இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளும் உண்டு; மறக்க முடியாத மனிதர்களும் உண்டு. இந்தத் தேசியத் தியாகத் தலைவர்கள் இல்லாமல் தொண்டர்களும் இல்லை; எழுச்சியும் இல்லை; போராட்டமும் இல்லை. இந்த விடுமுறைப் போராட்டக் களத்தில் வடக்கே பாலகங்காதர திலகரும், தெற்கே வ.உ.சிதம்பரம் பிள்ளையும் மறக்க முடியாதவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதியாகக் கருதப்பட்ட திலகரையே தலைவராக ஏற்ற தீவிரவாதி வ.உ.சிதம்பரம் பிள்ளை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக காலியா, லாவா என்ற இரு கப்பல்களை ஓட்டிய தமிழனை மறக்க முடியுமா?
அவரை மையமாக வைத்து ஆக்கப்பட்ட காவியமே கப்பலுக்கொரு காவியமாகும். புலவர் வாய்மைநாதன் அவர்களால் படைக்கப்பட்ட இக்காவியம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றுப் பாராட்டப்பட்டுள்ளது என்பதே அதன் சிறப்பை விளக்கும். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. “இக்கவிதைக் காவியத்தை அமரர் நல்லாசிரியர் ‘வரலாற்று நாயகர் வ.உ.சிதம்பரனார்’ நூல் வடித்த கவிஞர், புலவர் ஆ.முத்துராமலிங்கம் பார்த்திருந்தால் உச்சிமோந்து உளம் நெகிழ்ந்திருப்பார். திருவள்ளுவரையும், தீந்தமிழையும் தன் இரு விழியாய்க் கொண்டு கோவில்பட்டியில் வெற்றி நடைபோடும் ‘வ.உ.சி. வாழ்க்கை வரலாறும், இலக்கியப் பணிகளும்’ எழுதிய அறிஞர் பேராசிரியர் அ.சங்கர வள்ளி நாயகம் விழியில் பதிந்திருந்தால் வாழ்த்துமலர் தூவி மகிழ்வார்...” என்று இளசை அருணா தனது அணிந்துரை யாகிய சொல்வருடலில் குறிப்பிடுகின்றார்.
இதன் மூலம் வ.உ.சி.யின் வரலாற்றை வடித்த இரண்டு பேரை அறிகிறோம். அவர்களது இரு நூல்களும் வரலாற்றுக்கு முன்னோடியாக அமைந்திருக்கின்றன. இந்தக் காவியத்துக்கும் முன்னோடியாகும். “அவருக்கு அகிம்சை வழிப் போராட்டம் உடன் பாடில்லை. நேதாஜி போல் படை திரட்டி ஆண்ட அந்நியருடன் மோதும் வாய்ப்பு வாய்க்கவில்லை. பகத்சிங் போல் தீவிரவாத முனைப்பும் அவர் முன் எதிர்ப்பட்டதில்லை. பகத்சிங் அரசியல் களத்திற்கு வருமுன் வ.உ.சி.யின் விடுதலை இயக்கப் பங்களிப்பு என்ற சூறாவளி அடித்து ஓய்ந்துவிட்டது. நேதாஜி இந்திய தேசியப் படை திரட்டும் சிந்தனை கொள்ளுமுன்பே வ.உ.சி.யின் வாழ்நாள் முடிந்திருந்தது என்றாலும் இம்மூவரிடையில் அகிம்சா போருக்கு வேறுபட்ட அணுகுமுறையில் ஓர் ஒற்றுமையை அதன் உள்ளடங்கிய வேற்றுமைகளுடன் கூடவே நாம் இனம்காண முடியும்...” என்று நூலாசிரியர் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார். சரியான ஒப்புமைதான்.
