Pages

Thursday 5 September 2013

வ.உ.சி வாழ்வும் பணியும்

வ.உ.சிதம்பரனார் என்ற ஒரு மனிதரின் வாழ்வும் பணியும் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டது என்றால் அது மிகை ஆகாது. “கப்பலோட்டிய தமிழன்” என்று அவரை இந்திய தேசியத்தில் இருந்து அப்புறப்படுத்திய அவலம். அவரது தொலை நோக்கு பார்வை குறித்த ஆழ்ந்த புரிதல் இல்லாத சமூகம், அவரது பரந்துபட்ட சமூக அரசியல் பணியை, குறைவாக மதிப்பிட்டதுடன் மறக்கவும் மறைக்கவும் முற்பட்டது. இது ஏன்? அவர் காலத்தின் முன்னோடியாக இருந்தவர். மனித நேயத்தை முதன்மைப்படுத்தி சமூக வாழ்வில் உள்ள அனைத்தையும் எடை போட்டவர். அவர் சம காலத்தவர்களால் சகிக்க முடியாத பல தொலை நோக்கு பார்வை கொண்டவர். அரசியல், சமூகம், பொருளியல், தொழிளாளர் நலன், சமயம், இலக்கியம் இதில் எதிலும் ஒரு முற்போக்கு சிந்தனையுடன் செயல் பட்ட தளகர்த்தர்.
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு தன்னூக்கம் கொண்ட மாபெறும் செயல் வீரர். தனது கொள்கைக்கு முரன் என்றால் ஒதுங்கும் குணம் கொண்டவர். பல்வேறு தளத்தில் இயங்கிய தேசிய போராட்டத்தில் ஒருமுக சிந்தனையுடன் செயல்பட்டவர். அவரது வாழ்கையின் பணிகள் அனைத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சொல் திறன் கொண்டவர். கற்பவை பழுதற கற்றார். கற்றவை அனைத்தும் சமூகத்திற்கே என்றார்.
மனித நேயத்தை முதன்மைப்படுத்தியதால் தனது சமய கொள்கையிலும் அனைவரது எதிர்ப்பையும் தேடிக்கொண்டார். இவரது சிவஞான போத விளக்கவுரையும் அதனை தொடர்ந்த சர்ச்சைகளும் அதற்கு அவரது பதிலுரைகளும் சைவ மதத்தை பின் பற்றும் பிற்போக்காளர்களின் (கடுஞ்சைவர்) கோபத்திற்கும் தூற்றலுக்கும் ஆளானார். இருப்பினும் தன் நிலையில் இருந்து மாறாதவராய் இருந்தார் என்பது அவரது நேர்மைத்திறத்தை காட்டுகிறது.
தான் கைது செய்யப்படும் முன் அவர் செய்து வந்த சமூக, அரசியல் பணிகள், கூட்டுறவு சங்க வளர்ச்சிகள் (இது ஒன்றே சாதி மதங்களால் பிரிந்து கிடக்கும் மக்களை உழைக்கும் வர்க்க நெறி முறையில் ஒன்றிணைக்க முடியும் என்பது அவரது நேர்மையான முடிவு), விவாசாயத்திலும் கூட்டுறவு வளர்ச்சி, அதற்காக தரிசு நிலங்களை சேகரித்து, நவீன முறை சாகுபடி திட்டங்களை, விவசாய பயிற்சி அளிப்பது, மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்விக்கு வழி வகை செய்தல், துறைமுகம் சார்ந்த தொழிலும் கப்பல் மாலுமிகள் பயிற்சிக்கூடம் அமைப்பதும் அதற்கான முன் முயற்சிகள் மேற்கொண்டது, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் ஒருங்கினைப்பு, சுதேசி தொழில் அபிவிருத்திகள், ஜப்பானிய நாட்டினருடன் கூட்டுத்தொழில் முயற்சி (இது இயல்பாகவே வெள்ளை எதிர்ப்பு கொண்ட எதிர் வினை) என்று, அவர் ஓயாது சிந்தித்து செயல் பட்டவை எல்லாம் நாம் இன்று “கப்பலோட்டிய தமிழன்” என்று குருக்கிவிட்ட அவலம் மிகவும் வேதனையானது. அத்துடன் அவரது தேசிய அரசியல் பங்களிப்பும் மறைக்கப்பட்டது.
