Pages

Tuesday 17 September 2013

தேனி (Theni)

தலைநகரம் :தேனி நகரம்
பரப்பு :2,889 ச.கி.மீ
மக்கள் தொகை :1,094,724
எழுத்தறிவு :702,595 (72.01%)
ஆண்கள் :553,118
பெண்கள் :541,606
மக்கள் நெருக்கம் :1 ச.கீ.மீ - க்கு 351



வரலாறு:

1996-இல் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இது மதுரை மாவட்டத் துடன் பலகாலம் இணைந்திருந்ததால், மதுரை மாவட்டத்தின் வரலாறு தேனி மாவட்டத் திற்கும் பொருந்தும் (காண்க : மதுரை மாவட்டம்)

எல்லைகள் : 

வடக்கில் திண்டுக்கல் மாவட்டத்தையும், கிழக்கில் மதுரை மாவட்டத்தையும், தெற்கில் கேரள மாநிலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தையும், மேற்கில் கேரள மாநிலத்தையும்
தேனிமாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது. 

ஒன்றியங்கள் : 

உசிலம்பட்டி, செல்லம்பட்டி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேனி, போடி நாயக்கனுர், சின்னமனுர், உத்தமப்பாளையம், கம்பம், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை.

நகரங்கள் :

கம்பம், சின்னமனுர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனுர்.

சுற்றுலாதலங்கள் :

இம்மாவட்டத்தில் வைகை அணையும், சுருளி நீர்வீழ்ச்சியும் சுற்றுலாத் தலங்களாகும்.

வைகை அணை :

மதுரையிலிருந்து 69 கி.மீ. தொலைவில், பெரியகுளம் வட்டத்தில் ஆண்டிப்பட்டிக்கு வடக்கே 6கி.மீ. தொலைவில் வைகை அணை கட்டப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி 9.4 சதுரை மைல்கள். இந்த அணை கி.பி 1955 இல் கமராசரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பெற்றது. அணையின் நீளம் 11,675 அடி. உயரம் 106அடி. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 68,000 கனஅடி. நீர் கிடைக்கும் பகுதியின் பரப்பு 870 சதுர மைல். வைகை அணையைக் கட்டிமுடிக்க 3.3 கோடி ரூபாய் செலவானது. வைகை அணையை அடுத்து ஓர் அழகிய பூங்கா இரண்டரை இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் வளமிக்க காலத்தில் இங்கு செயல்படும் கண்ணைக் கவரும் ஒளி அமைப்புகள் நெஞ்சை அள்ளும் அழகுச் சூழலை உருவாக்கு கின்றன. இதனால் வைகை அணை சிறந்த சுற்றுலா மையமாகவும் விளங்கி வருகிறது. 

சுருளி நீர்வீழ்ச்சி :

தேக்கடி செல்லும் சாலையில், கம்பத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுருளி நீர்வீழ்ச்சியில் 50 அடி கீழேயும் 20 அடியிலும் இரண்டும் தட்டுகளாய் நீர் கொட்டுகிறது. சிறிதும் வற்றாது ஆண்டு முழுவதும் நீர் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியும், அங்கு கட்டப்பட்டுள்ள அணையும் கண்களுக்கு விருந்தளிப்பதாய் கவினுற அமைந்துள்ளன. குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். 

முக்கிய ஊர்கள் :

உசிலம்பட்டி :

மதுரையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் போடிநாயக்கனுர் இரயில் பாதையில் உள்ளது. முக்குலத்தோர் செல்வாக்கு மிகுந்த இச்சிறு நகரம் சிறந்த வணிகத் தலமாகும். கோட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமும், ஒரு கல்லூரியும் அமைந்துள்ளன. சிறு தொழில்கள்
பெருகியுள்ளன. 

எழுமலை :

ஆண்டிப்பட்டி மலையடிவாரத்தில், திருமங்கலத்துக்கு வடக்கே 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திங்கள் கிழமைகளில் சந்தை கூடுகிறது. 

சாப்டூர் :

1895 இல் இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்தில் சேர்க்கப் பட்டு, தற்போது தேனி மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் கேரள மாநில எல்லை ஆரம்பிக்கிறது. உல்லாசப் பயணிகளுக்கு உவப்பான இடம். வேளாண்மையிலும் சிறந்துள்ளது. சாப்டூர் என்பது தெலுங்குச் சொல். இதற்கு ஊற்றின் மீது விரிக்கப்பட்ட பாய் என்று பொருளாகும். 

