கள் நடக்கின்ற விபரீதத்தை தாமதமாய் புரிந்து கொண்டனர். ஆம் சினம் கொண்ட மக்கள் படையின் கையில் மாவட்ட நிர்வாகம் வீழ்வதை உணர ஆரம்பித்தது. இந்த சினம் கொண்ட புயல், பாளையம் கோட்டை சிறைக்கோட்டத்தை மையமாக கொண்டதை உணர நேர்ந்த போது சிறப்பு ஏவல் படையான, காவல் படை துப்பாக்கிகளுடன் ஆட்சியர் L. M. Wynch தலைமையில் சீறிப்பாய்ந்தது.” நஞ்சினை ஒத்த விஞ்ச்” என்று அண்ணல் சிதம்பரனார், தனது வரலாற்றில் சொல்லாட்சி கொடுத்த இந்த கொடுங்கோலன் தான் சுடுவதற்கு ஆணையிட்டான். போர்கருவி ஒன்றில்லாத மக்கள் படையினை, வல்லாதிக்க வெறியர்களும், அவர்தம் இந்திய எடுபிடிகளும், வரலாறு பிழைபடாமல் வேட்டையாடும் நாடகத்தை அரங்கேற்றம் செய்தன. முதலில் வானத்தை நோக்கி ஒரு Buck shot ஒன்று சுடப்பட்டது. அதன் பின் மீண்டும் Buck shot எனப்படும் வெற்று வேட்டுகள் மக்களை நோக்கி சுடப்பட்டது. இதன் பின்னர் தான் துப்பாக்கி குண்டுகளை கொண்டு இரண்டு வேறு இடங்களில் சூடு நடத்தப்பட்டது. ஒன்று பெரிய கோயிலை நோக்கி செல்லும் பாதையிலும், மற்றொன்று அரசு மருத்துவமனை அருகே, காவற்படையினை கண்ட மக்கள் அங்கு தீ வைக்க முயற்சி செய்த போதும். இந்த இடத்தில் தான் ஒரு விந்தை மிகு நிகழ்வு நடந்தது. துப்பாக்கி கொண்டு மக்களை வேட்டையாடிய காவற்துறையினரைப்பார்த்து மக்கள், நீங்களும் நம்மவர்கள் தானே? இந்த வெள்ளையர்களை சுடுங்கள் ! என்று வேண்டுகோள் விடுத்தனர். இதுவும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் நான்கு பொது மக்கள இறந்தனர். அதில் இருவர் தலையிலும்,நெற்றியிலும் கொண்டு பாய்ந்தது காவற்படையின் வெறியாட்டத்தை விளக்கும் விதமாக இருந்தது. துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிர் குடித்து பலர் மீது வெற்று வேட்டு எனப்படும் குண்டடி செய்தும் தான் நெல்லைப்போரினை வெள்ளைப்படை கட்டிற்குள் கொண்டுவந்தது.
தொடர் வேட்டையும், பழி போடும் இழி வழக்கும் :
Buck shots எனப்பட்ட வெற்று வேட்டுகளின் குண்டடி பட்டவர்களை அடுத்த ஐந்து நாட்களில் காயம்பட்ட அடையாளத்தை வைத்து தேடித்தேடி கைது செய்தது. இவர்கள் யாவரும் கலகம் செய்த ராஜ துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டு “திருநெல்வேலி தீயிட்ட கேசு” என்று தனி நீதி விசாரணை உத்தரவிட்டது. அரசு ஊழியர்களை கொண்டு பொது மக்களை அடையாளம் காணும் பணியும் நடை பெற்றது. அரசு ஊழியர்கள் கை காட்டியவர்கள் எல்லாம் குற்றவாளிகளே. இதில் மாவட்ட நீதிமன்ற எழுத்தர் ஒருவரும், அங்கு சிப்பந்தியாக பணிபுரியும் கடை நிலை ஊழியரும் கடைசிவரை யாரையும் அடையாளம் காட்டாததால் கொடுங்கோலன் விஞ்ச் இருவரையும் பணியிடை நீக்கம் செய்தான். அவர்களும் ராஜ துரோகிகளாகவே கருதப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிய தகவல் இல்லை.
மறு நாள் நெல்லையை அடுத்த தச்சநல்லூரிலும் பெரும் மக்கள் எழுச்சி நடை பெற்றது. அங்கும் மக்கள் அரசு நிலையங்களை தாக்கினர். இதுவும் தண்டகாவல் அமைக்கப்பட்டதின் குறிப்புகள் – சான்றில் தெரிய வருகிறது.