பட்டத்து யானையாக சிறைபுகுந்த பெருந்தலைவன், சட்டத்தால், வெள்ளையனின் வன்மத்தால் சிறைக்கூடத்தில் வதை பட்டு வெளிவந்த போது சிங்கமென தோள் கொடுத்து அவருடன் சிறை புகுந்த வீரமிகு சுப்ரமண்ய சிவா என்ற ஒரு மன சாட்சி வரவேற்க, தன் நிழல் சார்ந்தவர் வேறு யாரும் இல்லாமல் இருந்த வரலாறும் நமக்குத்தான்.
இந்த தியாகசுடரின் வாழ்வை தற்காலத்தில் தேடி பதிவு செய்தவர்கள், பேராசிரியர் நா.வானமாமலை அவர்களும், பேரா:ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களும், பேரா:ஆ.சிவசுப்ரமணியன் அவர்களும், ஈழத்து அறிஞர் கௌரி காந்தன் அவர்களும் ஆவார்கள். தன் சுய சரிதையை அவர் செய்யுளாக வடித்து வைத்தது, அந்த கையேட்டுப்பிரதிகள் நமக்கு அவரைப்பற்றியும் அவரது அற நெறி வாழ்வும் மகாகவி பாரதியின் பாடல் பதிவுகள் மூலமும் கிடைக்கப்பெறுகிறோம்.
இனி கால வரிசைப்படியான அவரது வாழ்வும் பணியையும் பார்ப்போம்.
இளமைக்காலம் : பிறப்பு – ஓட்டப்பிடாரம், 05-09-1872. சிறு வயதில் கல்வியில் அதிக நாட்டம் இல்லை என்பதே அவரது தந்தையும் குடும்பத்தாரும் இவரைப்பற்றி பதிவு செய்தது. திண்ணைப்பள்ளி, துடுக்குத்தனம், விளையாட்டு ஆர்வம் இவையெல்லாம் அவரது தந்தையின் மனம் கவலை கொள்ள வைத்தது. பின்பு ஆங்கிலக்கல்வி உள்ளூரிலேயே இரண்டு ஆண்டுகள் கற்று பின்பு, தூத்துகுடியில் புனித சேவியர் பள்ளியில் கல்வி முடித்து தகப்பனார் விருப்ப படி தாசிதார் அலுவலகத்தில் குமாஸ்தாவாக சேர்ந்தார். வேலையும் உள்ளூர், வீட்டிலேயே இருந்து அலுவலகம் சென்று வந்தார். இது ஓராண்டு நீடித்தது. ஒரு வெள்ளை ஆட்சியில் மனிதர்கள் சுகமான சோம்பலுடன் அடிமை வேலை பார்ப்பதை விரும்பவில்லை. தந்தையிடமே அவர் பார்க்கும் வழக்கறிஞர் படிப்பிற்கு வகை செய்து தரச்சொன்னார். அதன் பேரில் திருச்சிராப்பள்ளி கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்ற புகழ் பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று தேர்வு எழுதி “சன்னது” என்ற அனுமதி பெற்று வழக்கறிஞராக பணி புரிகிறார்.
இது காலத்திலேயே அவர் தனது மனசாட்சியின் படி தன் நகர்வுகளை முடிவெடுக்கிறார். வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அதிகார வர்கத்தால் பாதிக்கபடும் ஏழைகள், காவல் துறையின் அநீதிகள், உள்ளூர் முக்கியஸ்தர்களின் எதிர் நிலையில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், குலம், பிறப்பு என்ற வகை பிரிக்காமல் வழக்கெடுத்து கச்சேரி செய்தார். பல சமயங்களில் தகப்பனார் அரசு ஆதரவாகவும் மகன் எதிர் நிலையிலும் நின்று வாதிட்டு வெள்ளை பிரபுக்களையும் திடுக்கிட வைத்து தகப்பனாரையும் சங்கடத்தில் ஆழ்த்துவார். இது போன்ற நடவடிக்கைகளால் குறிப்பாக காவல் துறையினருக்கு பெரும் எரிச்சலை கொடுத்து வந்தார்.
