வ. உ. சிதம்பரம் பிள்ளை
கப்பலோட்டிய தமிழன் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் அனைவராலும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாருக்கு தமிழும் தேசியமும் தமது இரு கண்கள்; எந்த அளவிற்கு தேசப்பற்றும் விடுதலை உணர்வும் கொண்டிருந்தாரோ, அதே அளவு மறுபக்கம் தாய்மொழியான தமிழ் மீது பற்றும் இலக்கிய உணர்வும் கொண்டிருந்தார். நாடு தழுவிய நிலையில் அன்றைய அரசியல் களத்தில் ஒரு சாதனையாளராக, தன்னிகரில்லாத் தலைவராக தலைவணங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தியத் தலைவர் அவர். அவரின் வீரார்ந்த அரசியல் சாதனைகளே அவர் சிறைமீண்டு வெளிவரும் பொழுது, மறக்கப்பட்டு விட்டன. அவர் 4 ஆண்டு சிறைவாசத்திற்குப்பின் விடுதலையாகி மீண்ட பொழுது அவரை எதிர்கொள்ள சுப்பிரமணிய சிவா மட்டுமே காத்திருந்தார் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. இந்நிலையில் அவருடைய தமிழ்ப்பணிகளின் நிலை கேட்கவும் வேண்டுமோ?
:
• உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட இரண்டு நூல்கள்: எஸ். கண்ணனின் "வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை " (2005), மற்றும் ம.ரா. அரசுவின் "வ.உ.சி. வளர்த்த தமிழ்" (2002);
• சாகித்திய அகாதெமி் வெளியிட்டு வரும் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் ம.ரா.அரசு எழுதிய "வ.உ. சிதம்பரனார்"(2005);
• ஆ.இரா. வேங்கடாசலபதியின் "வ.உ.சியும் பாரதியும்" (மக்கள் வெளியீடு,1994)
இந்த உரையில் வரும் அனைத்துக் குறிப்புகளும், கருத்துகளும், மேற்கோள்களும் தகுந்த உரிமம் பெறாமல் இந்த ஆய்வு நூல்களிலிருந்து பெற்ற இரவல்களேயாகும்.
வ.உ.சியின் இளம்பிராயத்திலேயே அவருக்கு ஒரு நல்ல இலக்கிய அடித்தளம் அமைந்தது. வ.உ.சியின் முன்னோர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்கினர்; கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். ஒட்டப்பிடாரத்தில் இவருடைய வீட்டிற்குக் "கவிராயர் வீடு" என்ற பெயரும் உண்டு. இளமையில் வ.உ.சிக்குக் கற்பித்த ஆசிரியர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆதலால், இயல்பாகவே இலக்கிய நூல்களைப் பயிலும் வாய்ப்பினை அவர் பெற்றார். ஆத்தி சூடி, உலகநீதி முதலிய ஒழுக்க நூல்களைப் பலமுறை கேட்டுப் பயின்றார். கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, நளவெண்பா, மூதுரை ஆகிய நூல்களைப் பொருளுணர்ந்து கற்றார். மகாபாரதம் மற்றும் திருவிளையாடல் புராணக்கதைகளையும் நீதிக்கதைகளை யும் பாட்டனார், பாட்டியிடமிருந்து விரும்பிக் கேட்டவர்.