தூத்துக்குடியிலும் மக்கள் எழுச்சி வெகுண்டது. கோரல் ஆலை தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய சில நாட்களிலேயே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முறை எந்த தன் நிலை கோரிக்கையோ அல்லது பொருளியல் கோரிக்கையோ அல்லாத, மக்கள் தலைவருக்காய் களம் புகுந்தனர். தூத்துகுடியில் கடைகள் அடைக்கப்பட்டது. கசாப்புகடையில் இருந்து, குதிரைக்காரர் வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தம். பொது மக்களே விரும்பி 144 தடை போன்ற ஒரு நிலையை உருவாகியிருந்தனர் அந்த தென்பாண்டி துறைமுக நகரில். ஆம், சிறப்பு காவல் படையினருக்கு வேண்டிய அரிசியும் கூட கிடைக்காமல் காவற்படை தவித்தது. இத்தனை அலங்கோலமும் ஒரு வழக்கறிஞர் கைதிற்காக நடைபெற்றது உலகின் ஏகபோக வல்லரசான வெள்ளையருக்கு, நினைக்கும் போதே குமட்டத்தொடங்கியது. இந்த தகவலை எப்படி பிரித்தானிய பாராளுமன்றத்திலும், மாட்சிமைக்குரிய மகாராணியிடத்திலும் தெரிவிப்பது. கொல்கத்தாவில் இருந்த ஆட்சி பீடம் தங்களுக்கு விடப்பட்ட சங்க நாதமாகவே உணர்ந்தனர். இப்போது, நம் வெள்ளையர் அரசு சித்தரிப்பு வேலையில் இறங்கியது.
1.மக்களை தூண்டிவிட்டு கலகம் விளைவித்தவர் சிதம்பரனார் என்றும்,
2. மாட்சிமைக்குரிய மகாராணியாரின் ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்தவர் என்றும்
3. நாட்டில் அமைதி கெடுவதற்காண வேலைகளில் ஈடுபட்டார் என்றும்
4. தீவிர போக்குடைய சுப்ரமணிய சிவா அவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து மக்களிடையே துவேஷம் விளைவித்தவர் என்றும்
மனம் போன படி (பொய்) வழக்குரைத்தது. துணை நீதிபதி வாலஸ் என்பவர் விசாரணையை தொடங்கினார். (இவர் தான் பின் நாளில் மனம் வருந்தி அண்ணல் சிதம்பரனாருக்கு அவரது வழக்காடும் உரிமையிய பெற்று தந்தவர். அண்ணலின் அறிவுத்திறனையும் நேர்மைதிறத்தையும் அவரால் உணரமுடிந்தது, தன் குற்ற உணர்ச்சிக்கு பரிகாரமாய் அவரது வறுமை துயர் துடைக்க விரும்புவதாகவும் சொன்னார். )  பின்னர் நான்கு மாதங்கள் இழுத்தடித்த, இருட்டறை வழக்கு, நீதிபதி பின்ஹே – சூலை மாதம் 7ம் நாள் தீர்ப்பு கொடுக்கப்பட்டது.
ஆம், வழக்கு நடந்த காலங்களில் உள்ளூர் வழக்கறிஞர்கள் எவருக்கும் அங்கு மரியாதை கொடுக்கப்படவில்லை. ஆகவே சிதம்பரனார் வேண்டுகோளுக்கு இணங்க அவரது குடந்தை நண்பர் ஒருவரை வழக்காட ஏற்பாடு செய்தார். ஆனால், திட்டமிட்ட விசாரணை என்னவோ வ.உ.சி தரப்பு வாதங்கள் எதனையும் காதிலும் வாங்கவும் இல்லை, அதனை முறையாக பதிவு செய்யவும் இல்லை. இதனை ஆவணங்களும் சிதம்பரனாரின் தன் நிலை விளக்க குறிப்புகளும் உறுதியாக சொல்கிறது.