திருமணம் : 1895 ம் ஆண்டு வ.உ.சி – வள்ளியம்மை திருமணம் நடை பெற்றது. 1900 ம் ஆண்டு முதல் தூத்துக்குடிக்கு வழக்கறிஞராக பணி செய்ய தொடங்குகிறார். முதல் மனைவி மன நலம் குன்றிய பின் 1901ம் ஆண்டு மீனாட்சியம்மையை திருமணம் செய்கிறார்.
அறிஞர்கள் மற்றும் சைவ சித்தாந்த தொடர்பு : 1901 – 1905 ம் ஆண்டுகள் வரை வழக்கறிஞர் தொழிலுடன் தமிழ் அறிஞர் பெருமக்களுடனும், சைவ சித்தாந்த சபையிலும் தொடர்பில் இருக்கிறார். 1903ம் ஆண்டு மறைமலை அடிகள் தன் நாட்குறிப்பேட்டில் தூத்துக்குடியில் வ.உ.சி இல்லத்தில் தங்கியதையும் விருந்து பெற்றதையும் பதிவு செய்கிறார். அவருடன் தமிழ் இலக்கிய தொடர்பில் இருக்கிறார். அடிகளார் நடத்தி வந்த “ஞானசாகரம்” இதழுக்கு 1904 ம் ஆண்டு நன்கொடையளித்துள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது இனிய பேச்சாற்றலுக்கு சைவ சித்தாந்த சபையில் கலந்து உரையாற்றி பழகிமையே கூடுதல் உதவியாக இருந்தது என்று தன் சுய சரிதையில் செய்யுளாக பதிவு செய்கிறார். “சைவ சித்தாந்த சபையினுட் புகுந்து கைவர்க் கொண்டேன் கருத்தினி துரைத்தலை..” .
மதுரையில் நான்காம் தமிழ் சங்கம் தோற்றுவித்த வள்ளல் பாண்டித்துரை அவர்கள் தமிழ் சங்கத்தில் வ.உ.சி அவர்களை அழைத்து சங்கத்தின் பரிசோதக உறுப்பினராக பொறுப்பளித்தார். இவரது தொடர்பே பின் நாளில் சுதேசி கப்பல் நிறுவணத்திற்கு பேருதவியாக இருந்தது.
1905 ம் ஆண்டு கர்சன் பிரபு அவர்களின் வங்கப்பிரிவினையின் விளைவு வ.உ.சி அவர்களை தேசிய பணியில் விரைவாக ஆட்கொள்கிறது. எந்த ஒரு செயலையும் விரைந்து முடிக்கும் திறன் தன் இயல்பாக பெற்ற வ.உ.சி அவர்கள் அந்த சூழலில் தாம் எதிர் கொண்ட அரசியலையும் விவேகமாக ஏற்கிறார். அவர் ஏற்றுகொண்ட காலத்தில் இருந்த முன் / பின் அரசியல் நிகழ்வுகளை நாம் கருத்தில் கொள்வது மிகவும் நன்று.