நெல்லைச் சீமை விடுதலை வேட்கையை விதைத்த பூமி. வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் வ.உ.சி.சுப்பிர மணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா என இது விரியும். ஒட்டப்பிடாரத்தில் உலகநாதரின் மகனாகப் பிறந்து கல்வி கற்று வழக்கறிஞரானார். சட்டமும், நீதியும் அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்தது; அங்கே புகழ்பெற்ற வழக்கறிஞரான அவரைத் தொழிற்சங்கம் அழைத்தது தொழிற்சங்கத் தலைவரானார். பிறகு தேசம் தம் விடுதலைக்காக அவரை அழைத்தது. விடுதலைப் போராட்ட வீரரானார்.
ஆசியாவின் முதல் தொழிலாளர் சங்கம் எனப்படும் ‘சென்னைத் தொழிலாளர் சங்கம்’ 1918இல் தொடங்கப் படுவதற்கு முன்பே தூத்துக்குடி பவள ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தைத் தலைமை தாங்கிச் சிறப்பாக நடத்தியவர் வ.உ.சி. தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது அவர்களது குடும்பத்தையும் காத்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் சிறந்த தமிழறிஞராகவும், படைப்பாளியாகவும், சிந்தனை யாளராகவும் விளங்கிய பன்முகம் கொண்ட மாமனிதர். சிறைக்கோட்டத்தில் செக்கிழுக்க வைத்து சித்திரவதை செய்யப்பட்ட கொடுமையை விட, சிறை வாழ்வுக்குப் பிறகு அவர் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமா?
எந்த நேரத்திலும் யாருடனும் சமரசம் செய்து கொள்ளாத தனித் தலைவராகவே வாழ்ந்தார். காந்தியாரின் தலைமை அறிவித்த சில கட்டளைகளை அவர் ஏற்க விரும்பாததால் காங்கிரஸ் கட்சியை விட்டும் வெளியேறத் தயங்கவில்லை. விடுதலை பெற்ற பிறகும் அரசியல், சமுதாயம், சமயம் ஆகிய எல்லா இடங்களிலும் இறுதி வரை எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறு அவருடையது. இவரது தியாக வரலாற்றைக் காவியமாக்கியதே பாராட்டுக்குரியதுதான். மரபுக் கவிதையில் ‘எண்சீர் விருத்தங்கள் அழகு செய்கின்றன. நூல் முழுவதும் எளிமை, இனிமை, உவமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. எடுத்தால் படிக்கலாம்; படித்தால் முடிக்கலாம்.
காவியத்தை ஐந்து பாகங்களாகப் பிரித்திருக்கிறார். இளமை, இல்லறம், போர்க்களம், சிறைக்களம், எதிர்நீச்சல் என்பன அவை.
“குறிஞ்சிமுதல் ஐந்நிலமும் குலவும் பூமி
குவியலாய்ப் பருத்திவிளை கின்ற பூமி
உறிஞ்சுகிற தன்னலத்தின் நிழல்ப டாத
உழைப்பாளர் வியர்வையிலே தழைக்கும் பூமி
அறிஞர்தம் ஞானத்தை விதைத்து நாற்றாய்
அறிவையே சாகுபடி செய்யும் பூமி
வறிஞரும்தம் மனநந்த வனத்திற் பூத்த
மலர் அன்பால் வரவேற்கும் நெல்லை பூமி”
என்று காவிய நாயகர் பிறந்த பூமியை அறிமுகம் செய்வதே அழகு.
“பாஞ்சாலங் குறிச்சிக்குப் பக்கத் தூரில்
பாட்டுக்கு மீசைவைத்த பார தித்தீ!
ஊஞ்சலிட்ட எட்டயா புரத்தின் தெற்கே
ஒட்டப்பி டாரத்தில் உதித்த தித்தீ!”
என்று காவிய நாயகனைப் புரட்சித்தீயாக உருவகம் செய்கிறார். இவர் மாஞ்சோலைக்குள் பாடும் குயிலாகவும், மானிடத்தை அடைகாத்த வெயிலாகவும் கவிஞர் பாடுகிறார்.