தொடக்க காலத்தில் வ.உ.சி யின் மனம் ஆன்மிகச் சிந்தனைகளில் தோய்ந்திருந்தது. தனிமனித ஒழுக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனிமனித வாழ்க்கை நெறிப்படும்பொழுது சமுதாயம் மேம்படும் என்பது அவர் நம்பிக்கை. இந்த நம்பிக்கையே, 1900ஆம் வருடம் செப்டம்பரில், "விவேகபாநு" என்ற பெயரில் நண்பர்களுடன் இணைந்து, "லெளகிகத்திற்கும் வைதீகத்திற்கும் அவசியமான ஒழுக்கங்களை எடுத்துப் போதிக்கும் பத்திரிக்கை"யாக ஆரம்பிக்கப்பட்டது. அவர் எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் 'விவேகபாநு'வில்தான் வெளியாயின. அவருடைய முதல் கட்டுரை "கடவுளும் பக்தியும்" என்பதாகும். 1936 ஜனவரி 17, தினமணியில் வெளிவந்த "உலகமும் கடவுளும்" என்பதே அவர் எழுதிய கடைசிக் கட்டுரையாகும். ஏறக்குறைய 37 ஆண்டுகளில் ஆன்மீகம், அரசியல்,வாழ்க்கை வரலாறு, மொழி, இலக்கியம், மர்றும் பொதுவான பொருள்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
வ.உ.சி யின் கட்டுரைகளின் சிறப்பு அவற்றிலிருந்த எளிமையும் தெளிவும். உதாரணத்திற்கு "கடவுள் ஒருவரே" என்ற கட்டுரையில், "எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறாரென அவர் அறிகின்றிலர். தமது மதத்திற்குரிய கடவுளே உண்மையானவரென்றும், பிற மதத்துவருடைய உண்மையல்லாதவரென்றும் அவர் நினைக்கின்றனர். அவ்வெண்ணந்தான் இவ்வளவு விபரீதங்களையும் விளைவிக்கிறது" என்கிறார். மேலும், "ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் தோன்றிய ஒவ்வொரு பெரியவருடைய அறிவு விளக்கமேயன்றி வேறன்று. ஒருவர் அறிவுக்கு மற்றொருவர் அறிவு எல்லா விஷயங்களிலும் பொருத்த முடையதாக இருக்குமா? சில விஷயங்களில் பொருத்தமின்றித்தானே இருக்கக் கூடும். அது பற்றிச் சுதேசத்தாருக்குள் சகோதர வாஞ்சையைக் குறைப்பது நியாயமா?" என்று எளிமையாக தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
தாய் நாட்டின் பெருமை உணரப்பட வேண்டும் என்பதை, "ஒருவர் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்தவர் அவருக்கு தாயென்றால், அவரும் அவருடைய முன்னோரும் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்த தேசம் அவரைப் பெற்ற தாயினும் மேலென்பதற்குத் தடையென்ன?" என்றும், "வறுமையினும் வியாதியினும் சகிக்கொணாக் கொடியது அடிமைத்தனமே" என்றும் சொல்கிறார்.
இலங்கையில் இருந்து வெளிவரும் "வீரகேசரி" என்னும் நாளிதழில் 'பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷியின் வரலாறு' என்னும் தலைப்பில் திலகரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். இது இவருடைய கட்டுரைப் பணியில் மற்றுமொரு சாதனையாகும்.
மேடைப் பேச்சு:
ஆன்மிக உணர்வும் தமிழ் உணர்வும் வ.உ.சியின் குருதியில் கலந்தவை. இடையில் தோன்றிய அரசியல் ஈர்ப்பு அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றியது. தமிழகத்தில் விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் தலைவரானார். விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்குத் தமிழைப் பயன்படுத்தினார். இன்று பெருவழக்காகவும், இயல்பாகவும் அனைவரும் அறிந்த ஒன்றாகவும் நடைமுறையில் உள்ள அரசியல் மேடைப்பேச்சு என்பது வ.உ.சியின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அரிய பொருளாகவே இருந்தது. சொற்பொழிவுக் கலையை - மேடைப்பேச்சைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் என்ற வகையில் குறிக்கத்தக்கவர் சுப்பிரமணிய சிவா ஆவார்.
ஒழுக்கம், சிற்றிலஞ்சேராமை, அருளுடைமை, தவம், கள்ளாமை, நிலையாமை, திருக்குறள் முதலதிகார ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றி பாராட்டுப் பெற்ற வ.உ.சி, சுப்பிரமணிய சிவா தொடங்கி வைத்த மேடைப்பேச்சை- அரசியல் சொற்பொழிவை ஒரு கலையாகவே வளர்த்துப் பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து புதிய வரலாறு படைத்தவர்.
வ.உ.சியின் பேச்சுத் தமிழ், ஆழமும் வேகமும் உள்ள ஓர் ஆறு கரைபுரண்டு வெள்ளமிட்டு வரும் அழகை நினைவூட்டும் என சான்றோர்கள் பாராட்டியுள்ளார்கள். அன்றைய சுயராஜ்ய கட்சியிநன் கொள்கை பரப்புச் செயலாளர் அவர். தமிழை எளிமைப்படுத்தி, பொதுக்கூட்டம் கூட்டிப் பேசும் முறையை பிரசித்தமாக்கி, அச்சம், அறியாமை, வறுமை ஆகியவற்றில் ஆழந்து கிடந்த மக்களை அரசியல் விழிப்புணர்வு பெற வைத்த தமிழ் புரட்சியாளரும் ஆவார்.