1885 காங்கிரசு அமைப்பும் தேச விடுதலை போராட்டமும் : காங்கிரசு என்ற அமைப்பை எ.ஓ.ஹூயும் என்ற வெள்ளையர் தலைமையில் உருவானதும் அது, அதன் காலம் தொட்டு இந்தியாவில் உள்ள கடந்த கால வேலூர் சிப்பாய் முதல் புரட்சி( 1806 ) மற்றும் 1857 இரண்டாம் சிப்பாய் புரட்சி போன்ற ஒன்று, நடக்காமல் இருப்பதற்கு மக்களின் வடிகாலாக ஓர் அமைப்பு, மனுப்போட்டு கூட்டம் நடத்தி கலையும் படியான ஒரு சூழலை உருவாக்க முயல்கின்றனர். அவர்களின் பரந்து பட்ட காலனி ஆதிக்கப்பகுதிகள் கை நழுவாமல் இருப்பது முதன்மை, அத்தகைய கால கட்டங்களில் பிரித்தானிய சமூகம், பொருளாதார, மற்றும் மக்கள் போராட்டத்தினையும் எதிர்கொண்டு வந்தது விக்டோரியா ஆட்சி. கிழக்கில் இருந்து மேற்கே கதிரவன் சாயும் வரை உள்ள தங்களது நில உடமைக்கு ஆபத்து என்றால் உடன் பாதுகாக்க முடியாமையும் ஒன்று. இதன் பின்னர் தான் வங்கப்பிரிவினையை முன் மொழிந்து நிலத்தை மதத்தால் கூறு போடும் 1905ம் ஆண்டும் வந்தது. இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இரண்டு தரப்பாரிடமும் இருந்தது. அதாவது மத வேறுபாடின்றி, தங்களை வங்காளிகள் என்ற அடையாளத்தை உடைக்க இரண்டு மதத்திலும் பெரும்பாலும் சம்மதிக்கவில்லை. அது போல் பிரிவினையை ஆதரிக்கும் தலைமையும் இரண்டு பக்கமும் இருந்தது. மாட்சிமைக்குரிய கர்சன் பிரபு, நீள அகலமாய் வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து இரு தரப்பு வாதம் கேட்டார் என்று ஆவணங்கள் சொல்கின்றன. அவரது டாக்கா, சிட்டகாங்க் பயணம் இது குறித்த அரசு முறையானதும் கூட. மனுப்போடும் காங்கிரசுக்குள் சிங்கங்களும் இருந்தன. அவை அந்த அந்த பகுதிகளில் கர்ஜனை செய்வது இருக்கத்தான் செய்தது. மராட்டியத்தில் திலகர், வங்கத்தில் பிபின் சந்திரா பாலர், தமிழகத்தில் சுப்ரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார், இவர்களுக்கு தோள் கொடுத்து தாங்கி நிற்கும் பாரதியார் என்பது அந்த, அந்த கால கட்டத்தில் வெளிப்பட்டன.
சுதேசிக்கப்பல் : நீரோட்டமும்,வெள்ளோட்டமும் : தூத்துக்குடியில் இயல்பாகவே உள்ளூர் தொழில் மற்றும் வர்த்தக முனைவோர் ஒரு வாடகை கப்பல் ஒன்றை அமர்த்தி கொழும்பிற்கு கப்பல் போக்குவரத்து ஒன்றை சுதேசியாக வெள்ளோட்டம் செய்தனர். இது குறித்த பத்திரிக்கை செய்தி குறிப்பு ஒன்று அதில் வ.உ.சி அவர்களின் ஒத்துழைப்பும் வழக்கறிஞர் என்ற வகையில் இருப்பதாக அறிய வருகிறது. ஆக தூத்துக்குடி தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும் வழிகாட்டியாக மிக சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார் என்பது ஏப்ரல் மாதம் சுதேசமித்திரன் – 1906 ம் ஆண்டு இதழில் சான்று காணப்படுகிறது. இந்த முன் முயற்சி குறித்து நெல்லை மாவட்ட அப்போதைய கலெக்டர் :”இதனால் ஆவது ஒன்றும் இல்லை” என்று அறிக்கை அனுப்புகிறார். வங்கப்பிரிவினையின் எதிரொலியாக அனைத்து மாகான ஆளுனர்களுக்கும் வைசிராய் கேட்டபடி அந்த, அந்த மாவட்டத்தில் உள்ள சுதேசி இயக்கத்தை பற்றிய உளவு குறிப்புகளும், தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. அதன் படி சென்னை மாகன கவர்னர் பிரபு :சர் ஆர்த்தர் லாலே அவர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் தூத்துகுடி தவிர சுதேசி இயக்க நடவடிக்கைகள் யாதொன்றும் இல்லை என்று தகவல் வருகிறது. அப்போதும் மாட்சிமைக்குரிய சென்னை மாகன கவர்னர் பிரபு :சர் ஆர்த்தர் லாலே அவர்களுக்கு தெரியாது, தன் வாழ் நாளில், தான் ஒரு பெரிய பிரளயத்தை சந்திக்கப்போவதையும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் அது குறித்த சண்டை வாதங்கள் கிளம்பும் என்றும். அது அவர் வாழ் நாளில், ஏன் பிரித்தானிய ஆதிக்க வரலாற்றில் மறக்க வேண்டிய கெட்ட கனவு, என்பது அந்த குறிப்பு அனுப்பிய வெள்ளை ஆட்சியர் வின்ச்சிற்கும் தெரியாது.