பாரதியார் சாட்சி சொன்னாரா? :
விசாரணை நடந்த காலங்களில் சென்னையை சேர்ந்த ஜி. சுப்ரமணிய ஐயரும் (இவர் வீட்டில் தான் வ.உ.சி, காந்தியார் சந்திப்பு பின் நாளில் நிகழ்ந்தது) மற்றும் பாரதியாருக்கு நீதிமன்றத்தில் இருந்து விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் நெல்லை வந்து காவலில் உள்ள மூவரையும் மற்றவர்களையும் கண்டு பேசி வந்தனர். ஆனால் அவர்கள் சாட்சியத்திற்கு அழைக்கப்படவில்லை. சாட்சியும் அளிக்கவில்லை. இது சிதம்பரனாரின் வரலாற்று சுவடிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் தான், தனக்கும் விஞ்சிற்கும் நடைபெற்ற உரையாடலை பகிர்ந்து கொள்கிறார். இதுவே மேற்கூறிய பாடல்களாக வந்த போது விஞ்ச் வெகுண்டு, அந்த பாடலுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மண்டையம் அதிபரையும், பாரதியாரையும் கைது செய்ய கமுக்க ஆணை பிறப்பிக்க இருப்பதை அரசு ஊழியராக இருந்து பாரதியாரின் சுதேச கீதங்களில் ஈடுபாடு கொண்ட ஒரு அதிகாரியே வெளியிட்டார் என்றும், அதன் பேரிலேயே மேற்படி இருவரும் புதுவைக்கு நாடு கடந்து, இந்தியா இதழை தழைக்கச்செய்தனர் என்று சிதம்பரனார் தன் வரலாற்றில் அவர் பெயர் குறிக்க விரும்பவில்லை என்று, அப்போதைய சூழ் நிலை கருதி பதிவு செய்தார். அவர் யார் என்று இன்று வரை தெரியவில்லை.
சிறைக்கோட்டத்தில் அறச்செயல்கள் :
பிரித்தானிய காலனி ஆதிக்க வரலாற்றில் 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற ஒரே அர்சியல் தலைவர் அண்ணல் சிதம்பரனார் ஒருவரே. ராஜ துரோக செயலுக்கும், நெல்லை கலகத்திற்கும் 20 ஆண்டுகள், அரசியல் சந்நியாசி சுப்ரமணிய சிவாவிற்கு இருப்பிடம் கொடுத்து அரசியல் உரையாற்றவைத்த குற்றத்திற்கு கூடுதல் 20 ஆண்டுகளும் இதனை நாடு கடந்த தீவகத்தில் தொடர்ச்சியாக நிறைவு செய்துகொள்ளவேண்டும் என்று இடியாக ஒரு தீர்ப்பினை பெற்றுக்கொண்டவர் சிதம்பரனார். அரசியல் சந்நியாசி சுப்ரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள் நாடுகடந்த தண்டனையாகவும், பத்மநாப ஐயங்கார் ஒருவரே தண்டனை இன்றி விடுவிக்கப்பட்டவர் என்றும் அறிவித்தனர். ஏனைய அணைத்து பொதுமக்கள் பலர் குற்றவாளிகளாக பிடிபட்டவர்கள் அனைவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பொது மக்கள் நெல்லை சீமையில் உள்ளவர்களுக்கும் தச்சநல்லூர் மக்களுக்கும் தண்ட காவல் படை அமைத்து (P U NITIV E P O L IC E FORCE ) எழுச்சியில் உண்டான சேத மதிப்பினை பெறும்வரை தண்டித்தனர். சிறை புகுந்த போது அண்ணலின் வயது 35 மட்டுமே. குடும்பத்தினரும் ஊராரும் நிலைகுலைந்த நிலையில் நின்ற போது வீர வேங்கையாக சிறைபுகுந்தார். மேல் முறையீடு செய்து இவர்களது தண்டனையை 6 ஆண்டுகளாய் குறைத்தனர். ( வெள்ளையருக்கும் நடுக்கம் தர வைத்த தீர்ப்பு அல்லவா?) . சிறையில் அனைவருக்கும் உதவிகள் செய்தார். பாளையம் கோட்டையில் அறக்கோட்டமாக மாற்றினார். கைதிகளுக்கு மேல் முறயீடு செய்வது, சட்ட ஆலோசனை செய்வது, கனிவாக பேசுவது இவையெல்லாம் தனிமைச்சிறையில் இருந்த கைதிகளுக்கு பேராறுதலாக இருந்தது. அங்கும் இலக்கியப்பணியினை தொடரலானார். விஞ்ச் கொடுங்கோலனுக்கு மேலும் எரியூட்டியது. ஆகவே அவரை கோவை சிறைக்கு மாற்றி அங்கு உள்ள வெள்ளை அதிகாரியை கொண்டு வதை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இங்கு தான் – பொட்டலில், கை கால்கள் பிணைக்கப்பட்டு நாள் முழுதும் செக்கிழுக்க வைத்து அனு அனுவாய் கொன்றனர். அவரை அரசியல் கைதியாகவே நடத்தவில்லை.