மெய்ஞான நூல்கள்:
பால கங்காதிர திலகர் பர்மா சிறையில் அடைப்பட்டிருந்த பொழுது "கீதாரகசியம்" என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார். அதேபோல் பண்டித ஜவஹர்லால் நேருவும் "நான் கண்டுணர்ந்த இந்தியா" என்ற வரலாற்று நூலை எழுதி முடித்தார் சிறையில் இருந்தபடியே. அதுபோலவே சிதம்பரம் பிள்ளை அவர்களும் சிறையில் இருந்த பொழுது தமிழ் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். கண்ணனூர் சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு நன்னூல், நீதிமுறை போதித்தார். அக்குற்றவாளிகளில் சிலர் "பாக்களாகச் செய்து கொடுத்தால் மனனம் செய்து நினைவு கூற இலகுவாக இருக்கும்" என்ற வேண்டிக் கொண்டனர். அதற்கிணங்கி பத்து அதிகாரங்களைக் கொண்ட 100 வெண்பாக்கள் அடங்கிய "மெய்யறிவு" என்ற நூலை இயற்றினார்.
இந்த நூல் 1.தன்னையறிதல், 2. விதியிலறிதல், 3. உடம்பை வளர்த்தல், 4. மனத்தையாளுதல், 5. தன்னிலையில் நிற்றல், 6. மறங்களைதல், 7. அறம்புரிதல், 8. தவஞ்செய்தல், 9. மெய்யுணர்தல், மற்றும் 10. மெய்ந்நிலையடைதல் என்ற அதிகாரங்களைக் கொண்டதாகும். உடல், உள்ளம், உயிர் என்ற மூன்றின் சேர்க்கைதான் நாம். "உடலைப் புறக்கணித்தல் தவறு", "ஒருவன் முதலில் தான் யார் என்பதை அறிதல் வேண்டும்", "மறம் களைய வேண்டும்" என்பன போன்ற பல்வேறு கருத்துகள் கொண்ட நூல் இது. அறத்தைச் சரியாகப் புரிதலும், பொருளை நியாயமாக ஈட்டலும், வீட்டை நேராக அடைதலும், அவற்றிற்கு அனுகூலமான நிலைகளை எய்தலும் இந்நூலைக் கேட்போர் பெறும் பயன்களாகும்.
அடுத்ததாக, திருக்குறள் விளக்கும் நீதிக்கருத்துகளை மையமாக வைத்து எழுதப்பெற்ற நூல் "மெய்யறம்". தமிழ் இலக்கியங்களுள் வ.உ.சியின் மனத்தை மிகவும் ஈர்த்தது திருக்குறளே ஆகும். மாக்களைப் போல மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனந்திருந்தி நல்வாழ்வு வாழத் துணைபுரிவது திருக்குறளே என்பது வ.உ.சியின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் மனநலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகக் குறளின் அடிப்படையில் இந்நூலை இயக்கி உள்ளார்.
இந்நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் 5 இயல்களைக் கொண்டது. ஓர் இயலுக்கு 25 அதிகாரங்கள் என்றும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து ஒற்றை அடிகள் கொண்டு 1250 அடிகள் உண்டு. "மானுடப் பிறப்பை அடைந்த ஒவ்வொருவரும் முறையே மாணவராய், இல்வாழ்வராய், அரசராய், அந்தணராய் படிப்படியாய் வாழ்வில் உயர்ந்து இறுதியில் மெய்ந்நிலையை அடையலாம்" என்பது அவர் வலியுறுத்தும் கருத்து. மெய்யறத்தைப் பற்றி ராஜாஜி பாராட்டுகையில் "இந்நூலிற் கூறியுள்ள பொருள்களை யான் இனிதுணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை, இக்காலத்திய கருத்துகளால் மணப்படுத்தி அற்பக் கல்வி உடையாரும் உணரத்தக்கவாறு செய்யலாமென்பதை இந்நூல் காட்டுகின்றது" என்கிறார்.
மெய்யறத்தின் முதல் பகுதியான மாணவரியலில் முதல் அதிகாரமான மாணவர் கடமை என்ற பகுதியில்:
"மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார்
ஆணும் பெண்ணும் அது செயவுரியர்
இளமைப் பருவம் இயைந்ததற்கே
மற்றைய பருவமும் வரைநிலையிலவே
அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல்
அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல்
தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்
தக்க ஆசிரியரால் இன்னியலறிதல்
ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல்
இறைவன் நிலையினை எய்திட முயறல்"
மொழி பெயர்ப்பு நூல்கள்:
அடுத்ததாக கலாசாலைகளுக்குப் பாடநூல்கள் விதிக்கும் பாடப் புத்தகச் சபையார் (Text Book Committee) வ.உ.சியின் காலத்திலேயே ஏற்றுக் கொண்ட நான்கு மொழி பெயர்ப்பு நூல்கள் வ.உ.சி மொழிபெயர்த்தவை ஆகும்.
சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் தத்துவ நூல்களை எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலேய எழுத்தாளரின் எழுத்துக்களால் கவரப்பட்ட வ.உ.சி அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அவருடைய சிறைக்காலத்தில் அது ஈடேறியது. ஜேம்ஸ் ஆலன் தமது 24ஆம் வயதில் "ஆசிய தீபம்" (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. "கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்" என்று அவர் கருத்து கொண்டிருந்தார். அவர் இறந்து பிறகு கூட கீழை நாட்டு வழக்கப்படி தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என அவர் விருப்பத்திற்கேற்ப, அவர் உடல் தகனம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாக சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவருடைய ஆணித்தரமான கருத்து.
"அகமே புறம்"-" Out from the Heart" என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. இந்த நூலுக்கு சுதேசமித்திரனில் வந்த விளம்பரம்: "இது ஸ்ரீமான் வ.உ சிதம்பரம் பிள்ளையவர்கள் கோயம்புத்தூர் சிறை வீட்டிலிருந்து இயற்றிய இரண்டாவது தமிழ் நூல். இது லெளகிக உன்னத நிலையையும் வைதிக உன்னத பதவியையும்சுலபமாக அடையச் செய்யும் மார்க்கங்களை வரிசைப்படுத்தித் தெளிவாகக் கூறுகிறது. இதனைக் கற்றுணர்ந்து இதில் கூறியுள்ள மார்க்கங்களில் ஒழுகுபவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் ஒருங்கே இம்மையில் அடைவரென்பது திண்ணம்". இது விளம்பரத்துக்காக எழுதப்பட்ட மிகையான வார்த்தை களல்ல. ஒரு சிறிய அளவிலான சரியான மதிப்பீடாகும்.
"இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வோர் ஆடவரும், பெண்டிரும், சிறுவரும், சிறுமியரும் கற்க வேண்டும் என்பதும், இந்நூல் நமது நாட்டில் நிலவும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நிலைபெற்று, நமது நாட்டில் நிலவ வேண்டும் என்பதும் எனது கோரிக்கை", என்று பாயிரத்தில் வ.உ.சி அவரின் உள்ளக்கிடக் கையை தெரியப்படுத்தி உள்ளார். இந்நூலை மூன்று பாடங்களாகப் பிரித்து, முதல் பாடத்தில் சரீர தீயொழுக்கங்களாக சோம்பலும், மீதூண் (அதிகம் உண்பதும்) எனவும், இரண்டாம் பாடத்தில் நாவின் தீயொழுக்கங்களாக புறங்கூறல், பயனில சொலல், நிந்தித்தல், புன்மொழி பகரல், குதர்க்கம் பேசல் எனவும் குறிப்பிட்டு, மூன்றாவது பாடத்தில் கொள்ள வேண்டிய நல்லொழுக்கங்களாக மனத்திருத்தத்தில் நிஷ்காமிய கருமம், கடமை, அசையாத நடுவு நிலைமை, அளவற்ற பொறுமை எனவும் எடுத்து இயம்பியுள்ளார்.
இந்த நூலைப் பற்றி பாரதியார் தனது மதிப்புரையில் கூறுகிறார்: "அகமே புறம் என்ற பெயருடன் ஸ்ரீமான் பிள்ளையவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் புதிய நூல்,ஆலன் என்ற பண்டிதரின் ஆங்கில் நூல் ஒன்றிலிருந்து மொழி பெயர்த்தது. எனினும், பிள்ளையவர்கள் அதிலே பரிபூரணமான தமிழ் மணத்தையேற்றியிருக்கிறார்கள். பிற நாட்டுப் பொன்னிலே நமது முத்திரையை வைத்து நமது பொருளாக்கி விட்டார்கள். இது மொழிபெயர்ப்பென்று பிள்ளையவர்கள் சொல்லாவிடில் நாம் இதனைத் திருக்குறளில் சில பகுதிகளுக்கு விரிவுரையென்று கொண்டிருப்போம். நோய், கீழ்மை, மிடிமை முதலிய தளைகளை இப்பிறப்பில் இன்றே, இப்பொழுதே தொலைத்து நலமெய்த வேண்டுவோர் இந்நூலின் உபதேசங்களைக் கைக்கொள்க. உடலுறுதி, அறிவு, ஆக்கம், தெளிவு, வீடு ஆகிய இன்ப நிலைகளைப் பெற விரும்புவோர்க்கு ஸ்ரீமான் பிள்ளைய வர்கள் நல்ல துணையாக அமைந்துள்ளார்கள். இது நன்று." இவ்வண்ணமான பாரதியின் மதிப்புரை, வ.உ.சியின் தமிழ் நடையையும் மொழியாக்கச் சிறப்பையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.