பெரியகுளம் நகரம் :

வராக நதிக்கரையில் அமைந்த இவ்வூரை, வடகரை என்றும் தென்கரை என்றும் அழைக்கின்றனர். கொடைக்கானல் மலையின் அடிவாரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் அரசினர் பழப்பண்ணை, கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, நகராண்மைக் கழகம், கோட்ட ஆட்சியர், வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியன உள்ளன. 

தேனி நகரம் :

இந்நகராட்சிக்கு தேனி-அல்லி நகரம் எனப் பெயர் வழங்குகிறது. அல்லி நகரத்தின் ஒரு பகுதியே தேனி. கம்பம் பள்ளத்தாக்கில் அழகுற அமைந்துள்ளது. பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டின் பெரிய சந்தை தேனிச் சந்தையாகும். குன்றுகளின் அடிவாரத்தில் இருப்பதால், ஆரோக்கியமான இயற்கைச் சூழல் இங்கு நிலவுகிறது. மதுரை - போடிநாயக்கனுர் இரயில் பாதையில் மிகப்பெரிய நகர் தேனி. இங்கிருந்து வைகை அணை. மஞ்சளாறு அணை. பெரியாறு நீர் மின் நிலையம். இங்கிருந்து வைகை அணை, மஞ்சளாறு அணை, பெரியாறு நீர் மின் நிலையம், சுருளி நீர்வீழ்ச்சி, கும்பங்கரை அருவி, கொடைக்கானல், குரங்கணி, சபரிமலை முதலிய சுற்றுலாத் தலங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. 

இந்நகரத்தில ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுச் சந்தையும், வியாழக்கிழமைகளில் ஊர்ச் சந்தையும் கூடுகின்றன. நுற்பு நெசவாலைகள், பருத்தி, நெல் அரவை ஆலைகள், எண்ணெய் ஆட்டும் ஆலைகள், கடலை உடைக்கும் ஆலைகள், சிமெண்டு தூண்கள் செய்யும் தொழிலகம், வங்கிகள், தரகு மண்டிகள், சுங்கத்துறை அலுவலகம் ஆகியன இந்நகரில் அமைந்துள்ளன. 

ஆண்டிப்பாடி :

பெரியகுளத்திலிருந்து 16கி.மீ. தொலைவிலும், மதுரை-போடிநாயக்கனுர் இரயில் பாதையிலும் அமைந்துள்ளது. பாண்டியர்களால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இங்குள்ளது. தமிழ்புத்தாண்டு இங்கு பெரியத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. நல்ல மருது மர ஊற்றுகளில் சிறந்த நீர் சுரக்கிறது. 

வேலப்பர் கோவில் :

இச்சிற்றுர் ஆண்டிப்பட்டிக்குத் தெற்கே சுமார் 10 கல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மலைச் சரிவில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பூசாரியாக மலைவாழ் சாதியினரான பளிஞர் ஒருவர் பணிபுரிகிறார்.

வருஷநாடு :

ஆண்டிப்பட்டி மலைத் தொடருக்கும் மேக மலைத் தொடருக்கும் இடையே அதற்கு வடக்காக உள்ள பள்ளத்தாக்குப் பகுதியே வருஷநாடு எனப்படுகிறது. பள்ளத்தாக்கின் உயர்ந்த பகுதி கோட்டைமலை. இம்மலையின் உயரம் 6,617 அடி. மூங்கிலாறு, சிற்றாறு, வைகை முதலியன இப்பள்ளத்தாக்கில் ஓடி வருகின்றன. வருஷநாடு என்றால் மழை மிகுந்த பகுதி என்று பொருள். இங்கு கந்தகம், மண்ணெண்ணெய் முதலியன கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. 

வீரபாண்டி :

முல்லையாற்றில் கரையில், தேனியிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது. கண்ணீசுரர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் ஊருக்கு பெருமை சேர்க்கின்றன.

போடிநாயக்கனுர் :

