வ.உ.சிதம்பரனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். அதன் அருகிலே தான் கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங் குறிச்சி உள்ளது. கவியரசர் பாரதி பிறந்த எட்டய புரம், வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடாரத்திற்கு வடக்கே எட்டு மைல் தொலைவில் உள்ளது.
இந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரில்தான் உலக நாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாக தியாக தீபம் வ.உ.சிதம்பரனார் 1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வியாழக் கிழமை பிறந்தார்.
1888இல் தூத்துக்குடியில் ஒரு தனவந்தரால் கோரல்மில் என்கிற பெயரில் ஒரு மில் கட்டப் பட்டது. அந்த கோரல் மில்லில் அப்போது 1695 பேர் வேலை செய்தார்கள். உழைத்து உழைத்து ஓடாய்ப் போன அத்தொழிலாளர்களை ஆங்கிலேயர்கள் கூலிகள் என்ற பெயரில் அடிமைகளாக நடத்தினர். நாள் ஒன்றுக்கு 14 மணி நேர வேலை. ஒருநாள் கூட விடுமுறை கிடையாது. உழைப்பிற்கேற்ற ஊதியமே கொடுக்கப்படவில்லை.
கோரல்மில் தொழிலாளர்கள் தமக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கித் தவித்தனர். வ.உ.சிதம்பரனாரிடம் சொல்லிக் கண்ணீர் வடித்தனர். விளைவு, வ.உ.சி.யும் சிவாவும் தொழிலாளர்களிடையே உணர்ச்சியூட்டும் எழுச்சி உரை ஆற்றினர். 27.12.1908 இல் கோரல்மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
தொழிலாளர்கள் பட்டினி கிடந்தனர். அவர்கள் குடும்பத்திற்குச் சோறு போட வ.உ.சிதம்பரனார் பல வழிகளிலும் உதவினார். தன்னுடைய மனைவி அணிந்திருந்த நகைகளை விற்று அவர்களுடைய பசியைத் தணித்தார்.
அன்றைய சப் கலெக்டர் ஆஷ் வ.உ.சி.யை மிரட்டினான். மிரட்டினால் பணியுமா சிங்கம்? பிறகு தன் பங்குக்கு கலெக்டர் விஞ்ச் துரையும் வ.உ.சி.யைக் கூப்பிட்டு மிரட்டினான். சுதந்திர வேங்கை இதற்கெல்லாம் பயப்படுமா?
தூத்துக்குடியில் ஒரு புயலையே உருவாக்கி விட்டனர் வ.உ.சி.யும், சுப்ரமணிய சிவாவும்.
வெள்ளையர் உணவு உண்ண உணவுப் பொருள்கள் தர வணிகர்கள் மறுத்தனர். சலவைத் தொழிலாளர்கள், நாவிதர்கள், கழிவுப்பொருள்களை அகற்றுபவர்கள் என அனைவருமே ஆங்கிலேயர் களுக்குக் காரியம் ஆற்ற மறுத்தனர். ஆளும் வர்க்கம் செய்வதறியாது திகைத்தது.
அடிமைகளாக இருந்த மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்தது வ.உ.சி.யின் வீரம் செறிந்த எழுச்சி உரைகளும் தன்னலமில்லாத் தொண்டு உள்ளமுமே ஆகும். இறுதியாக சத்தியம் வென்றது. கோரல்மில் நிர்வாகம் பணிந்தது, சிதம்பரனாரை அழைத்துப் பேசியது; வேலை நேரம் குறைக்கப் பட்டது. ஊதிய உயர்வும் கொடுக்கப்பட்டது. வெற்றிப் புன்னகையோடு வீரம் செறிந்த போராட்டம் நடத்தி 1909, மார்ச் 7 ஆம் நாள் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
தொழிலாளர்களின் சேனைத் தலைவரைத் தொழிலாளர்கள் வாயார வாழ்த்தினர். தூத்துக்குடி நகரமும் வ.உ.சி.யைப் போற்றிப் புகழ்ந்தது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவர். அவ்வாறே வ.உ.சிதம்பரனாரும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவராகவே வாழ்ந்தார். சிதம்பரனார் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விருதுநகர் ராமையா தேசிகரைத் தம்முடைய இல்லத்தில் வைத்துக் காப்பாற்றி வந்தார். அவர் இரண்டு கண்களும் குருடான துறவி. சிதம்பரனார் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் உற்றார் உறவினரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளானார். மனம் தளருவாரா அந்த மாவீரர்?
இந்திய வியாபாரிகளை நசுக்கும் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் கொட்டத்தை அடக்கத் துணிந்தார் வ.உ.சி.; இந்திய வணிகரின் ஆதரவைப் பெற்று 1906ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றை நிறுவ முயன்று துணிந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவரான பாண்டித்துரைத் தேவரை கம்பெனியின் தலைவராக்கி, செயலாளர் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டார் சிதம்பரனார்.