"மனம் போல வாழ்வு" - As a man thinketh என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் தமிழாக்கம் "எண்ணிய எண்ணியாங் எய்துவ; எண்ணியார் திண்ணியராகப் பெறின்" என்னும் திருக்குறளுடன் பாயிரத்தை ஆரம்பித்திருக்கிறார். "தம்மை ஆக்குபவர் தாமே" என்ற உண்மையை மக்கள் உணருமாறு செய்யக் கருதிய சிறுநூல் "இது முதனூற்குச் சற்றேறக்குறைய சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளனவோ, அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன். மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும், சில இடங்களில் முதலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்த்திருக்கிறேன்", என்று வ.உ.சி பாயிரத் தில் குறித்திருப்பது அவர் எடுத்திருக்கும் சிரத்தையைக்காட்டுகின்றது.
"வலிமைக்கு மார்க்கம்". "From Poverty to Power" என்றா ஜேம்ஸ் ஆலனின் நூலின் முதல் பாகமான "The part of Prosperity"இன் மொழிபெயர்ப்பே இந்நூல். இதில் துன்பக் கடலைக் கடக்கும் நெறிகள் வலியுறுத்தப் பெறுகின்றன. "உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை. துன்பத்தால் துடிக்காத மனமே இல்லை. துக்கத்தால் துயர் உறாத கண்ணே இல்லை. கவலையும் துன்பமும், துக்கமும் வாழ்க்கையின் மாயைகள் எனலாம். துன்பத்திலிருந்தும், துக்கத்திலிருந்தும் தப்புவதற்குரிய மார்க்கம், துன்பமோ துக்கமோ அவற்றின் தன்மையைச் சரியாக அறிதலேயாகும்.துன்பத்தை வெறுப்பதாலோ கவனியாது இருத்தலினாலோ தப்பிக்க முடியாது. அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்திப்பது மட்டும் போதாது, அது எதன் பொருட்டு வந்ததென்றும், எதனை அது கற்பிக்க நிற்கிறதென்றும் அறிதலே அவசியம்" என உணர்த்தும் நூல்.இதில் வழக்கிலுள்ள பல வட மொழி வார்த்தைகளை உபயோகித்திருக்கும் வ.உ.சி, அதற்கு இணையானதமிழ் வார்த்தைகளையும் ஆரம்பித்திலேயே கொடுத்திருக்கிறார்.
"சாந்திக்கு மார்க்கம்", "From Poverty to Power" என்ற நூலின் இரண்டாம் பாகமான "The way to peace" என்பதனின் மொழியாக்கம் இது. இதில் தியான வலிமை, யானும் கடவுளும், ஆன்ம வலிமையை அடைதல், சுயநலமற்ற அன்பை அனுபவித்தல், கடவுளோடு ஐக்கியமாதல், முனிவர்களும், முனிகளும், இரஷிகர்களும் ஊழியம் புரிதல், பூரண சாந்தியை அடைதல் என்ற பகுதிகளைக் கொண்டுள்ளது.
உரை நூல்கள் :
ஆழ்வார் திருநகரில்வாழ்ந்த இரத்தினக்கவிராயர் ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு 1915ஆம் ஆண்டு "இன்னிலை"க்கு விருத்தியுரை எழுதி பதிப்பித்தார். அறப்பால், பொருட்பால், இன்பப்பால்,வீட்டுப்பால் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டு 45 பாடல்களால் ஆனது இன்னிலை.வ.உ.சி அவர்கள் இன்னிலையை ஆய்ந்து அதன் சிறப்பினை, திருக்குறளோடு உள்ள ஒப்பினை அக்குவேர் ஆணிவேராகக் காட்டியுள்ளமை போற்றற்குரியது ஆகும். மேலும், “இந்நூலாசிரியர் போன்றதக்க புலவர் திருக்குறளின் பொருள்களையும் சொற்களையும் எடுத்து ஆண்டிருப்பின், இந்நூல் செய்யுள்களதுஅழகு முதலியவை திருக்குறட் செய்யுள்களது அழகு முதலியவற்றிற்கு மிக மேம்பட் டனவாயிருக்கும்" என முடிவுரையில் முடித்திருக்கின்றார்.
