கப்பலோட்டிய தமிழர் என்ற அளவுக்கு மட்டுமே, வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியும். நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட திலகரைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர் வழி நடந்த பெரும் தியாகி வ.உ.சிதம்பரனார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி உலகநாதர்-பரமாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வ.உ.சி.யுடன் பிறந்தவர்கள் அறுவர். வ.உ.சி.யும், சகோதரர் மீனாட்சிசுந்தரமும் எஞ்சியவர்கள்.
ஒட்டப்பிடாரத்தில் தொடக்கப் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய சிதம்பரனார், திருச்சியில் சட்டம் பயின்று 1894-இல் வழக்குரைஞரானார். 1895-ஆம் ஆண்டு வள்ளியம்மாள் என்பவரை திருமணம் புரிந்துகொண்டார். ஆனால், 1902-இல் வள்ளியம்மாள் மறைந்தார். அக்கால வழக்கப்படி மீனாட்சி என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார்.
ஆன்மிகம், இலக்கியம், அறநெறி ஆகியவற்றை வளர்ப்பதற்காகவே "விவேகபானு' என்ற இதழை நண்பர்களின் முயற்சியுடன் தொடங்கினார். இலக்கிய, ஆன்மிக ஈடுபாட்டுடன் திலகரின் கொள்கையில் அவர் ஈர்க்கப்பட்டதால் நாட்டுப் பற்று மிக்கவரானார். "திலக மகரிஷியின் கதைபாடும் - போது சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும்' என்று நாமக்கல் கவிஞர் எழுதுகிறார். திலக மகரிஷியைப் பற்றி அரிய நூலொன்றை சிதம்பரனார் இலங்கை வீர கேசரி இதழில் தொடர்ந்து எழுதினார்.
மகாகவி பாரதியின் எழுத்துகள் அவரைக் கவர்ந்தன. சென்னையில் பாரதியை முதன் முதலில் சந்தித்தார். அதன் பிறகு அவருக்குச் சுதந்திர வேட்கை அதிகமானது.
வெள்ளையர் ஆட்சியை முறியடிக்க, மேல்நாட்டுப் பொருள்கள் பகிஷ்காரம், அஹிம்சை வழி ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுதல் தவிர, பொருளாதார ரீதியில் பிரிட்டிஷ் கம்பெனியுடன் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. நாமே ஏன் கப்பல் கம்பெனி ஒன்று தொடங்கி கப்பல் விடக்கூடாது என்ற எண்ணம் சிதம்பரனாருக்கு உதயமானது.
வாடகைக் கப்பல் வாங்க, வ.உ.சி. பம்பாய் சென்றார். திலகரின் உதவியுடன் காலியோ, லாவோ என்ற பெயருடைய இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கினார். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி கப்பல் கம்பெனி ஒன்று பதிவு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடியில் "கோரல் மில்' என்ற நூற்பாலை 1888-ஆம் ஆண்டு உருவானது. கடுமையான வேலைப் பளுவாலும், குறைந்த ஊதியத்தாலும் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். தொழிலாளர் நலச் சட்டம் இல்லாத காலம். விடுமுறை நாள்களில் சம்பளம் கிடையாது. குறிப்பிட்ட வேலை நேரம் கிடையாது. தவறு செய்யும் தொழிலாளர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. தொழிலாளர்களால் கொடுமையைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. வெளியே சொல்லவும் முடியவில்லை. தொழிற்சங்கம் ஏற்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சிவா தூத்துக்குடிக்கு வந்தார். அவர் சிறந்த பேச்சாளர், கனல்கக்கப் பேசுபவர். சிதம்பரனாரும் அவரும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால்தான், அவர்கள் பிரச்னைதீரும் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுடைய அடிப்படை உரிமையை எடுத்துக் கூறி அவ்வப்போது கூட்டங்கள் நடத்தினர்.
இறுதியாக, "கோரல் மில்' தொழிலாளரிடையே சிவாவும், வ.உ.சி.யும் வேலை நிறுத்தம் செய்யுமாறு கனல்வீசச் சொற்பொழிவாற்றினர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தம் போராட்டமாக மாறியது. வேலை நிறுத்தச் செய்தி இந்தியா எங்கும் பரவியது. இந்த வாய்ப்பை, தேச விடுதலைப் போராட்டத்தோடு இணைத்தார் வ.உ.சி. தூத்துக்குடி நகரமே குலுங்கியது. நிலைமை மோசமாவதைக் கண்டு மில் முதலாளிகள் பணிந்தனர். தொழிலாளர்கள் மகிழ்ந்தனர். போராடினால்தான் வெற்றி பெறுவோம் என்ற வேலை நிறுத்த இயக்கம், மற்ற தொழிலாளர்களிடையே பரவாதிருக்க மற்ற முதலாளிகள் சிலரும் தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்கத் தொடங்கினர். வ.உ.சி.யின் வாழ்க்கையில் தொழிலாளர் போராட்டம் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
விபின் சந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாடும் கூட்டத்தை நடத்தக்கூடாது என்றும், ஊர்வலம் நடத்தக்கூடாது என்றும் தூத்துக்குடி மாஜிதிரேட் தடை உத்தரவு பிறப்பித்தார். வ..உ.சி. உத்தரவை மதிக்கவில்லை. நேரே வந்து சந்திக்குமாறு கலெக்டர் கடிதம் அனுப்பினார். கலெக்டர் விஞ்சுவை வ.உ.சி. நேரே சந்தித்தார். அவருடன் பத்மநாப ஐயங்கார் என்பவரும் சென்றார். சந்திப்பில் விஞ்ச், சிதம்பரனாரை மிரட்டினார். விஞ்ச் - சிதம்பரனாரது இந்த சந்திப்பை பாரதியார் கவிதையாக எழுதினார். அந்தக் கவிதையை இன்றைய தலைமுறையினரும் ஒருமுறை படிக்க வேண்டும்.