இந்நகரம் முப்புறமும் உயர்தோங்கிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து 90கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. 1916-இல் இங்கு நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. ஏலக்காய் விளைச்சலிலும், ஏலக்காய் வணிகத்திலும் இந்நகர் பெருமை பெற்றது. ஊத்தம்பாறை ஆறு, கூவலங்காறு, கொட்டக்குடி ஆறு, வலசை ஆறு, முத்துக்கோம்பையாறு என்றும் ஐந்து ஆறுகள் பாய்வதால் பஞ்சநதி என்றும் இவ்வூருக்குப் பெயர் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இலவம் பஞ்சு உற்பத்தியில் போடிநாயக்கனுர் முன்னணியில் உள்ளது. இவ்வூரில் ஏலக்காய் பயிரிடுவோர் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. தேவிகுளம் மலையில் விளையும் பொருட்களை இறக்குமதி செய்யவும், தேவையானப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இச்சங்கம் உதவுகிறது. சென்னைத் துறைமுகத்திற்கு தேயிலைப் பெட்டிகளை அனுப்புவதற்காகவே மதுரை -போடிநாயக்கனுர் இரயில்பாதை அமைக்கப்பட்டது. அக்காள் மலை, தங்கை மலை, மரக்கலராயர் மலை இம்மூன்றும் பெளர்ணமி நாளில் கண்கொள்ளாக் காட்சியாகக் இருக்கும். 

கம்பம் :

இது நகராண்மைக் கழக ஆட்சியில் உள்ளது. வேளாண்மையே பெரிய தொழிலாக விளங்குகிறது. இவ்வூரருகே குண்டலக் கண்மாய் ஆற்றின் குறுக்கே அணை கட்டப் பட்டுள்ளது. மலையடிவாரத்தில் லோயர்கேம்ப் என்ற ஊரில் பெரியாறு ஏரித்தண்ணீரைக் கொண்டு மின் உற்பத்தி நிலையம் அமைத்திருக்கிறார்கள். தேக்கடிக்கு அருகே, மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெட்டியிருக்கிறார்கள். பெரியாற்றின் நீர் மின்சார நிலையத்தில் புகுந்து அங்குள்ள மூன்று பெரிய மின்னுற்பத்தி இயந்திரங்களைச் சுழலச் செய்கிறது. பிறகு இந்த நீர் வைகை அணையில் போய் விழுகிறது. 

கம்பத்திலிருந்து குமிளி என்னுமிடம் 6கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊருக்குச் செல்லும் மலை வழியில் இருபுறமும் இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழலாம். வண்ணத் துப்பட்டிகள் கம்பத்தில் தயாரிக்கப்ட்டு தமிழகத்தின் பல பகுதி களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வூர்க் கோவில்களுள் கம்பராகவப் பெருமாள் கோயில் குறிப்பிடத்தக்கது. கம்பத்தில் முஸ்லீம்கள் குறிப்பிட்டத் தொகை யினராக உள்ளனர். ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்ட வாவேர் பள்ளிவாசலும், இராஜபாளையத்தார் கட்டிய மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலும் இங்குள்ளன. இங்கு அரபு பள்ளி ஒன்றும் நடைபெறுகிறது. 

சின்னமனுர் :

இவ்வூர் மூன்றாம் நிலை நகராண்மைக் கழகமாக விளங்குகிறது. பெரிய குளத்திலிருந்து 35கி.மீ. தொலைவில் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு பேருந்துப் போக்குவரத்து மிகுதி. அருகிலுள்ள இரயில் நிலையம் தேனி. சின்னமனுரில் நெல்வயல் கள், தென்னந்தோப்புகள் செழித்துள்ளன. எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. தேயிலை முதலிய தோட்டப் பொருள்கள் மிகுதியாக வெளியூர்களுக்கு அனுப்பப் படுகின்றன. முதல் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட கன்னிகா பரமேசுவரி கோவில் உள்ளது. 9,10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பூலா நந்தீசுவரர் கோவிலும் இருக்கிறது. வரலாற்று அறிஞர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடும் சின்னமனுர் செப்பேடுகள் இந்நகரில் கிடைத்தவையே. இவற்றிலிருந்து அரிகேசன் முதல் இரண்டாம் நரசிம்மன் வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களைப் பற்றி அறிய முடிந்தது. 

வைவேவீஸ் நகரியம் : 

1964 ஆம் ஆண்டு இந்நகரியம் அமைக்கப்பட்டது. உத்தமப்பாளையம் வட்டத்தில் 5100 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் அமைந்து இயற்கை வளமும், சுருளியாறு அணைக் கட்டுப் பகுதியும் உடையது. இதன் மொத்தப்பரப்பு 10,000 ஏக்கர். 1947ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்தனர். தோட்டப் பணியாளர்களுக்காக 1400 வீடுகள் கட்டப்பட்டன. மிகப்பெரிய தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டும், ஒரு பணிமனையும் உள்ளன. மொத்தம் இங்குள்ள ஆறு தோட்டங்களும் தி மதராஸ் டீ எஸ்டேட் (பி) லிட் என்னும் கம்பெனிக்குச் சொந்தமானது. இங்கு மாரிக்காலத்தில் மழைக்கும், பனிக்காலத்தில் பனிக்கும் குறைவில்லை. சுமார் 7000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். மருத்துவமனை, பால்பண்ணை, கால்நடை மருந்தகம், தங்கும் விடுதி, சினிமா தியேட்டர் முதலியனவும் உள்ளன. 