வ.உ.சி. தம் வாழ்நாளின் இறுதியில் உரை எழுதியது "சிவஞான போத" சூத்திரங்களுக்காகும். இது பதினான்கு மெய்ப்பொருள் நூல்களில் ஒன்றாகும். மெய்கண்டார் இந்நூலை அருளிச் செய்தார். சிவஞானபோதத்திற்கு முதன் முறையாக சிற்றுரையும் பேருரையும் வழங்கியவர் சிவஞான முனிவர் ஆவார். திருக்குறளுக்கும், சிவஞானபோதத்திற்கும் எளிய உரை காண வேண்டும் என்று வ.உ.சி ஆசைப்பட்டிருந்தார். நாள் ஒன்றிற்கு இரண்டு மணி வீதம் பன்னிரண்டு நாட்களுக்கு சிவஞானபோதத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். சிவஞானபோதத்திற்கு எழுந்த உரைகள் பல மதக்கோட்பாடுகளையும் அவற்றின் கண்டனங்களையும் காட்டியுள்ளன. ஆனால், வ.உ.சி அவற்றினைத் தமது உரைநடையில் காட்டாது, எளிய, நேரிய உரையினை எழுதியுள்ளார்.
பாடல் திரட்டு:
இது வ.உ.சி எழுதிய தனிப்பாடல்களின் தொகுப்பாகும். சிறை செல்வதற்கு முன் வ.உ.சி எழுதிய பாடல்கள் இதன் முதல் பகுதியாகவும், சிறையிலிருந்த காலத்தில் எழுதிய பாடல்கள் இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இதில் மொத்தம் 380 பாடல்கள். அவற்றுள் 100 பாடல்கள் கடவுள் பற்றியும், 100 பாடல்கள் ஒழுக்கம் பற்றியும் அமைந்தவை. எஞ்சிய 180 பாடல்கள் சுற்றத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவுமுறைத் தொடர்பில் அமைந்தார்க்கும் எழுதப்பட்டவை.
இந்த தனிப்பாடல் திரட்டிலிருந்து சில கவிதைத் துளிகள்.
சிறைவாழ்க்கையில் ஒரு நாள் கேழ்வரகுக் கூழை உண்ண நேர்ந்த நாள் - வ.உ.சியின் மனத்தில் பின்னோட்டமாகக் கடந்த காலத்தின் இனிய நினைவுகள். தம் மனைவிக்கு எழுதியது இக்கவிதை.
"முக்கனியின் சாறெடுத்து முந்திரிஏ லம் வாதம்
அக்காரம் தேன்பாலோ டட்டூட்டக் - கக்குமென்னா
கேழ்வரகின் கூழுண்டல் கேடறியாய் நின்மலர்த்தாள்
வாழ்வதொக்கும் கற்காட்டில் வந்து"
இப்பாடல் தொகுப்பில் 350 வெண்பாக்கள், 1 தாலாட்டுப் பாடல், 3 விருத்தப்பாடல்கள், 15 கட்டளைகவித்துறைப் பாடல்கள், 11 நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் அடங்கும்.
சுயசரிதை:
சிறையில் இருக்கும்போது அவருடைய சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் தன்னுடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதிய முதல் மனிதர் வ.உ.சி என்றே கூறலாம். பரலி சு.நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி வ.உ.சி இதை உருவாக்கினார். இது ஒரு வரலாற்று ஆவணம். அவருடைய குடும்ப வரலாறு; அக்காலச் சிறைக் கொடுமை, கப்பல் வணிகம் ஆகியன இதில் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில வரிகள் :
இள வயதில் இவர் விளையாடிய விளையாட்டுகளைப் பற்றி:
"சுவர் மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,
கவண்கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,
கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,
எண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல்,
குதி வட்டாடுதல், கோலி தெறித்தல்,
குதிரை மீது ஊரிதல், கோலேறி நடத்தல்,
காற்றிரி எறிதல், கால்மாறி ஓடுதல்,
மேற்றிரி பந்தின் விளையாட்டுப் பலப்பல
சடுகுடு, கிளியந்தட்டு, பல்லி
நெடுகடும் ஓட்டம் நீர் விளையாட்டம்
கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,
'தம்' மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,
கசரத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி
நிசத்துச் சண்டையில் நிற்கும் முறைகள்
வெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல்
அடிபிடி சண்டை அளவில் புரிந்தேன்."