இந்த விடுதலை வீரர் வழக்கறிஞராகிப் புகழ் பெற்றபோது திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வள்ளியம்மை என்ற அந்த மணமகளை இப்படிப் பாடுகிறார்:
“புதுவானில் முழுநிலவு எழுந்தாற் போலும்
பொய்கையில் செந் தாமரையே மலர்ந்தாற் போலும்
மதுமலரின் மணம் நடந்து விரித்தாற் போலும்
வைகையிலே புதுப்படகு தவழ்ந்தாற் போலும்
மெதுவாக மயில்நடந்து வந்தாற் போலும்
மின்னலொளி திரட்டிஉருச் செய்தாற் போலும்
இதுவரைக்கும் சொல்லியபெண் இலக்க ணத்திற்
கிலக்கியமாய் உருவெடுத்த சுவையின் செல்வி”
என்பது அந்த அழகிய பாடல்.
அக்காலம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது நாடு. அடிமை நாட்டிலும் ஆங்காங்கு சுதேசிப் பற்று உருவாகிக் கொண்டிருந்தது. சிதம்பரனாரின் மனதிலும் விடுதலைத் தீ புகைய ஆரம்பித்தது.
“இந்தியா எம்நாடு. அதனை வெள்ளை
இனம்அடிமை கொள்கிறது. அடிமை என்ற
பந்தத்தை அறுத்துவிடு தலைக்கோ வில்போய்ப்
பண்புவளர் தாயகத்தை வணங்கல் வேண்டும்”
என்று இவர் சிந்தனை செய்கிறார்; செயல்படுத்துகிறார். வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டவும் முடிவு செய்கிறார். கப்பல் வாங்குவது என்றால் அது எளிய செயலா, என்ன?
“பல்லாண்டு பிள்ளையின்றி வருந்தும் பெண்ணாள்
பாங்காய் ஓர் மகப்பேற்றில் இரண்டு பிள்ளை
சொல்லுபுகழ் மிகப்பெற்ற பெருமை போலச்
சுதந்திரத்தில் வேட்கைகொண்ட இந்தி யத்தாய்
நல்லகப் பல் காலியாவும் லாவோ வும் இஞ்
ஞாலமே வணங்கவரும் காட்சி கண்டு
சொல்லரிய ஆனந்த வயப்பட் டாளே
தொழிலுரிமைத் தோற்றுவாய் நயப்பாட் டாலே!”
என்று இதனைப் பாடுகிறார்.
எட்டுத் திக்கும் கொடிகட்டி ஆளும் ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் விடுவதா? ஆதிக்கம் இதனை அனுமதிக்குமா? சிங்கத்தைச் சிறைக்குள் தள்ளியது.
“அலைகளுக்கு விலங்குண்டா? அலையை மோதி
அடிக்கின்ற காற்றுக்கு விலங்கும் உண்டா?
உலைகொதித்தால் மூடிவைக்கும் விலங்கே உண்டா?
உண்மைக்கு விலங்குண்டா? உயர்ந்தோர் நெஞ்ச
நிலைதடுக்கும் விலங்குண்டா? அறிவே ஓங்கி
நிமிர்ந்தெழுந்தால் விலங்குண்டா? அறத்தைத் தின்று
கொலை வளர்க்கும் இலண்டன்வாழ் நரிக்கூட் டத்தின்
கொடுமைகளா விலங்காகும் சிங்கத் திற்கே!”
என்று உவமைகளை அடுக்கிக் கேள்விக்கணை தொடுக்கிறார் கவிஞர்.