பாராளுமன்றத்தில் விவாதமும்; லெனின் கருத்தும் :
Tinnaveli Riot என்ற தலைப்பில் பிரித்தானியாவில் உள்ள பாராளுமன்றத்தில் திரு. ரீஸ் என்ற உறுபினரின் கேள்விக்கு திருநெல்வேலி நிகழ்வினை கலகமாக கூறி சட்டம் ஒழுங்கினை நிலை நாட்ட நிர்வாகம் துப்பாக்கி சூடு நடத்தவேண்டிய நிலை வந்ததையும், தவிக்கமுடியாததையும் கூறினார். தென் இந்திய தலைவரின் கைது குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டமைக்குதான் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. தீர்ப்பு வெளியானவுடன் கொதித்த மராட்டிய சிங்கம் திலகர், தனது வீரமிக்க போர்வாள் சிதம்பரனாருக்காக எழுச்சிமிகு உரைகளாற்றினார். இது மும்பை மக்களிடம் கொதிப்பையும் பதட்டத்தையும் எழுப்பியது. அவரது சிதம்பரனார் குறித்த கட்டுரைக்கு வழக்குரைத்து கைது செய்தனர். மும்பையிலும் மக்கள் வீதிக்கு வந்தனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்து “லெனின் தனது அரசியல் ஏட்டில் இந்தியா போன்ற நாடுகளிலும் தங்கள் தலைவர்கள் சிறை புகுந்தால் மக்கள் வீதிக்கு வந்து விடுகின்றனர். பிரித்தானிய முதலாளிகளுக்கு அஸ்தமன காலம் நெருங்கி விட்டது” என்று குறிக்கின்றார்.
சிவா – சிதம்பரம் மற்றும் ஏனைய ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களின் சிறை வாசம் உள்ளூரில் இல்லாமல், கோவை, சேலம்,வேலூர்,கண்ணனூர்,பெல்லாரி என இன்னும் பல இடங்களுக்கும் விசிறி அடிக்கப்பட்டனர். நூறு ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் அண்டை மாகானங்களில், தொலை தூரத்தில் கொடுப்பதன் மூலம் கைதி, அவரது குடும்பம் மற்றும் பொதுமக்களின் மனதில் அச்சம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது. இதில் சிதம்பரனாருக்கு பாளையம் கோட்டையில் இருந்து கோவை வழியாக கண்ணனூர் வரை இழுத்தடித்து அவரது மனைவி மக்களை வதைத்தனர். குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. பாரதியாரும் மற்ற பலரும் கைதாகி பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிதி திரட்டினர். மண்டையம் குடுமப்த்தார் பெரிதும் பாடுபட்டனர். தென் ஆப்பிரிக்காவில் காந்தியாரும், வள்ளியம்மையாரும் மற்ற இந்திய நாட்டினரும் நிதி திரட்டி உதவினர். இது குறித்த காந்தியாரின் கடிதங்களை இன்றுவரை காங்கிரசு வெளியிடவில்லை. காங்கிரசு பேரியக்கம் இந்த காலத்தில் ஒரு திட்டவட்டமான பாதைக்கு சென்றது. காங்கிரசு கனவான்கள் மனுப்போட்டு புரட்சிசெய்தாலே சாலவும் நன்று என்ற நிலைக்கு வந்தனர். பாரதியார், திலகர், விபின் சந்திர பாலர், அரவிந்த கோஷ் (பின் நாளில் புதுவையில் அடைக்கலமாகி ஆன்மீகத்தில் மூழ்கிவிட்டார்) போன்றவர்கள் புறக்கனிக்கப்பட்டனர்.
சிறைக்கு பிந்தைய வாழ்க்கை :
சிவா – சிதம்பரம் என்ற இரண்டு கண்களையும், இமைக்காமல் பின் தொடர்ந்தது உளவுப்படை. அவர் எப்போதும் கண்கானிப்பின் நிழலில் இருப்பதை உணர்ந்தார். ஆகவே தன்னால் பிறருக்கு துன்பம் நேருதல் கூடது என்பதில் கவனமாக இருந்தார். கண்ணனூர் சிறையில் இருந்து 1912- திசம்பர் -12ம் நாள் வெளிவந்தார், தனது அரசியல் சகா வீர சிவாவையன்றி குடும்பத்தார் எதிர்கொள்ள, அவருக்கு மற்றுமொரு நிபந்தனை இருந்தது. அதாவது அவர் நெல்லை மாவட்டத்திற்குள் 1924 ம் ஆண்டு வரை நுழையதடை மற்றும் அவரது ஒரே பிழைப்பான வழக்காடும் உரிமையையும் தடை செய்தனர். இதன் மூலம் அவரது அன்றாட வாழ்வியலையும் சிதைப்பதன் மூலம் முடக்கலாம் என்பதே திட்டம். கண்ணனூரில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் குடியேறினார். குடும்பச்செலவிற்கும், உணவிற்கும் பாடுபடவேண்டியவராகவே இருந்தார். இப்போதும் சென்னையில் மண்டயம் குடுமத்தார் இவருக்கு முடிந்த உதவிகளை செய்தனர். அவர்களும் பொருளாதாரத்தில் முடங்கி இருந்தனர்.ஆனாலும் சிதம்பரனாரை கைவிட மனமில்லை. அண்ணல் சிதம்பரனார் அப்போதும் , அது தனக்கு இறைவன் செய்யும் நற் செயலே என்று நினைத்தார்.