சிறையில் காலில் விலங்கிட்டதினை இங்ஙனம் விவரிக்கிறார்:
"தந்தான் வலதுகால் தண்டைகள் எமக்கே;
அரும்பொன் காலிடல் அபசாரமாதலால்
இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே"
செக்கிழுத்ததைப் பற்றி:
"திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான் , உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன் ; அவனுடைய அன்புதான் என்னே!"
வ.உ.சி வாழ்ந்த வாழ்க்கை என்பது உலகம் அறிந்த ஒரு திறந்த புத்தகம் போன்றது. அதில் ஒளிவு மறைவு என்பதற்கே இடமில்லை. அதற்கு அணி சேர்த்தாற் போன்று அவர் வரைந்த சுயசரிதம் அமைகின்றது. சுயசரிதையில் உண்மையை நிலைநாட்ட உறுதி கொண்டு, அனைத்தும் சொல்லும் பாங்கும், தம்முடைய தவறு, குற்றம், குறை போன்றவற்றையும் மறைக்காமல் எழுதிச் சொல்லும் பாங்கும் உலகோர்க்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றது.
பதிப்பு நூல்கள் :
தன்னை "திருக்குறள் அன்பன்' என்று அறிமுகம் செய்து கொண்டவர் வ.உ.சி. "தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந்துறந்த முனிவரேயாயினும், என்னை பெற்ற தந்தையேயாயினும் யான் பெற்ற மக்களேயாயி னும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை" என வ.உ.சி கூறியுள்ளார். அவர் தம் வாழ்நாள் முழுவதும் திருக்குறளை ஓதுவதும், திருக்குறளைச் சுட்டுவதும் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் எடுத்தாள முடியுமோ அங்கெல்லாம் குறளடிகளைக் கையாண்டார்.
திருக்குறள் மணக்குடவர் உரையை முதன்முதல் பதிப்பித்தவர் வ.உ.சியே ஆவார். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி திருமலையர், மல்லர், கவிப்பெருமாள் என்ற பதின்மர் உரைகளில் அச்சமயத்தில் தமிழ்நாட்டில் பயின்று வந்தது பரிமேலழகருரை ஒன்றே. மற்ற உரைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவலில் தமிழ்நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும், தேடுவிக்கவும் முயன்று, அதன் பலனாக அவருக்குக் கிடைத்தது மணக்குடவருடைய பிரதி ஒன்றே. அது வள்ளுவர் கருத்துகளைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ் நடையில் எழுதப் பெற்றதாகவும் தோன்றியது. வ.உ.சி க்கு அவ்வுரையில் கண்ட எளிமையும் தம்மனமொத்த கருத்துப் பரிமாற்றலும்அவரை ஈடுபாடு கொள்ள வைத்தது. அதைப் பதிப்பித்தது மட்டுமன்றி, தானும் ஒரு உரை நூல் எழுதினார். அவருடைய உரையில் பரிமேலழகரினின்றும் பல அதிகாரங்களை மாற்றியும், கருத்துக்களில் புது வீச்சினை வரைந்தும் ஒரு புது வழியைக் காட்டியுள்ளார்.
தொல்காப்பியம் இளம்பூரணம் உரையை பதிப்பித்ததும் அவருடைய இலக்கியப் பணிகளில் ஒன்றாகும். எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் 1920-ம் ஆண்டு அச்சிடத் தொடங்கி, 1928-ல் எழுத்ததிகாரம் வெளிவந்தது. 1933இல் களவியல், கற்பியல், பொருளியல் பகுதிகள் தனிநூலாக வெளிவந்தன. 1936-ல் எஞ்சிய மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் பகுதிகள் தனிநூலாக வெளியாயின. ஏடுகளிலும் அச்சேடுகளிலும் பொழிப்புரையாகக் கொடுக்கப்பட்டிருந்த உரைப்பகுதி இவரால் பதவுரையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் இடத்திலும் கற்போர் எளிதில் உணருமாறு பொருள் தொடர்பு நோக்கி, நூற்பாவின் சொற்களும், அவற்றின் பொருள் சொற்களும் பிரிக்கப்பட்டு அடையாளங்கள் இட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.