இயற்கை, “பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெறி கட்டும்” என்பதை இந்திய அரசியல் பிரித்தானிய அரசியலார்க்கு வங்கப்பிரிவினையின் தாக்கத்தை தென் கோடியில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வரலாற்றில் பதிவு செய்தது. இந்த வரலாறு இந்திய சுதந்திர அரசியலார் மறைத்தாலும், பிரித்தானிய அரசியல் ஆவணங்கள் அழிக்கமுடியாத கரையாக பதிவு செய்து நெல்லைச்சீமையின் மக்கள் உணர்வையும் அதன் தன் நிகரில்லாத தலைமை ஏற்ற தலை மகன்கள் சுப்ரமணிய சிவாவையும், வ.உ.சிதம்பரனார் அவர்களையும் பெருமைபடுத்தி, இதை மறந்த காங்கிரசு தியாகசீலர்களின் சிறுமையையும் உறுதி செய்துள்ளது. இது ஒன்றே அவர்கள் அடைந்த துயரத்திற்கு வரலாறு தந்த ஆறுதல். வெள்ளோட்டம் கண்ட சுதேசிக்கப்பல், இனி நீரோட்டம் காணும் முன் நிகழ்ந்த ஒரு வரலாற்றுப்பதிவை பார்ப்போம். இதுவும் கால வரிசைப்படியானதே.
பாரதியார் – சிதம்பரனார் சந்திப்பு – 1906 ம் ஆண்டு : வ.உ.சி தன் வாழ் நாளில் பல நல்ல நண்பர்களை பெற்றுள்ளார். அவர்களில் என்றும் உள்ள பூர்வமான நண்பர், தன் சிந்தனைகளோடு ஒத்திசையும் ஒருவர் சுப்ரமணிய சிவா அவர்களே. அவருடன் தன் வாழ் நாள் முழுமையும் இன்ப துன்பங்களை பங்கிட்டுக்கொள்ள மற்றொரு நண்பர் ஐயத்திற்கு இடமில்லாத பார் புகழும் பாரதியே. இருவரின் தகப்பனாரும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் தங்கள் அலுவல் குறித்து வரும்போது சந்திப்பதும் அப்போது வ.உ.சி யிடம் அவர் தகப்பனார் இவருக்கு பாரதி என்ற அறிவு சால் மகன் உள்ளான் என்றும் பெருமையுடன் கூறுவதை கேட்டிருக்கிறார், இது போலவே பாரதியிடமும் அவர் தகப்பனார் உலகனாதன் மகன் நற்பண்புகள் நிறைந்த குழந்தை என்று செவிமடுக்கும் வகையில் இருந்த காணா நட்பு இது காலும் கழித்து சென்னை திருவல்லிகேனி திரு.மண்டயம் சீனிவாசாச்சாரியார் வீட்டில் நிகழ்ந்தது. மண்டயம் சீனிவாசாச்சாரியார் “பாரதியை” ஆசிரியராக கொண்டு நடத்திய ஊடகத்தின் உரிமையாளர். அன்றைய அரசியல் களத்தில் பல நற்பணிகள் பல செய்து வந்தார். இவரும் சுதேசிக்கப்பலில் பெரும் பணம் முதலீடு செய்து நம் சிதம்பரனாரை ஊக்கப்படுத்தியவர். முதன் முதலில் பார்த்த போதே அவர்கள் நிலை நெடு நாள் பிரிந்த காதலன் காதலி போல மிக உரிமையுடன் பழகலாயினர். அது அருகில் இருந்தவர்களுக்கு வியப்பை தந்தது. பாரதி தன்னை கம்பனாகவும், சிதம்பரானாரை சோழ மன்னனாகவுமே அறிவிக்கை செய்தார். வ.உ.சி பாரதியாரை நேரிலும் சரி தன் சுய சரிதையிலும் சரி தனது மாமனாராகவே சொல்லி வருகிறார். மாமா அவர்களை நான் சென்னையில் இறுதியாக சந்தித்தது அம்பத்தூரில் உள்ள தனது வாடகை வீட்டில் என்று அது குறித்தும் எழுதுகிறார். சந்தித்த நாள் முதலாக சிறை செல்லும் வரையிலும் மிக குறைவாக நேர் கொண்ட போதும், வெகு தொலைவில் இருந்தாலும் உள்ளத்தால், உணர்வால் ஒன்றுபட்டு இருந்தது இருவரின் எழுத்துக்களில் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசித்தனர் என்பது நன்கு விளக்கம் பெறும்.