வீறுகொண்டு எழுந்துவரும் விடிவெள்ளியை மின்மினிகள் விலங்கிட்டுச் சிறையில் பூட்ட முடியுமா? நெல்லைச் சீமை புரட்சித் தீயால் பற்றி எரிகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். ஆங்கில அரசு சிதம்பரனாரைக் கைது செய்து, வழக்கு தொடுத்தது. அதன் தீர்ப்பு, சிதம்பரனாருக்கு 40 ஆண்டுகளும் சுப்ரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இதுபற்றிக் கவிஞர் பாடுகிறார்:
“அறைகுண்டத் தில்சீதை புகுந்த தேபோல்
அடிவயிற்றில் கோடிமின்னல் செருகி னாற்போல்
கனக்குகையில் நூற்றாண்டு இருள் சேர்ந் தாற்போல்
கடல் அள்ளும் மனோவேகப் புயல்வீச் சேபோல்
சினக்கூண்டாய்ப் புரண்டுபுவி கவிழ்ந்த தேபோல்
திசைஎட்டும் இடிந்துதலை வீழ்ந்த தேபோல்
வனக்காடு முற்றும்தீப் பற்றி னாற்போல்
மாக்கடலெல் லாம்திரண்டு வந்த தேபோல்...”
தீர்ப்பு கூறப்பட்டதாகக் கவிஞர் ஆற்றாமையால் பாடுகிறார். சிறையில் செக்கிழுக்க வைத்தபோது, செக்கடியில் நீதி செத்ததாகவே கவிஞர் மனம் துடிக்கிறது.
“தோளெல்லாம் சுமந்தவரை நுகத்த டிக்கே
சுமக்கவிட்டார்! செக்கடியில் சாகும் நீதி!”
என்று பாடுகிறார்.
தேசத்துக்காகச் சிறை சென்று, செக்கிழுத்து, சித்திரவதைபட்டு விடுதலையான அவர், மறுபடியும் வாழ்க்கையிலும் வறுமைச் சிறையுள்ளே வதைபட்டார். வாழ முடியாமல் அவர் தவித்த தவிப்பையே ‘எதிர்நீச்சல்’ என்று கவிஞர் எழுதுகிறார்.
“அணையாத விளக்கொன்று அணைய, உள்ளம்
அனைத்திலுமே துயர்பற்றி எரிய, இன்பம்
இணையில்லா யாழொன்று முரிய, திக்கு
எங்குமுள்ள இருள்வந்தே செறிய, வானில்
துணையாகக் கதிர்மதியும் உதிர, நாக்கு
சொல்லவரும் சொல்லங்கே உறைய, எங்கும்
பிணையில்லாப் பறவைகளே புலம்ப இங்கு
பேருயிரின் உள்மூச்சு வழிதப் பிற்றே”
என்று அந்த விடுதலை வேங்கையின் மரணத்தை வேதனையுடன் குறிப்பிடுகிறார். இறுதிப் பாடலில் ‘சிதம்பரனார் சாகவில்லை’ என்று முடிக்கிறார்.
“கவிதையை, ரசிப்பவனும் கவிஞனே!” என்ற இப்சன் மொழிபோல் உங்கள் 3632 வரிக் காவியக் கவிதைகளை ரசித்து ரசித்து வாசித்தேனே தவிர நடையில் துள்ளல், மொழியின் நளினம், நாட்டுப் பற்றின் ஆழம், தேச பக்தர்கள் மீதுள்ள பாசம், தமிழின் தாக்கம் பொங்கி வழிவதை அறிந்தேன் - என இளசை அருணா கூறும் அனுபவமே படிக்கும் எல்லோருக்கும் ஏற்படும்.
இது கப்பலுக்கு ஒரு காவியம் அல்ல; கப்பல் ஓட்டிய தமிழனுக்குத் தமிழ் கூறு நல்லுலகம் நன்றியுடன் படைத்தளித்துள்ள ஒரு காவியக் காணிக்கை.
கப்பலுக்கொரு காவியம்
(வ.உ.சி. வரலாறு - கவிதையில்)
ஆசிரியர் : வாய்மைநாதன்
வெளியீடு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.,
விலை : ரூ.90.00
No comments:
Post a Comment