தமிழறிஞர்:
அவருடைய நூல்கள் மொத்தம்- 16.அவை மொழியாக்கம் -4, உரைநூல்கள்-3, பதிப்புகள்-3, மெய்ஞ்ஞானம்-2, பாடல் திரட்டு-1, சுயசரிதை -1 மற்றும் அரசியல் பெருஞ்சொல் என்று அவருடைய அரசியல் மேடைப்மொழிவுகளின் தொகுப்பு, வ.உ.சி கண்ட பாரதி என்ற மற்றுமொரு தொகுப்பு. வ.உ.சி யின் சுயசரிதையும், வ.உ.சி கண்ட பாரதியும் தொகுத்து பதிக்கப்பட்டது 1946-ல், அவரது மறைவுக்குப் பின். வ.உ.சி யின் இலக்கியப் பணி ஒரு மேடைப்பேச்சாளராக, கட்டுரையாளராக, மொழி பெயர்ப்பாளராக, பதிப்பாளராக நின்று விடாமல் தமிழை, தமிழ் இலக்கியங்களை மற்றவருக்கு போதித்த சிறந்த ஆசிரியராகவும் இருந்தார். சுவாமி சகஜானந் தருக்கு, பிற்காலத்தில் சிதம்பரத்தில் நந்தனார் கழகம், நந்தனார் பாடசாலை ஏற்படுத்திய அவருக்கு தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்து தமிழ் பயிற்சி ஊட்டினார். ராஜாஜியும் வ.உ.சி யிடம் திருக்குறள் பயின்றதாக சரித்திரம் சொல்லுகிறது.
தம்முடைய வாழ்வின் இறுதி நாட்களில் அன்றாடம் தம்முடைய வீட்டில் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். "தூத்துக்குடி சைவசித்தாந்த சபை" என்ற அமைப்பை நிறுவி கம்பன், திருக்குறள், சிவஞானபோதம், தொடர்பான சொற்பொழிவுகளை பல இலக்கிய அறிஞர்களை வரவழைத்து நடத்தி வந்தார்.
தம்முடைய பேச்சாற்றலால் தமிழுக்குப் புதியதொரு கலையை - 'மேடைத்தமிழ்' என்னும் துறையை வழங்கினார். தம்முடைய ஆன்மிக எழுத்துகளால், பின்னாளில் பல்கிப் பெருகித் தழைத்த 'வாழ்வியல் நூல்கள்' என்ற புதிய துறையைத் தமிழில் தொடங்கி வைத்தார். இன்று மில்லியன் கணக்கில் 'வாழ்வியல் நூல்கள்' விற்பனையாகும் நேரத்தில், வ.உ.சியின் தமிழ் மொழியாக்கங்களை நம் தமிழகம் தவறவிட்டது ஏன் எனத் தெரியவில்லை. இவை கருத்துக் கருவூலப் பெட்டகங்கள்; நம் வாழ்வுடன் இணைந்து பொருள் உணர வைப்பவை. இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நீதிப்பாட (Moral Science) வகுப்புகளுக்கு பாடநூல்களாக இவைகளை மீண்டும் கொணர்ந்தால் சமூகமும், நாடும் உயரும். 'அகமே புறம்' சிறிய அளவிலான நூல்-56 பக்கங்கள்; 'மனம் போல வாழ்வு'-59 பக்கங்கள்; 'வலிமைக்கு மார்க்கம்'- 100 பக்கங்கள்; 'சாந்திக்கு மார்க்கம்'-102 பக்கங்கள். சாத்தியப்பட்டால் இணையதளத்தில் ஏற்றி வ.உ.சி யின் தமிழ்த் தொண்டைப் பரப்ப முயற்சிக்கலாம்.
செல்வமும், செல்வாக்குமாக இருந்த காலத்திலும் (1898-1907), வெஞ்சிறையில் வாடிய காலத்திலும் (1908-1912), எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் (1913-1936), தமிழை மறவாது, இலக்கியத் தொண்டைத் தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வாழ்ந்த தன்னலமற்ற தேசபக்தரான, கப்பலோட்டிய தமிழரான, திருக்குறள் அன்பரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தமிழ் தொண்டை நாம் மறவாதிருப்போம், அவரது நூல்களைக் கற்றுத் தேர்வோம்.

No comments:
Post a Comment