பம்பாய் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு போதுமான பணம் திரட்டிய பின்னர் “காவியா” என்ற கப்பலை வாங்கினார். பின் “லாவோ” என்ற மற்றொரு கப்பலையும் பிரான்சிலிருந்து வேதமூர்த்தி மூலம் வாங்கி, ஒரே கால கட்டத்தில் இரு பெரும் கப்பல்களையும் வெள்ளையனுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் கொண்டுவந்து நிறுத்தினார். இந்தச் செயற்கரிய காரியம் செய்த வீரரை, சாதனை யாளரைப் பத்திரிகைகள் பாராட்டிப் புகழ்ந்தன.
வ.உ.சி.யை வெளியே விட்டு வைத்தால் ஆங்கில சாம்ராஜ்யத்திற்கே சாவு மணி அடித்துவிடுவார் என்று பயந்த ஆங்கிலேய அரசு இவரையும் சுப்ர மணிய சிவாவையும் கைது செய்தது. இறுதியாக வ.உ.சி.யின் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 07.07.1908 அன்று வெளியானது. அரச நிந்தனைக் குற்றத்திற்காக இருபது வருடமும், சுப்ரமணிய சிவாவுக்கு அடைக்கலம் தந்தமைக்கு இருபது வருடமும் தண்டனை விதித்த ஆங்கிலேய அரசு தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக - அதாவது, மொத்தத்தில் நாற்பது ஆண்டுகள் கடும் தண்டனை விதித்தது.
சட்ட ஞானம் பெற்ற வழக்கறிஞரை, சுதந்திர தீ மூட்டிய அரசியல் தலைவரை, கப்பலோட்டிய கர்ம வீரரை, ஏழைகள் பால் இரக்கம் கொண்ட ஏந்தலை, செந்தமிழ் வள்ளல் சிதம்பரனாரை, கொலையும், கொள்ளையும் புரிந்த கொடியவர் களான சமூக விரோதிகளோடு நாற்பதாண்டுகள் பூலோக நரகமான அந்தமான் தீவில் வாழுமாறு நீதிபதி பின் வேறு தீர்ப்பளித்தார்.
முப்பத்தைந்தே வயதுடைய வாலிபப் பருவத் தினரான வ.உ.சி. அவர்கள், தாய் தந்தையரையும், இளம் மனைவியையும் இரு பச்சிளங்குழந்தை களையும் பிரிய நேரிட்டது. சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட கொடுமையான தண்டனையைக் கேட்டு வ.உ.சி.யின் தம்பியான மீனாட்சிசுந்தரம் பைத்தியமானார். அவர் இறக்கும் வரை பித்தனாகவே இருந்து மாண்டார்.
சிதம்பரனார் தமது தண்டனைக் காலத்தை கோயமுத்தூர், கண்ணனூர் சிறைகளில் கழித்தார். மாடு போல் அல்ல மாடாகவே செக்கிழுத்தார். சிறையில் கல்லுடைத்தார். சிதம்பரனாரின் நண்பரான பாரதி இதைக் கேட்டுக் கண்ணீர் வடித்தார். இதோ அவருடைய கண்ணீர்க் கவிதை:
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப் பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண் கிலையோ
மாதரையும் மக்களையும் வன்கண்மையாற் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ!
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண் கிலையோ
மாதரையும் மக்களையும் வன்கண்மையாற் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ!
தீவிரவாதிகளின் தலைவரான திலகரே வ.உ.சி.யின் அரசியல் குரு. வ.உ.சி. தன்னுடைய கடைசிக் காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். சென்னையில் இருந்தபோது அரிசி வியாபாரம் செய்து பிழைப்பை ஓட்டினார்.
ஆத்திகரான வ.உ.சிதம்பரனார் உயிர்விடுந் தருவாயில் தேவாரத்தையோ, திருவாசகத்தையோ பாடச்சொல்லிக் கேட்கவில்லை. மாறாக, பாரதியின் நாட்டுப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர்நீத்தார்.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது மிந் நாடே” என்று தொடங்கும் பாடலும்” “என்று தணியுமெங்கள் சுதந்திர தாகம்” என்ற முதலடி கொண்ட பாடலும்தான் வ.உ.சிதம்பரனார் கேட்ட கடைசிக் கவிதைகள்.
“சாவதற்கு முன்னர் சுதந்திரத்தைக்
காணக் கொடுத்து வைக்காமற் போனேனே!”
காணக் கொடுத்து வைக்காமற் போனேனே!”
என்று கண்களில் கண்ணீர் மல்கக் கூறிய சொற் களே அவர் மொழிந்த கடைசிச் சொற்கள்.
(உங்கள் நூலகம் செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)
No comments:
Post a Comment