""சதையைத் துண்டு
துண்டாக்கினு முன் எண்ணம்
சாயுமோ-ஜீவன் ஓயுமோ
இதயத்துள்ளே இலங்கு மகா சக்தி
யேகுமோ நெஞ்சம் - வேகுமோ''
என்று கடைசியில் சிதம்பரனார் பதில் கூறுவதாக அமைந்த கவிதை வரிகள் அஞ்சா நெஞ்சினராய் சிதம்பரனார் கூறும் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
வ.உ.சி. கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி பாரத தேசமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊர்களிலும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.
சிதம்பரனாருக்கு மட்டும் ஜாமீன்தர தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் முன்வந்தனர். "சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய இருவருக்கும் ஜாமீன் கொடுத்தால்தான் நான் வெளியே வருவேன்' என்று சிதம்பரனார் தனக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை மறுத்தார். "சிதம்பரம் பிள்ளையின் பெருங்குணம்' என்று அன்றைய ஒரே தேசிய இதழான "சுதேசமித்திரன்' பாராட்டி எழுதியது.
சென்னை உயர் நீதிமன்றம் வ.உ.சி., சிவா, பத்மநாபன் மூவரையும் ஜாமீனில் வெளியேவிட உத்தரவிட்டது. ஆனால், வெளியே வந்த சிதம்பரனாரையும், சிவாவையும் சிறை வாயிலிலேயே அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. அவர்கள் மீது ராஜ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
1908-இல் இந்தத் தீர்ப்பு (இரட்டை தண்டனை) வெளியானதைக் கேட்ட அவர் சகோதரர் மீனாட்சிசுந்தரம் மன அதிர்ச்சிக்கு உள்ளானார். 1943-இல் மரணம் அடையும் வரை அவர் மனநிலை சரியாகாமலேயே பித்தராக வாழ்ந்தார்.
வ.உ.சி. தன் வரலாற்றில் முதல் பகுதியைக் கோவைச் சிறையிலும் இரண்டாம் பகுதியை விடுதலைக்குப் பிறகு சென்னையிலும் எழுதினார்.
சிறைச்சாலையில் கொடூர தண்டனைக்கு இடையே
பல நூல்களை எழுதினார், ஜேம்ஸ் ஆலனின் "அகமேபுறம்' நூலை மொழிபெயர்த்தது வ.உ.சி.யின் சிறந்த சாதனை. பொருளாதாரப் புரட்சியின் மூலம் பிரிட்டிஷ் அரசைப் பணியவைக்கும் நோக்குடன் கப்பல் கம்பெனியைத் தொடங்கியதால் "கப்பலோட்டிய தமிழர்' என்ற பெயர் அவருக்கு நிலைத்தது.
சிதம்பரனாருக்குத் திருக்குறளின் மீது பெருமதிப்பும், பக்தியும் உண்டு. மணக்குடவர் உரையின் அறத்துப்பாலை மிக எளிமைப்படுத்தி வெளியிட்டார். தொல்காப்பியத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டால் எழுத்ததிகாரத்தை எழுதி வெளியிட்டார்.
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் எனும் நூல் பதினான்கு மெய்ப்பொருள் நூல்களுள் ஒன்றாகும். திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் எனும் நூல்கள், நீதி நூல்களிலும் சிந்தாந்த நூல்களிலும் வேதாந்த நூல்களிலும் உயர்ந்தவை என்பது சிதம்பரனாரின் கருத்து. "திருக்குறள், சிவஞானபோதம் இவற்றின் உரைகள் கடினமானவை. மக்கள் படிக்கவே அஞ்சினார்கள். எனவே, எளிய நடையில் அவற்றுக்கு உரைகள் எழுத எண்ணினேன்' என்று கூறுகிறார் சிதம்பரனார்.
"என்று தணியுமிந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியாரின் பாடலைக் கேட்ட வண்ணமே "வாராது வந்த மாமணியாம்' சிதம்பரனார் 1916-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி இரவு உயிர் நீத்தார்.
தேசபக்தராகவும், படைப்பிலக்கிய மேதையாகவும், ஒழுக்கக் குன்றாகவும், பாரதம், ராமாயணம் போல் பெருங்காப்பியம் எழுதும் அளவுக்கு காப்பியத் தலைவராகவும் திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் திறமை, பெருமை, அருமை இந்தக் கால, வருங்கால இளைஞர்களுக்குப் புரியும்.

No comments:
Post a Comment