சென்னையில் இருந்தபோது மயிலாபூரிலும் பின்னர் பெரம்பூரிலும் வசித்தார். பல சமயங்களில் கால் நோக சென்னையில் நடந்தே செல்வார். சிறிது காலம் சேலம் மற்றும் கோவையிலும் வாழ்ந்தார். 1915 ம் ஆண்டு திலகரின் அழைப்பை ஏற்று பூனாவில் அவரை சந்தித்தார். அப்போதும் அவர் செக்குமாடாக மீண்டும் முதல் உலகப்போரை, மன்னர் கெய்சர் ஆண்டு வந்த ஜெர்மனியின் உதவியுடன் புரட்சி செய்யும் சாத்தியங்கள் பற்றி விவாதித்தார். (அப்போது ஹிட்ட்லர் அரசியலுக்கு வரவில்லை ). தனது குழந்தைகளிடம் என்றும் திருக்குறள் மறவாமல் இருக்க எடுத்துரைப்பார். உலகின் எந்த மொழி பேசுவோருக்கும் கிட்டாத அரும் பெரும் களஞ்சியம் அது என்பார். தான் சிறைபுகுந்த காலங்களில் உடன் இருந்த கைதிகளும் அவர்தம் தியாகங்களையும் தன் குழந்தைகளுக்கு நன்றி மறவாமல் கூறுவார். சிலரை வரவழைத்து விருந்தோம்புவார். அப்போதும் தன் குழந்தைகளுக்கு அவர்கள் தியாகங்களையும் கூறுவார். தன் நன்றி மறவா பண்பினை தான் எழுதிய தன் வரலாற்றில் அவரகள் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிட்டு எழுதி, வரலாற்றில் பதிவு செய்து நிலை பெற செய்தார். ஆன்மீகத்தில் மாறாத பற்று கொண்டவர். சனாதன பகுப்பை புறக்கணித்தார். ஒடுக்கப்பட்ட குழந்தையை எடுத்து வளர்த்தார். இதற்கு அவர் பிறந்த சாதியில் கிடைத்த பரிசு சாதிப்பிரத்ஷ்டம். அந்த குழந்தை பின் நாளில் சுவாமி சகஜானந்தராக துறவு நெறி பெற்றார் என்பது தகவல். சைவ சித்தாந்தத்தின் மெய் விளக்கமான மெய்கண்ட சிவாச்சாரியார் எழுதிய சிவஞான போதத்தை அழகிய விளக்கம் கொடுத்தார். இதற்கும் தீவிர சைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பை பெற்றுக்கொண்டார். இந்திய தேசியத்தை முன்னெடுத்து தமிழ் தேசியத்தை புறம் தள்ளாத, கல்வி வளர்ச்சியும், கூட்டுறவு சங்க முறைமையையும் ஒருங்கிணைத்து, மாலுமிகள் பயிற்சி கழகம் ஏற்பட ஒரு தொலை நோக்கு செயல் திட்டம் கொண்டவர். இந்திய அரசியலில் யாருக்கும் ஒப்புமை இல்லாத சிகரத்தை தொட்டவர். அவர் காலத்திலேயே அவர் புறக்கணிக்கப்பட்டது, அதை உணர்ந்து மாற்று வழியில் தமிழ் சமூகத்திற்கு தன்னால் இயன்ற இலக்கிய பணிகளை செய்தார். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்ற தமிழ் அறத்திற்கு பொருளாக விளங்கினார்.
நாம் இவரது வாழ்வையும் பணியையும் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச்செல்வதன் மூலம் அண்ணலுக்கு நன்றியையும், குழந்தைகளுக்கு நன்றி மறவா அறத்தையும் விட்டுச்செல்லலாம். நன்னெறி மாந்தர் வாழ்வினில் என்றும் நலிந்தது இல்லை. வரலாற்றில் விழிப்பு : எதிர் காலத்தின் மீட்பு.

No comments:

Post a Comment