உத்தமப்பாளையம் :

இது கம்பம் பள்ளத்தாக்கில் உள்ளது. மக்கள் தொகையில் சரிபாதி முஸ்லீம்கள். முல்லை யாற்றின் பெருவளத்தால் எங்கும் பசுமை நிறைந்து காணப்படுகிறது. சற்றுத் தொலை வில் சுருளி அருவி உள்ளது. மதுரைச் சீமையில் ஏற்பட்ட முதல் பாளையமாகையால் இந்த ஊரினர் இதைப் பாளையம் என்றே சுருக்கி அழைப்பர். சர்.பி.டி. ராசன், கருத்த மீரா ராவுத்தர், ஹாஜி முகமது மீரான், வள்ளல் மக்கா ராவுத்தர், வள்ளல் மீர் முகமது ராவுத்தர் அனைவரும் இவ்வூரினரே. கருத்தராவுத்தர் நிறுவிய கல்லூரி ஒன்று இங் குள்ளது. 

தேவாரம் :

உத்தமபாளையத்துக்கு வடமேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலக்காய் இங்கு நிறைய விளைகிறது. ஆனி தொடங்கி தீபாவளி வரை நல்ல சாரல் உள்ளதால், இங்கு
வாழ்வது இனியதாய் இருக்கிறது. 

கோம்பை :

உத்தமப்பாளையத்திற்கு வடமேற்கே 6கி.மீ. தொலைவில், மலையடி வாரத்தில் இயற்கை எழில் சூழ இவ்வூர் விளங்குகிறது. நன்செய், புன்செய் பயிர்கள் தவிர ஏலக்காய் வேளாண்மையும் மிகுதி. மலையடி வாரத்தில் அரங்கநாதர் கோவிலும், ஊருக்குள் திருமலைராயப் பெருமான் கோவிலும் உள்ளன. வைகாசி விசாகத் திருவிழா பெரிய விழாவாக நடைபெறுகிறது. இப்பகுதியில் கோம்பை நாய் என்னும் ஒரு வகை நாய் இனம் புகழ் பெற்று விளங்கியது. 

கூடலூர் :

இது ஒரு பேரூராட்சி. பெரியாற்றிலிருந்து கூடலூருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. காப்பிலிக் கவுண்டர், குறும்பக் கவுண்டர், மூணுவளைவிக் கவூண்டர், அலுப்பக் கவுண்டர் எனப்படும் கவுண்டர்கள் வாழுகின்றனர். கேப்பை, சாமை, காணம் வேளாண்மை நடைபெறுகிறது. இது திண்டுக்கல் சீமையிலும், திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியிலும் இருந்துள்ளது. கூடலழகள் என்ற இறைவனின் திருப்பெயரே கூடலூரானது.

சுருளிப்பட்டி :

கம்பத்திலிருந்து 10கி.மீ. தொலைவிலுள்ள இப்பகுதிக் காடுகளில் தேக்குமரம் நிறைய விளைகிறது. சுருளிமலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் நீர்வீழ்ச்சியும் உள்ளன. சுருளிமலை ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்த மலையாகும். 

காமயக்கவுண்டன்பட்டி :

கம்பத்திலிருந்து 4கி.மீ. தொலைவிலும், சுருளிமலையிலிருந்து 10கி.மீ. தொலைவிலும் உள்ளது. பெரியாற்றுப் பாசனத்தால் இவ்வூர் வளம் பெறுகிறது. தமிழ்நாட்டில் திராட்சைப்பழச் சாகுபடிக்குப் பெயர் பெற்றது. இந்த ஊர் நிலத்து மண் செக்கச் சிவந்து இருக்கும். கடலை இம்மண்ணில் செழிப்பாக விளைகிறது. புளியும், தென்னையும், மாவும், பாலாவும் இங்கு செழித்து வளர்கின்றன. காமயக்கவுண்டன்பட்டி, மதுரை மாநகரின் அமைப்பைக் கொண்டுத் திகழ்கிறது. தேரோடும் அகன்றத் தெருக்கள் உள்ளன. அருகிலுள்ள வண்ணாத்திப்பாறை என்னும் ஊரில் சந்தன மரங்கள் மிகுதி.

No comments:

Post a Comment