நீரோட்டம் காணும் சுதேசிகளின் கப்பல் – 1906 ம் ஆண்டு : வாடகை கப்பல் வைத்து வெள்ளோட்டம் விட்ட தூத்துகுடி வாழ் வணிகர்கள் வெள்ளையன் நினைத்தது போல் கையை கடித்தது கண்டு, சொந்த முறையில் கப்பல் விட முடிவெடுத்தனர். வங்கக்கடல் அலையை விட, காலமும் அரசியலும் வேகமாக சுழல் கொண்டது. வள்ளல் பாண்டித்துரை அவர்களின் தனிப்பெரும் முதலீட்டில் அவரை கப்பல் நிறுவனத்தின் தலைவராக வைத்து, மேலும் உள்ள தொகைக்கு பங்கு ஒன்று ரூ=25/- வீதம் திரட்டி அதிக தொகையும் 100 பங்கும் கொடுப்பவர்கள் இயக்குனர்களாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. Thooththukudi – National Bank of India பணப்பொறுப்பையும், தூத்துக்குடி – H.A.R.Haji bKir Mohemad Seit & Sons என்ற உள்ளூர் நிறுவனத்தார் பொதுக்காரியதரிசிகளாகவும் நியமிக்கப்பட்டு, சுதேசி ஸ்ட்டீம் நாவிகேஷன் கம்பெனி 1882ம் ஆண்டு இந்திய கம்பெனி சட்ட விதிகளின் படி – 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் நாள் அதாவது 1905ம் ஆண்டு வங்கத்தை கூறு போட்ட அதே ஓராண்டு நிறைவு நாளில் தூத்துக்குடி கடற்கரை சாலை, எண்-4 என்ற இலக்கத்தில் பதிவு செய்துகொள்ளப்பட்டது. பதிவுத்தாளில் உள்ளபடி இன்றளவும் மக்கள் என்னத்திலும், வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது போல் ஜமீன்தார்கள், சர் பட்டமும், கூஜா தூக்குவதும் தான் தொழில் என்ற வழக்குரைக்கு மாறாக, நான்காம் தமிழ் சங்கம் கண்ட பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை அவர்கள் பெரும் முதலீடு செய்து, அதன் தலைமை பொறுப்பில் தலைவர் என்றே பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் பெயர் Swadeshi Stwam Navigation என்று பெயரிட்டு, இதன் முதல் நிலை நோக்கம் இந்திய வணிகம் செழிக்கவும் அயலார் தயவை முற்றிலும் களைவதும் என்ற அறிவிக்கை – இந்திய ஜமீன்தார் வரலாற்றில் முதலும் கடைசியும் ஆனதாகவே இருக்கும். இதன் பின்னர் சிதம்பரனார் தஞ்சை, திருச்சிராப்பள்ளி, சென்னை என பல இடங்களுக்கும் பங்கு முதல் திரட்ட பயணப்பட்டார். இந்தியா, சுதேசமித்திரன் போன்ற ஊடகங்களும் இது குறித்த பரப்புரை, நோக்கம், அது குறித்த கருத்து விளக்கப்படம் என பல வகையிலும் செய்தனர்.
சூரத் பயணமும் காங்கிரசு பிளவும் -1907 ம் ஆண்டு :
மிதவாத பிரிவு – மனு போடுதலும், வேண்டிய சலுகை பெறுதலும்.
தீவிர வாத பிரிவு – சுய ராஜ்யம் எனது பிறப்புரிமை.
சுதேசி இயக்கத்தின் மூலம் இந்திய தொழில் அமைப்பு கட்டமைத்தல், வெள்ளையனை வெளியேற்றல். இப்படியான காங்கிரசு என்ற, இரட்டை மனம் கொண்ட, மன நோயாளியை சமாளிக்கும் தந்திரத்தை வெள்ளையர் மாளிகையிலிருந்து மிதவாத நூல் கொண்டு ஆட்டி வைக்கும் பிரபுக்கள் சபையின் முன், துள்ளிக்குதித்து தீவிரம் பேசும் திலகர் தலைமையிலான காங்கிரசு என்பது, இளங்கன்று பயமறியாது என்பதாகவேயிருந்தது. சூரத் மாநாட்டில் ராஷ் பிஹாரி கோஷ் முன்னிலைப்படுத்தபடுவார் என்ற செய்தி உலா தந்தியில் வந்ததும், நம் பாரதியார் இங்கு திலகரை முன்னிலைப்படுத்த, கச்சை கட்ட ஆரம்பித்தார். அதற்காண அனைத்து செலவுகளும் மண்டயம் குடும்பத்தாரும், வ.உ.சி.யும் ஏற்க பாரதி தமிழக முன்னனி காங்கிரசு காரர்களை அழைத்துக்கொண்டு, வழி நடத்தி சூரத் சென்றனர். ஆனால் அங்கு நிலைமை வேறு. மாநாட்டில் மிதவாதிகள் தமிழகத்தில் இருந்தும் வங்கத்தில் இருந்தும்,, வந்திருந்த உணர்வலைகளை தெரிந்தே காவல்துறை அனுசரனையுடன் கூலிப்படை சகிதம் காத்திருந்தனர். அன்றே கூலிப்படை அமைத்து கட்சி கூட்டம் நடத்திய பெருமை காங்கிரசு கனவாங்களுக்கே உண்டு. மேடையில் திலகரை தாக்க, குண்டர்கள் களம் இறங்கினர்.(இறக்கப்பட்டனர் என்பதே உண்மை) அங்கு இருந்த நாற்காலிகளை தூக்கி திலகர் மீது வீச, பாரதி, வ.உ.சி,மற்றும் பலர் தங்கள் கைகளால் தாங்கி, அவரை காப்பாற்றினர். மாநாடு பிளவில் முடிந்து தீவிர வாத காங்கிரசு என்ற புதிய கட்சியாக வடிவெடுத்து, தென் மண்டல பொறுப்பாளராக வ.உ.சி யும் கிழக்கில் அரவிந்தரும், மராட்டியத்தில் திலகரும் செயல் படுவதாக முடிவெடுத்து சென்னை வந்தனர். இனி பாரிய அளவிலான செயல் பாடுகள் சிதம்பரனாருக்காக காத்திருக்க தூத்துக்குடி புறப்பட்டார்.

No comments:

Post a Comment